ஷாஜகானின் மகள் ஜஹான் ஆரா: உலகின் பணக்கார இளவரசி ஆன கதை

    • எழுதியவர், மிர்சா ஏ.பி. பேக்
    • பதவி, பிபிசி உருது சேவை

பல வருட பயணத்திற்குப் பிறகு, முகலாய இளவரசி ஜஹான் ஆரா மற்றும் அவரது குடும்பத்தினரின் தலையெழுத்து மாறியது. அவரது தந்தை பேரரசர் ஆனார்.

இது இளவரசர் குர்ரமிற்கு மகுடம் சூட்டும் நாள் . அரண்மனையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறுகின்றன.

"நாங்கள் அனைவரும் புதிய ஆடைகளை அணிந்தோம். நான் பட்டு மேலாடையும், வெள்ளி வேலைப்பாடுகளுடன் கூடிய அடர் நீல பைஜாமாவையும் அணிந்திருந்தேன். வெள்ளி வேலைப்பாடுகள் கொண்ட ,அழகான துப்பட்டாவும் என் தோளில் கிடந்தது. ரோஷன் ஆராவும் அதே வடிவமைப்பில் உடை அணிந்திருந்தார். ஒரே வித்தியாசம், அவருடைய ஆடை பிரகாசமான மஞ்சள் மற்றும் தங்க நிறத்தில் இருந்தது. சதி அல்-நிசா பேகம் , ஊதா நிற உடை மற்றும் தங்க நிற முக்காடு ஆகியவற்றில் அற்புதமாகத் தெரிந்தார்," என்று ஜஹான்ஆரா தனது நாட்குறிப்பில் அந்த நாளைப் பற்றி எழுதியுள்ளார்.

"தாரா, ஷுஜா, ஒளரங்கசீப் மற்றும் முராத் ஆகியோர் லாலா பைஜாமாக்களுடன் தங்க லைனிங் ஜாக்கெட்டுகளை அணிந்துள்ளனர் மற்றும் வெவ்வேறு வண்ண இடுப்புப்பட்டைகளை அணிந்திருந்தனர்."

"சதி அல்-நிசா , நகைப் பெட்டிகளைத் திறந்து எனக்கும், ரோஷன் ஆராவுக்கும் கழுத்தணிகள், வளையல்கள், காதணிகள் மற்றும் கொலுசுகள் ஆகியவற்றைக் கொடுத்தார். சிறுவர்களுக்கு, முத்து நெக்லஸ், வங்கி, மற்றும் மோதிரங்கள் வழங்கப்பட்டன."

"அம்மா மணிக்கணக்காக தயாராகி கொண்டிருந்தார். நாங்கள் அவளைப் பார்த்தபோது, பிரமித்துப்போனோம். இதை விட கம்பீரமாக, அழகாக அவர் எப்போதுமே இருந்ததில்லை. "

"முகலாய சாம்ராஜ்யத்தின் அனைத்து முக்கிய பிரமுகர்களும் திவான்-இ-ஆமில் இருக்கிறார்கள். பெண்களுக்கு திரை போடப்பட்டது. நாங்கள் திரைக்கு அருகில் அரசவை நான்றாக தெரியும்படி அமர்ந்தோம். நான் தெரிந்தவர்களை அடையாளம் காண முயற்சித்தேன். நானா ஆசிப் கான் , தோளில் தங்க மேலாடை மற்றும் சிவப்பு சால்வை அணிந்திருந்தார். அப்துல் ரஹீம் கான் கானா , மேவாரின் இளவரசர் அர்ஜுன் சிங்குடன் உரையாடலில் மும்முரமாக இருந்தார். மஹாபத் கான் தனது வெள்ளை மீசையில் வித்தியாசமாக இருந்தார். "

"பின்னர் நான் மத்தள சத்தத்தைக் கேட்டேன். என் தந்தை இப்போது வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடைய பெயர் பல பட்டப்பெயர்களுடன் சேர்த்து சொல்லப்பட்டது, அதைக்கேட்ட ரோஷன் ஆரா , நமது தந்தைக்கு இத்தனை பட்டப்பெயர்கள் இருப்பது எனக்கு தெரியவே தெரியாதே என்றாள். "நான் கிசுகிசுத்தேன், " அவரால் இதை நினைவில் கொள்ள முடியும் என்று நீ நினைக்கிறாயா? "

மிகச்சிறந்த நகைகள்

ஜஹான் ஆரா மேலும் எழுதுகிறார், "தந்தை முகலாய சாம்ராஜ்யத்தின் மிகச்சிறந்த நகைகளை அணிந்திருந்தார். அவரது ஆடை, பட்டால் செய்யப்பட்டிருந்தது. அதில், முத்து மற்றும் வெள்ளி நூல் இழைகளால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. வைரங்கள் பதித்த தலைப்பாகையில் இரண்டு இறகுகள் இருந்தது. கழுத்தில், ஆறு சரங்கள் கொண்ட முத்து மாலை. இந்த முத்துக்கள், புறா முட்டைகளுக்கு இணையாக இருந்தது. கையில் அவர் வங்கி, கவசங்கள் மற்றும் விரல்களில் மோதிரங்களை அணிந்திருந்தார்.

முடிசூட்டு விழா மிகவும் எளிமையாக இருந்தது என்று அவர் எழுதுகிறார். ஷாஹி இமாம் அவருக்கு உபதேசம் செய்து, அவரை வாழ்த்தினார். பின்னர், ஒன்றன் பின் ஒன்றாக, அனைத்து தலைவர்களும், அவர்களுடைய அந்தஸ்துக்கு ஏற்ப முன்னேவந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

"தங்க முத்திரைகள், நகைகளின் பெட்டிகள், அரிய மற்றும் விலைமதிப்பற்ற வைரங்கள், முத்துக்கள், சீனாவிலிருந்து விலைமதிப்பற்ற பட்டுத் துணிகள், ஐரோப்பிய வாசனை திரவியங்கள் மற்றும் பலவிதமான ஆபரணங்கள் அங்கே இருந்தன. ஏனெனில் தந்தைக்கு (பேரரசர் ஷாஜகான்) நகைகள் பிடிக்கும் என்று பிரமுகர்களுக்கு தெரியும்."

14 வயதில் ஆண்டிற்கு ஆறு லட்சம் கொடைத்தொகை

"தந்தை ஒரு பேரரசராக முதல் அறிவிப்பை வெளியிட்டார். தாயின் (ஷாஜகானின் மனைவி) பட்டப்பெயர் இன்று முதல் 'மும்தாஜ் மஹல்' என்றும், அவருக்கு ஆண்டுக்கு ரூ .10 லட்சம் கொடை வழங்கப்படும் என்றும் அவர் அங்கு இருந்தவர்களிடம் கூறினார். பேகம் நூர் ஜஹானுக்கு ஆண்டிற்கு, இரண்டு லட்சம் ரூபாய் கொடை வழங்கப்படும். நானா ஆசிப் கான் இப்போது தந்தையின் பிரதமராகிவிட்டார். அவருக்கு , அரச உடை வழங்கப்பட்டது. மகாபத் கானுக்கு , அஜ்மீரின் பொறுப்பு வழங்கப்பட்டது. அர்ஜுன் சிங்குக்கு தங்க முத்திரைகள், நகைகள் மற்றும் குதிரைகள் வழங்கப்பட்டன. "

ஆரா குறிப்பிடாத விஷயம் அவரது சொந்த கொடை தொகை. அந்த நாளில் அது அறிவிக்கப்படவில்லை, ஏனென்றால் முடிசூட்டு விழாவுடன், ஒரு மாத கொண்டாட்டமும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரது தந்தையும் பேரரசருமான ஷாஜகான், அவருக்கு ஆண்டுக்கு ஆறு லட்சம் ரூபாய் கொடையை நிர்ணயித்திருந்தார். இந்த வழியில், அவர் முகலாய சகாப்தத்தின் பணக்கார இளவரசி ஆனார். அப்போது அவருக்கு 14 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முகலாய ஆட்சியின் போது குல்பதன் பேகம், நூர் ஜஹான், மும்தாஜ் மஹால், ஜஹான் ஆரா, ரோஷன் ஆரா, ஜெபுன்னிசா உள்ளிட்ட சில பெண்களின் பெயர்களே வெளியே வந்துள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள்,

அவர்களில் இருவர், நூர் ஜஹான் மற்றும் மும்தாஜ் மஹால் அரசிகளாக இருந்தனர், மீதமுள்ளோர் ஆராவுக்கு சமமாக வர இயலவில்லை. ஏனெனில் ரோஷன் ஆரா , பேகம் சாஹிபா அல்லது பாட்ஷா பேகமாக ஆகவில்லை.

ஆராவின் தாயார் இறந்தபோது, அந்த நேரத்தில் அவருக்கு வயது 17 தான். அன்றிலிருந்து அவரது தோள்களில் முகலாயப் பேரரசின் அரண்மனையின் பொறுப்பு ஏறிவிட்டது. பேரரசர் ஷாஜகான் தனது மனைவியின் மரணத்தால் மிகவும் வருத்தப்பட்டார், அவர் தனிமையில் வாழத் தொடங்கினார்.

மும்தாஜ் மல் இறந்த பிறகு, சக்கரவர்த்தி துக்ககரமான கறுப்பு நிற ஆடை அணிந்திருந்தார், ஆனால் வேறு சில வரலாற்றாசிரியர்கள் அவர் மிகவும் எளிமையாகவும், வெள்ளை உடைகள் மட்டுமே அணிந்தார் என்றும் கூறுகின்றனர். இருப்பினும், மனைவி இறந்த பிறகு, அவரது தாடி முடியும் வெண்மையாக மாறியது என்று மெமபூப்-உர்-ரெஹ்மான் கலீம் தனது 'ஜஹான் ஆரா' நூலில் எழுதியுள்ளார்.

ஷாஜகான், அரண்மனையின் விவகாரங்களை தனது இன்னொரு அரசியிடம் ஒப்படைப்பதற்கு பதிலாக, தனது மகள் ஜஹான் ஆராவை ஒரு பாட்ஷா பேகம் ஆக்கி, வருடாந்திர கொடைத்தொகையை நான்கு லட்சம் ரூபாய் அதிகரித்தார். இதனால் அவரது வருடாந்திர உதவித்தொகை, பத்து லட்சமாக அதிகரித்தது.

டெல்லியின் ஜாமியா மில்லியாவில் உள்ள வரலாறு மற்றும் கலாச்சாரத் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் ரோஹ்மா ஜாவேத் ரஷீத் பிபிசியுடன் பேசியபோது, முகலாய காலத்தின் இரண்டு முக்கியமான பெண்கள் நூர் ஜஹான் மற்றும் ஜஹான் ஆரா பேகம் என்று கூறினார்.

அவர் மல்லிகா-இ-இந்துஸ்தான் அல்ல, ஆனால் அவரது தாயார் மும்தாஜ் பேகம் இறந்ததிலிருந்து, அவர் தனது வாழ்நாள் முழுவதும் முகலாய சாம்ராஜ்யத்தின் மிக சக்திவாய்ந்த பெண்மணியாக இருந்தார் . அவரது தாயார் இறந்த பிறகு, அவருக்கு பாட்ஷா பேகம் என்ற பட்டம் வழங்கப்பட்டது, மேலும் அரண்மனையின் முழுப் பொறுப்பும் இந்த 17 வயது மகள் மீது விழுந்தது.

உலகின் செல்வந்த பெண்மணி

"ஜஹான் ஆரா இந்தியாவின் பணக்கார பெண் மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த செல்வந்த பெண் அவர்தான். அவளுடைய தந்தை இந்தியாவின் செல்வந்த பேரரசர். அவருடைய ஆட்சிக்காலம், இந்தியாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது".என்று அவர் சொல்கிறார்.

பிரபல வரலாற்றாசிரியரும், "தி டாட்டர்7 ஆஃப் தி சன்" புத்தகத்த்தை எழுதியவருமான எரா மகேதி இவ்வாறு கூறுகிறார்: "மேற்கத்திய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவுக்கு வந்தபோது, முகலாயப் பெண்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்கள் என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அந்த நேரத்தில் , பிரிட்டிஷ் பெண்களுக்கு அத்தகைய உரிமைகள் இல்லை. பெண்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள் என்ன வர்த்தகம் செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அறிவுறுத்துகிறார்கள்.

ஆராவின் செல்வத்தை , அவரிடம் இருந்த பல சொத்துக்களில் இருந்து கணக்கிட முடியும், அவரது தந்தைக்கு முடிசூட்டப்பட்ட நாளில், அவருக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்களும், நான்கு லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் ஆறு லட்சம் ரூபாய் ஆண்டு கொடைத்தொகையும் அறிவிக்கப்பட்டது.

அவரது தாயார் இறந்த பிறகு, அவரது சொத்தில் பாதி ஜஹான் ஆராவுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள பாதி மற்ற குழந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டது.

அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழக வரலாற்று இணை பேராசிரியர் டாக்டர் எம். வாசிம் ராஜா , ஆராவின் செல்வத்தை இவ்வாறு விவரிக்கிறார்: "அவர் ஒரு பாட்ஷா பேகம் ஆக்கப்பட்டபோது, அன்று அவருக்கு ஒரு லட்சம் தங்க நாணயங்கள், நான்கு லட்சம் ரூபாய் மற்றும் ஆண்டுக்கு நான்கு லட்சம் ரூபாய் உயர்த்தி வழங்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்ட தோட்டங்களில் பாக் ஆரா, பாக் நூர் மற்றும் பாக் சஃபா முக்கியமானவை. அவரது பொறுப்பில், அச்சால், ஃபர்ஜாரா மற்றும் பாச்சோல், சஃபாபூர், தோஹாரா ஆகிய அரசுகளும், பானிபத்தின் நிர்வாகப்பிரிவும், வழங்கப்பட்டன. அவருக்கு சூரத் நகரமும் வழங்கப்பட்டது. அங்கிருந்து அவருடைய கப்பல்கள் பயணம் செய்தன. ஆங்கிலேயர்களுடன் அவர் வர்த்தகமும் செய்தார் ."

1913 ஏப்ரல் 12 ஆம் தேதி, பஞ்சாப் வரலாற்று சங்கத்தின் முன்னிலையில் படிக்கப்பட்ட கட்டுரையில், "இந்த ஆண்டு நவ்ரோஸின் சந்தர்ப்பத்தில், ஆராவுக்கு 20 லட்சம் மதிப்புள்ள ஆபரணங்கள் மற்றும் நகைகள் பரிசாக வழங்கப்பட்டன" என்று ஹைதராபாத் நிஜாமின் அரசில் தொல்பொருள் இயக்குநராக இருந்த, ஜி.யஸ்தானி குறிப்பிடுகிறார்.

'பேரரசரின் பிறந்த நாள் மற்றும் நவ்ரோஸ் (புத்தாண்டு) போன்ற சபைகளின் விழாக்களுக்கு ஆராவும் பொறுப்பேற்றிருந்தார். அவர் தலைமை பராமரிப்பாளராக இருந்தார். ஈத்-இ- குலாபி, வசந்த காலத்தில் கொண்டாடப்பட்டது. இந்த சந்தர்பத்தில், இளவரசர்கள் மற்றும் அதிகாரிகள் நேர்த்தியான நகைகளைக் கொண்ட ஒரு குடத்தில் பேரரசருக்கு அர்க் -இ-குலாபை வழங்கினர். ஏதால் ஷாபோ ரோஸ் (அதாவது பகலும் இரவும் சமமாக இருக்கும்போது) வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 1637 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஆரா, பேரரசருக்கு 2.5 லட்சம் மதிப்புள்ள எண்கோண சிம்மாசனத்தை வழங்கினார். "என்று அவர் மேலும் எழுதியுள்ளார்.

இவற்றிலிருந்து, அவரிடம் எத்தனை செல்வம் இருந்திருக்கும் என்று கணக்கிட முடியும்.

தீயால் எரிந்த அந்த சம்பவம்

ஜஹான் ஆராவுக்கு தீவிபத்து நேரிட்டு, சுமார் எட்டு மாதங்கள் படுக்கையில் இருக்க நேரிட்டது. அதன் பிறகு அவர் குணமடைந்தபோது, அரசர் மகிழ்ச்சியுடன் கருவூலத்தை திறந்துவிட்டார்.

1644 ஏப்ரல் 6 ஆம் தேதி அவருக்கு தீ விபத்து ஏற்பட்டபோது, அவர் குணமடையும் பொருட்டு, ஒரு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏழைகளுக்கு தினமும் பணம் விநியோகிக்கப்பட்டது. ஏராளமான கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஆராய்ச்சியாளர் ஜியா-உத்-தின் அகமது தனது 'ஜஹான் அரா' புத்தகத்தில், முகமது சலேவை மேற்கோள் காட்டி, "சக்கரவர்த்தி 15,000 தங்க நாணயங்களை, மூன்று நாட்களில் ஏழைகளுக்கு வழங்கினார். ஆராவின் தலையணையின் கீழ் இரவில் ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டு, காலையில் அது ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டது. மோசடிகளுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூத்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர் மற்றும் அவர்களின் 7 லட்சம் ரூபாய் வரை கடன்கள் . ரத்து செய்யப்பட்டன. "

ஜி. யஸ்தானி எழுதுகிறார், "ஜஹான் ஆரா உடல்நலம் தேறியபோது, எட்டு நாட்கள் கொண்டாட்டம் நடந்தது. அவருடைய எடைக்கு எடை தங்கம், ஏழைகளிடையே அளிக்கப்பட்டது. முதல் நாள், ஷாஜகான் , இளரவரசிக்கு, 130 முத்துகள் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வளையல்களை பரிசாக வழங்கினார். இரண்டாவது நாளில், ஒரு தலைப்பாகை வழங்கப்பட்டது. அதில் வைரங்கள் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. சூரத் துறைமுகமும் இந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாயாகும் "

ஜஹான் ஆராவுக்கு மட்டுமல்ல, அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கும், பெருமளவு பொருட்கள் மற்றும் செல்வங்கள் அளிக்கப்பட்டதாக ஜி. யஸ்தானி எழுதியுள்ளார்.

"ஹக்கீம் முகமது தாவூத், இரண்டாயிரம் வீரர்கள், 200 குதிரைகளுக்கு தலைவராக்கப்பட்டார். அரச ஆடைகள் மற்றும் யானைகளை தவிர தங்க சேணம் பூட்டிய குதிரை, 500 தோலா எடையுள்ள தங்க முத்திரைகள், அதே எடையை கொண்ட, அந்த சந்தர்ப்பத்திற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட. நாணயங்களும் வழங்கப்பட்டது. அடிமை ஆரிஃபுக்கு அவரது எடைக்கு சமமான தங்கம் மற்றும் உடை, குதிரை, யானை மற்றும் ஏழாயிரம் ரூபாய் வழங்கப்பட்டது," என்கிறார் அவர்.

அவரது செல்வத்தைப் பற்றி குறிப்பிடுகையில், மெஹபூப்-உர்-ரஹ்மான் கலீம் எழுதுகிறார், "ஷாஜகான் தனது அன்பு மகளுக்கு மிகப் பெரிய நிர்வாகப்பகுதிகளை வழங்கினார். தவிர, சிறிய விழாக்களில் ஜஹான் ஆரா பெறும் பரிசுகளுக்கு வரம்பு இல்லை. ஆரா பேகமுக்கு வழங்கப்பட்ட பகுதிகள் மிகவும் வளமானவை. மிகவும் வளமான சூரத் மாகாணம் , ஷாஜஹானால் அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அதன் ஆண்டு வருமானம் ஏழரை லட்சம் ரூபாயாக இருந்தது. அதனுடன் அவருக்கு சூரத் துறைமுகமும் வழங்கப்பட்டது. அங்கு எல்லா நாடுகளிலிருந்தும் வணிகர்கள் எப்போதும் வருவார்கள். இதன் காரணமாக ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் வரி வந்து கொண்டிருந்தது. இது தவிர, அசாம்கர், அம்பாலா போன்ற வளமான இடங்களும் கொடுக்கப்பட்டிருந்தன. "

ஆனால் ஜஹான் ஆரா தன்னை ஃபகீர் (ஒன்றுமற்றவள்) என்று அழைத்துக் கொண்டார். அவர் வாழ்க்கையில் எளிமையை கடைபிடித்தார். திரை போடும் வழக்கத்தில் கவனமாக இருந்தார். எனவே, பல வரலாற்றாசிரியர்களை மேற்கோள் காட்டி, டாக்டர் ரோஹ்மா கூறுகையில், அவர் தீயில் சிக்கிய நாள், நவ்ரோஸின் கொண்டாட்டத்தின் இரவு . (சிலர் அதை அவரது பிறந்த நாள் என்று அழைத்தனர்) தீ பிடித்தபோது, அவர் குரல் கொடுக்கவில்லை, ஏனென்றால், அவரை காப்பாற்ற எந்த ஆணும் வரக்கூடாது என்பதே இதற்கு காரணம். பின்னர் அவர் பெண்கள் இருக்கும் பகுதிக்கு ஓடி மயக்கமடைந்தார் என்று கூறியுள்ளார்.

தீயை அணைப்பதில் இரண்டு பணிப்பெண்களும் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் இறந்துவிட்டார். ஆராவிற்கு ஏற்பட்ட இந்த தீவிபத்து காரணமாக, அரண்மனையில் இருள் சூழ்ந்தது.

அரண்மனையின் உலகம், பெண்களின் உலகம்

ஆராவின் நாட்குறிப்பு அவருக்கு ஒரு மூத்த மாறாந்தாய் சகோதரி இருந்தார் என்பதைக் காட்டுகிறது. ஆனால் மற்ற எல்லா குழந்தைகளும் ஷாஜகானுக்கும், மும்தாஜ் மஹாலுக்கும் பிறந்தவர்கள்.

அரண்மனையைப் பற்றி ஆரா குறிப்பிடுகையில், "அரண்மனையின் உள்ளே பெண்களின் உலகம் இருக்கிறது. இங்குள்ள இளவரசிகள், அரசிகள், அடிமைகள், பணிப்பெண்கள்,சமையல் செய்வோர், துணி துவைப்போர், பாடகிகள், நாட்டியக்காரிகள், ஓவியம் வரைவோர் ஆகியோரின் நிலைமை குறித்து, அரசருக்கு தான் அவ்வப்போது தெரியப்படுத்துவேன் " என்று குறிப்பிடுகிறார்.

சில பெண்கள் திருமணத்தால் அரச குடும்பத்திலிருந்து வந்திருக்கிறார்கள். சிலர் அரசர்களின் விருப்பப்படி அந்தப்புரத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சிலர் இந்த நான்கு சுவர்களுக்குள் பிறந்திருக்கிறார்கள். நீங்கள் ஒரு முறை அரண்மனைக்குள் நுழைந்துவிட்டால், உங்கள் முகத்தை யாரும் பார்க்க முடியாது என்று சில பெண்கள் கூறுகிறார்கள். "நீங்கள் ஒரு ஜீனியைப் போல மறைந்துவிடுவீர்கள், சில நாட்களுக்குப் பிறகு உங்கள் குடும்பம் உங்கள் முகத்தையே மறந்து விடுகிறது. "என்கிறார்கள் இந்தப்பெண்கள்.

ஆனால் ஆராவின் வடிவத்தையும் தன்மையையும் முகலாய வரலாற்றில் மறக்க முடியாதது மற்றும் அவரது அழகு பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம், நூர் ஜஹான் மற்றும் அவரது தாயின் அழகை ஒப்பிட்டுப் பார்த்தால், நூர் ஜஹான் தனது உயரம் மற்றும் முகத்தின் நீளம் காரணமாக தாயை விட மிகவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் தோற்றமளித்ததாக ஆரா எழுதுகிறார். ஆனால் தனது தாயும் மிகவும் அழகாக இருந்ததாகவும், எல்லோரும் விரும்பும் ஒரு பூவைப் போல மலர்ந்திருந்ததாகவும் அவர் கூறுகிறார்.

பேகம் சாஹிபாவின் அழகைப் பற்றி மெஹபூப்-உர்-ரஹ்மான் கலீம் எழுதுகிறார்: "முகலாய வம்சத்தில் வடிவம் மற்றும் தன்மை அடிப்படையில் ஆரா பேகம் ஒரு ஒப்பிடமுடியாத பேகமாக இருந்தார், அவர் மிகவும் அழகாக இருந்தார்."

சில வரலாற்றாசிரியர்கள் ரோஷன் ஆரா பேகம் , அந்த நேரத்தில் அவரது அழகுக்காக பிரபலமானவர் என்று கூறுகிறார்கள், ஆனால் டாக்டர் பெர்னியர் எழுதினார், " தங்கையான ரோஷன் ஆரா பேகம் மிகவும் அழகாக இருக்கிறார், ஆனால் ஆரா பேகத்தின் அழகு அதைவிட அதிகமாக உள்ளது. "

ஜஹான் ஆராவுக்கு என்று தனி அரண்மனை இருந்தது. அதில் அவர் வாழ்ந்து வந்தார்.

" பேரரசர் ஷாஜகானின் அரண்மனைக்கு அருகில் ஆரா பேகம் அரண்மனை கட்டப்பட்டது. பேகம் சாஹிபாவின் அழகான மற்றும் ஆடம்பரமான வீடு ஓய்வெடுக்கும் இடத்துடனும் மிகவும் அழகான ஓவியங்களுடன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதன் கதவுகளும் சுவரும் உயர்தர வேலைப்பாடுகளை கொண்டிருந்தன. ஆங்காங்கே, விலைமதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. யமுனை கரையில் உள்ள முற்றத்தில் அமைந்த பங்களாவில் இரண்டு அறைகள் இருந்தன. அவை மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தன . இந்த கட்டிடம் மூன்று மாடி உயரம் கொண்டது. அதில் தங்க வேலைகளும் இருந்தன," என்று மொழிபெயர்ப்பாளரும் வரலாற்றாசிரியருமான மெளல்வி ஜகாவுல்லா தெஹால்வி 'ஷாஜகான் நாமா'வில் குறிப்பிட்டுள்ளார்.

சூஃபித்துவத்தின் மீதான ஈடுபாடு

அவர் தனது இளமை பருவத்தில் சூஃபித்துவத்தின் பால் ஈர்க்கப்பட்டார் என்று டாக்டர் ரோஹ்மா கூறுகிறார், ஆனால் தீவிபத்து சம்பவத்திற்குப் பிறகு, அவரது வாழ்க்கை மிகவும் எளிமையாக மாறியது.

ஆனால் அதற்கு முன்னர்,அவருடைய வாழ்க்கைமுறை மிகவும் ஆடம்பரமாக இருந்ததாக, மெஹபூப்-உர்-ரெஹ்மான் என்று எழுதியுள்ளார். டாக்டர் பெர்னியரை மேற்கோள் காட்டி, அவர் எழுதுகிறார், 'ஜஹான் ஆராவின் ஊர்வலம் மிகவும் சிறப்பாக இருக்கும். அவர் அடிக்கடி பல்லக்கில் செல்வார். அது சிம்மாசனத்தை ஒத்திருந்தது. பல்லக்கின் நாலாபுறமும் ஓவிய வேலை செய்யப்பட்டிருந்தது. அதில் மெல்லிய பட்டு திரைச்சீலைகள் இருந்தன. அதில் ஜரிகை பட்டு குஞ்சலங்கள் தொங்கின. அதன் அழகை இது இரட்டிப்பாக்கியது. '

'சில நேரங்களில் ஜஹான் ஆரா பேகம் ஒரு உயரமான அழகான யானை மீது சவாரி செய்வார். ஆனால் திரைச்சீலை கண்டிப்பாக போடப்பட்டிருக்கும். இது தவிர, ஷாஜகானுடன் டெக்கான், பஞ்சாப், காஷ்மீர் மற்றும் காபூலுக்கு பல முறை விஜயம் செய்தார். ஆனால் ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் திரைச்சீலை வழக்கத்தை மேற்கொண்டார். அவர் மட்டுமல்லாமல், முகலாய வம்சத்தின் எல்லா அரசிகளும், இந்த வழக்கத்தை கடைப்பிடித்தனர்.

சுற்றுலாப் பயணியும் வரலாற்றாசிரியருமான பெர்னியர் இவ்வாறு எழுதினார்: "இந்த பேகம்களுக்கு அருகில் யாரும் செல்வது சாத்தியமில்லை. மேலும் இந்த பேகம்களை தற்செயலாக எந்த மனிதரும் பார்ப்பது சாத்தியமில்லை. எந்த உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும், அவர் சவாரிக்கு அருகில் சென்றுவிட்டால், திருநங்கைகளிடமிருந்து அடி வாங்காமல் தப்ப முடியாது."

வரலாற்று புத்தகங்களில் ஆராவின் தீவிபத்து சம்பவம் விவரிக்கப்பட்டுள்ளது. முகலாய சாம்ராஜ்யத்தின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க நபராக அவர் இருந்த போதிலும், அவரது பிற சேவைகள் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை என்று டாக்டர் ரோஹ்மா கூறுகிறார்.

அவரது நட்பு பாவம், சூஃபிகள் மீதான அவரது அர்ப்பணிப்பு, அவரது தாராள மனப்பான்மை, அரசவையில் அவரது திட்டமிடல், தோட்டங்கள் மற்றும் கட்டிடக்கலை மீதான அவரது தொடர்பு ஆகியவை அவரது மாறுபட்ட ஆளுமையின் அடையாளங்கள்.

ஜஹான் ஆரா இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டும் பாரசீக மொழியில் உள்ளன. அவர் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த , சூஃபி ஹஸ்ரத் மொஹினுதீன் சிஷ்டி குறித்து 'மோனிஸ் அல்-அர்வா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

சூஃபிகள் மற்றும் புனிதர்களின் பேச்சில் அவர் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஆரம்ப நாட்களிலே அவற்றைப் புரிந்துகொண்டார். அவர் ஆரம்பத்தில் தாராவுடனும் பின்னர் தனது தந்தையுடனும் இந்த விஷயம் பற்றி விவாதம் செய்வார்.

புத்தகத்தைத் திருப்பித் தரும் சாக்கில் ஒரு முறை தாராவுடன், இந்தியாவின் பேரரசி நூர் ஜஹானைச் சந்திக்கச் சென்றபோது, நூர் ஜஹான் தான் படிக்கக் கொடுத்த புத்தகங்களின் பெயர்களை நினைவில் வைத்திருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டதாக, ஜஹான் ஆரா எழுதியுள்ளார்.

பைஜியின் புத்தகம் பிடித்ததா அல்லது ஹாருன் ரஷீத்தின் கதைகள் பிடித்திருக்கிறதா என்று நூர் ஜஹான் கேட்டார். ஹாருன் ரஷீத்தின் கதைகள் என்று ஜஹான் ஆரா பதிலளித்தார். வயது செல்ல செல்ல கவிதைகளை ரசிக்கத் தொடங்குவாய் என்று நூர் ஜஹான் கூறினார்.

ஜஹான் ஆரா, வீட்டிலலேயே கல்வி கற்றார். அவரது தாயின் தோழி, சதி அல்-நிசா பேகம் (சதர் அல்-நிசா என்றும் அழைக்கப்படுபவர்) அவருக்கு கல்வி கற்பித்தார். சதி அல்-நிசா பேகம் ஒரு படித்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது சகோதரர் தாலிப் அமலி , ஜஹாங்கிரின் காலத்தில் மல்லிகுஷ்ஷுரா (தேசக் கவிஞர்) என்ற பட்டத்தை பெற்றவர்.

ஜஹான் ஆரா சில நாட்கள் டெக்கனில் இருந்தபோது, மற்றொரு பெண் ஆசிரியர், அவருக்கு கற்பிக்க வருவார். 16 மற்றும் 17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த காஷ்மீரின் சூஃபி முல்லா ஷா பதாக்ஷி பற்றி 'ரிசலா சாஹிபியா'.என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதினார்.

முல்லா ஷா பதாக்க்ஷி, ஜஹான் ஆராவைக்கண்டு மிகவும் வியந்துபோனதாகவும், ஜஹான் ஆரா ஒரு பெண்ணாக இல்லாதிருந்தால், அவரை தனது கலீஃபா (வாரிசாக) அறிவித்திருப்பேன் என்று ஆராவிடம் கூறியதாகவும் டாக்டர் ரோஹ்மா கூறுகிறார்.

முறையாக, ஒரு முரித் (சீடர்) ஆகவும், தனது பீர் (குரு) சொல்லியபடி வாழ்க்கை வாழ்ந்த முதல் முகலாயப் பெண் என்பதில் ஜஹான் ஆரா பெருமிதம் கொண்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஷாஜகானாபாத் முழுவதும் அதாவது டெல்லியின் வரைபடம், ஜஹான் ஆராவின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சில வரலாற்றாசிரியர்கள் இதில் வேறுபடுகிறார்கள். ஆனால் சாந்தினி செளக் பற்றி யாருக்கும் கருத்துவேறுபாடு இல்லை. இந்த சந்தை அவரது நல்ல பொழுதுபோக்குகளையும் நகரத்தின் தேவைகளையும் அங்கீகரிப்பதற்கான அறிகுறியாகும்.

ஆரா ஆற்றிய பணிகள்

இது தவிர, அவர் பல மசூதிகளைக் கட்டினார். மேலும் அஜ்மீரில் உள்ள ஹஸ்ரத் மொயினுதீன் சிஷ்டியின் தர்காவில் ஒரு கட்டிடத்தை கட்டினார்.

"அவர் தர்காவுக்கு வந்தபோது, இந்த பாராதாரி (பன்னிரண்டு வாயில்களைக் கொண்ட கட்டிடம்) கட்ட நினைத்தார். சேவை மனப்பான்மையுடன் இதை அமைக்க பல தோட்டங்களையும் அமைத்தார் , "என்று டாக்டர் ரோஹ்மா கூறுகிறார்.

ஆக்ராவின் ஜமா மஸ்ஜித் குறித்து டாக்டர் ரோஹ்மா கூறுகையில், "இதன் சிறப்பு என்னவென்றால், பெண்கள் தொழுகை நடத்த இங்கு ஒரு அறை உள்ளது ," என்கிறார்.

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், பாரசீக மொழியில் ஒரு கல்வெட்டு பிரதான வாயிலில் உள்ளது. ஒரு முகலாயப் பேரரசரைப் போல , 'ஜஹான் ஆரா'வையும், அவரது ஆன்மீகத்தையும், அவரது புனிதத்தன்மையையும் அது புகழ்ந்துரைக்கிறது.

"பெண்களுக்கு பொது இடத்தை உருவாக்கிய முதல் முகலாய இளவரசி ஜஹான் ஆரா" என்று அவர் விளக்கினார். டெல்லியை ஒட்டியுள்ள யமுனையின் மறுகரையில், சாஹிபாபாத்தில், ஆரா, 'பேகம் தோட்டம்' கட்டியதாக அவர் கூறினார்.

இதில், பெண்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. கூடவே, அவர்கள் தோட்டத்தை சுதந்திரமாக பார்வையிடவும், அங்குள்ள அழகை ரசிக்கவும், நாட்களும் ஒதுக்கப்பட்டன.

முகலாய காலத்தில், பெண்களுக்கு எல்லா நற்குணங்களும் இருந்தபோதிலும், வரலாற்றின் பக்கங்களிலிருந்து அவர்கள் மறைந்துவிட்டதாகவும், அக்பரின் காலத்தை விட மிகக் கடுமையாக இவை செயல்படுத்தப்பட்டதாகவும், அவர்களின் பெயர்கள் கூட வெளியிடப்படவில்லை என்றும் டாக்டர் ரோஹ்மா கூறுகிறார்.

ஜஹான் ஆராவும் இதை அறிந்திருக்கலாம். எனவே அவர் தனது பெரிய பாட்டியைப் பற்றி குறிப்பிடும்போது, அதாவது ஜஹாங்கிரின் தாயார் மற்றும் அக்பரின் மனைவி பற்றிச்சொல்கையில், அவர் ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்.

"அவருடைய உண்மையான பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவளுடைய அந்தஸ்திலிருந்து நாங்கள் அவரை அறிவோம். அவர் அரண்மனையில் மிகவும் மரியாதைக்குரிய பெண் , " என்று கூறுகிறார்.

எனவே வரலாற்றில், பேகமுடைய ஓய்விடம், பேகமின் தோட்டம், பேகமின் அரண்மனை, பேகமின் குளியல் இல்லம் போன்ற பெயர்களைக் காண்கிறோம். அஜ்மீரில் உள்ள பேகமுடைய சாளரம், இது போன்ற ஒன்றுதான் என்று டாக்டர் ரஹிமா மேலும் கூறுகிறார்.

"பேரரசர்கள் தங்கள் அடையாளத்தை விட்டுச்செல்வதைப்போலவே, ஜஹான் ஆராவும் அஜ்மீர், ஆக்ரா அல்லது டெல்லி என்று எந்த இடமாக இருந்தாலும், தனது முத்திரையை பதித்தார் ," என்று அவர் கூறுகிறார்.

"அவர் காஷ்மீரின் சூஃபி துறவி முல்லா பதாக்க்ஷியின் விசுவாசத்தில் இருப்பதாகவும், காதிரியா மற்றும் சிஷ்டியையும் நம்புவதாகவும், "டாக்டர் எம். வாசிம் ராஜா கூறினார்.

ஜஹான் ஆராவின் அரசியல்

அரண்மனையில் நூர் ஜஹானைப் பார்த்தபோது ஜஹான் ஆரா ,அரசியல் பற்றி அறிந்துகொண்டார். நூர் ஜஹான், இவரை மிகவும் கவர்ந்தார்.

ஆகவே, நூர் ஜஹான் நூலகத்தில் அமர்ந்திருந்தபோது, 'இதையெல்லாம் நீங்கள் படிப்பீர்களா? இது மிகவும் அதிகமாக உள்ளதே என்று ஆரா கேட்டார். நான் நாள்தோறும் இவ்வளவு படிக்கிறேன், நான் படிக்கவில்லை என்றால், நாட்டில் என்ன நடக்கிறது என்பதை நான் எப்படி அறிந்துகொள்வேன். எல்லாவற்றையும் கவனமாகப் படித்து, ஏதேனும் தவறு இருந்தால் தன்னிடம் சொல்லுமாறு, பேரரசர் என்னிடம் கூறியிருக்கிறார் என்று நூர் ஜஹான் பதிலளித்தார்,

தாராவும் நானும் உற்சாகத்தில் கொஞ்சம் முன்னோக்கி சாய்ந்தோம். என்ன தவறு இருக்கமுடியும் என்று தாரா கேட்டார். எனவே அவர் என்னைப் பார்த்து, "அரசின் விவகாரங்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்றார்.

அவர் ஒரு ஓலைச்சுருளை எடுத்து திறந்தார். அதில் வங்காள ஆளுநரின் அறிக்கை இருந்தது. பர்கானாவில் பஞ்சம் இருப்பதால் விவசாயிகளிடமிருந்து வரி வசூலிக்க முடியாது என்று அவர் எழுதியிருந்தார். அதில் என்ன தவறு என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"அவர் இரண்டாவது பத்திரத்தை எடுத்துக் கொண்டார். இது வங்காளத்தில் இருந்த உளவாளியின் அறிக்கை என்று அவர் கூறினார். ஆளுநர் விவசாயிகளிடமிருந்து வரி வசூலித்துள்ளார் என்றும், பஞ்சம் என்ற போலி காரணம் காட்டி, வருவாயை தன்னுடன் வைத்திருக்க விரும்புகிறார் என்று அதில் கூறப்பட்டிருந்தது."

நூர் ஜஹானிடம் ஒரு அரச முத்திரை இருந்தது என்றும், அவர் எந்த ஆவணத்தில் அந்த முத்திரையை குத்தினாலும், அது அரச கட்டளையாக ஆகிவிடும் என்றும் ஜஹான் ஆரா சொல்கிறார்.

ஜஹான் ஆராவின் தாய் இறந்தபோது, ஆராவின் அந்தஸ்து மிக உயர்ந்ததாக ஆனதால், அவருக்கும் அரச முத்திரை வழங்கப்பட்டதை நாம் காண்கிறோம்.

பாத்ஷா நாமாவை மேற்கோள் காட்டி ஜியா-உத்-தின் அஹ்மத் இவ்வாறு எழுதினார்: "1631-32 ஆம் ஆண்டில், யமினுதவுலா ஆசிப் கான், முகமது ஆதில் கானுடன் பேச்சுவார்த்தை நடத்த, பாலா காட் செல்ல முற்பட்டார். அவர் வெளியேறுவதற்கு முன்பு சக்கரவர்த்தியிடம் அரச முத்திரையை பெறுவதற்கு சென்றார். அந்த முத்திரை, ஜஹான் ஆராவிடம் இருந்தது. அவர் அரச ஆவணங்களில், முத்திரை பதித்து வந்தார்."

நூர் ஜஹானுக்குப் பிறகு, தனது தாயும் இந்தப்பணியை செய்வதை அவர் கண்டார். ஆனால் 17-18 வயதில், அத்தகைய முக்கியமான பொறுப்பை வகிப்பது பிரதமர் பதவிக்கு எந்தவிதத்திலும், குறைந்தது அல்ல.

ஜஹான் ஆரா இளவரசர் தாராவை ஆதரித்தாலும், ஒளரங்கசீப்பின் மனதில் அவர் மீதான நல்லெண்ணம் குறையவில்லை.

இருப்பினும், அவரது சகோதரி ரோஷன் ஆரா அவர் மீது எரிச்சல் கொண்டிருந்தார். அவர் ஒளரங்கசீப்பிடம் சென்று ஜஹான் ஆராவுக்கு எதிராக பேசினார். ஆனால் தந்தை ஷாஜகான் காலமானபோது, ஒளரங்கசீப் , ஜஹான் ஆராவை தன்னிடம் அழைத்து மீண்டும் பாட்ஷா பேகம் என்ற பட்டத்தை வழங்கினார். அதில் ரோஷன் ஆரா மேலும் எரிச்சலடைந்தார். இருப்பினும், 1681 இல் அவர் இறக்கும் வரை, அந்த பதவி அவருடனே இருந்தது.

அவர் நோய்வாய்ப்பட்டு மரண படுக்கையில் இருந்தபோது, தன்னை புதைக்கும் இடம், சூஃபி துறவி ஹஸ்ரத் நிஜாமுதீன் அவுலியாவின் தர்காவுக்கு அருகில் இருக்கவேண்டும் என்று கூறி அதில் பொறிக்க ஒரு கவிதையும் எழுதியிருந்தார்.

'என் கல்லறையை துளசியால் மட்டுமே மூடுங்கள், வேறு எதையும் கொண்டு மூட வேண்டாம். ஏனெனில் இது ஏழைகளின் கல்லறைக்கு போதுமானது' என்று அந்தக்கவிதை கூறுகிறது.

இப்படியாக, தன்னை ஏழை என்று எப்போதுமே கூறிக்கொண்ட முகலாய சாம்ராஜ்யத்தின் மிகவும் பணக்கார இளவரசி, ஒரு கல்லறைகூட இல்லாமல் இந்த உலகத்தை விட்டுச்சென்றுவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: