You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆன்லைன் வகுப்புகள்: சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஸ்மார்ட் ஃபோன் வாங்கிய தந்தை
சில இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - மகளின் கல்விக்காக சிறையில் சம்பாதித்த பணம்
கொலைக் குற்றத்திற்காக தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, அங்கு சம்பாதித்த பணத்தை வைத்து தனது மகள் ஆன்லைன் வகுப்பை ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்வதற்காக ஸ்மார்ட் ஃபோன் ஒன்றை வாங்கித் தந்துள்ளார் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் அருகே உள்ள ஆம்தாரா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் நாகேஷியா என்பவர் குடும்பப் பிரச்சனை ஒன்றின் காரணமாக 2005ஆம் ஆண்டு தனது மாமா ஒருவரைக் கொலை செய்துவிட்டார்.
தற்போது 40 வயதாகும் அவர் 15 ஆண்டுகள் 5 மாதங்கள் சிறை தண்டனை கழித்த பின்பு சமீபத்தில் விடுதலையானார். நன்னடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடியும் முன்பே அவர் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
சிறையிலிருந்து விடுதலையான அவருக்கு வீட்டிலிருந்து நிலமை உவப்பானதாக இல்லை.
தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகள் யாமினி, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புகளில் பாடம் படிக்க செல்பேசி எதுவும் இல்லாமல் இருப்பது குறித்து அவர் அறிந்தார்.
"படிப்பதற்காக என் மகளிடம் செல்பேசி இல்லை என்பதே எனக்கு வருத்தமாக இருந்தது. அவள் படித்து மருத்துவராக விரும்புகிறாள். சிறையிலிருந்தபோது கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரிந்தது," என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி - விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்
விண்வெளி ஆராய்ச்சிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பங்கேற்கும் விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகரணங்களை வழங்குவது குறித்து இந்தியாவும், பிரான்ஸும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன என் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது .
வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சிக்கு மூன்று இந்தியா்களை அனுப்புவதற்காக, ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தொடங்கியுள்ளது. இந்த திட்டத்துக்காக, பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானிகளைக் கொண்டு குழுவை உருவாக்கி, அவா்களுடன் இந்திய விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இதுகுறித்து பிரான்ஸின் விண்வெளி ஆய்வு மையமான 'நேஷனல் சென்டா் ஃபாா் ஸ்பேஸ் ஸ்டடீஸ் (சிஎன்இஎஸ்) நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ககன்யான் திட்ட விஞ்ஞானிகளுக்குத் தேவையான உபகணங்கள் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக, இந்தியா, பிரான்ஸ் இடையேயான பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது.
அடுத்த ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் பிரான்ஸ் விஞ்ஞானி தாமஸ் பெஸ்குட்டுக்கும் இதபோன்ற உபகரணங்கள் அளிக்கப்படும் என்றாா் என்கிறது அந்த செய்தி.
இந்து தமிழ் திசை - ஜல்லிக்கட்டு காளைக்கு இறுதிச் சடங்கு
ராசிபுரம் அருகே உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு மனிதர்களைப் போல் அதன் உரிமையாளர் சடங்குகள் செய்து அடக்கம் செய்தார் என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
ராசிபுரம் வி.நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மணி. ஜல்லிக்கட்டுக் போட்டியில் ஆர்வம் கொண்ட மணி, தனது வீட்டில் கடந்த 5 ஆண்டுகளாக ஐல்லிகட்டுக் காளை ஒன்றை வளர்த்து வந்தார். காளையை ஜல்லிக்கட்டு விழாக்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். காளையும் ஏராளமான பரிசுகளை வென்று கொடுத்துள்ளது.
இதனால், காளையை தனது சொந்த பிள்ளை போல் மணி வளர்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட காளை நேற்று காலை இறந்தது. இதில் அதிர்ச்சியடைந்த மணி, மனிதர்களுக்கு செய்யும் சடங்கைப் போல் காளைக்கு தேங்காய், பழம், வைத்து மாலை அணிவித்து விளக்கேற்றி அனைத்து சடங்குகளையும் செய்தார்.
இதில் அப்பகுதி மக்களும் கலந்து கொண்டு காளையை வணங்கிச் சென்றனர் என்கிறது அந்தச் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: