You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்துக்கள் புனித தலத்தில் நிர்வாண காணொளி - பிரான்ஸ் பெண் கைது மற்றும் பிற செய்திகள்
இந்துக்கள் புனித தலத்தில் நிர்வாண காணொளி - பிரான்ஸ் பெண் கைது
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் இருக்கும் லக்ஷ்மண் ஜூலா எனும் தொங்கு பாலம் ஒன்றின் மீது தன்னைத் தானே நிர்வாணமாகக் காணொளி எடுத்த பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கங்கை நதி மீது அமைந்துள்ள லக்ஷ்மண் ஜூலா மற்றும் ராம் ஜூலா ஆகிய தொங்கு பாலங்கள் இந்துக்களால் புனிதமானதாகக் கருதப்படுகின்றன.
தற்போது பிணையில் வெளியே வந்துள்ள அந்தப் பெண் தனது நகைத் தொழிலை இணையத்தில் பிரபலப்படுத்துவதற்காக அவ்வாறு காணொளி எடுத்ததாக காவல்துறை விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
அவர் லக்ஷ்மண் ஜூலா பாலம் மீது நிர்வாணமாக காணொளி எடுத்தது காவல்துறைக்கு தெரிந்த பின்னர் கடந்த வியாழனன்று கைது செய்யப்பட்டார்.
"இத்தகைய செயல்கள் பிரான்சில் வேண்டுமானால் தவறானதாகக் கருதப்படாமல் இருக்கலாம். ஆனால் ரிஷிகேஷ் ஒரு புனிதத்தலம்; இந்து கடவுள்கள் ராமர் அவரது சகோதரர் லக்ஷ்மண் மற்றும் சீதா ஆகியோர் கங்கையைக் கடந்த இடமாக லக்ஷ்மண் ஜூலா கருதப்படுகிறது," என்று ஆர்.கே. சல்கானி எனும் காவல் அதிகாரி ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அந்தப் பெண் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் வரை அவருக்குச் சிறை தண்டனை விதிக்கப்படும்..
கைது செய்யப்பட்டுள்ள பெண் இதுவரை அதிகாரப்பூர்வமாக அடையாளப்படுத்தப்படவில்லை.
தமிழ்நாட்டில் இ-பாஸ் முறை ரத்து, பல புதிய தளர்வுகள்
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், ரயில் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அமேசான் காட்டுத் தீ:கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக பாதிப்பை ஏற்படுத்துமா?
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட அமேசான் காடுகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது என கருதப்படுகிறது. ஆனால் அவை காட்டுத்தீயால் கருகும் அபாயத்தில் இருக்கின்றன. உலகளவில் அமேசான் மழை காடுகளின் முக்கியத்துவம் குறித்து பல நாடுகள் விவாதித்து வருகின்றன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஆரம்ப கட்டத்திலேயே காட்டுத் தீ அதிக அளவில் பரவி வருவது அறிவியலாளர்களை கவலையடைய செய்துள்ளது. ''அமேசான் காடுகளில் மீண்டும் பெரியளவில் தீ பிடித்துள்ளது என வெளிவரும் செய்திகள் உண்மை அல்ல'' என பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ சமீபத்தில் கூறினார்.
இலங்கை: ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள்
இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. கொழும்பு த சொய்சா பெண்கள் வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் நேற்றைய தினம் பிறந்துள்ளன. பிரசவ விசேட வைத்தியர்களின் பங்குப்பற்றுதலுடன் சுமார் ஐந்து நிமிடங்களில் இந்த பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தாயிக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் மூலமே குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைகள் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறுவை சிகிச்சைகளை நடத்துவதற்காக மூன்று விசேட வைத்திய நிபுணர்கள் இருந்துள்ளனர். கம்பளை பகுதியைச் சேர்ந்த 29 வயதான ரசாஞ்சலி ஜயவர்தனவிற்கே இந்த குழந்தைகள் பிறந்துள்ளன. குழந்தைகளில் தந்தை வர்த்தகர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ஐந்து குழந்தைகளும் சிறந்த ஆரோக்கியத்துடன் உள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 'தென் சீன கடலுக்கு போர் கப்பலை இந்தியா ரகசியமாக அனுப்பியது'
கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினர் இடையே ஜூன் 15ஆம் தேதி நடந்த மோதலுக்கு பிறகு இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க் கப்பல் ஒன்றை தென் சீனக் கடலுக்கு இந்தியா அனுப்பியது என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது. இந்தியா மற்றும் சீனா இடையே நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அந்த செய்தி கூறுகிறது. 2009ஆம் ஆண்டு முதல் செயற்கை தீவுகளை கட்டியெழுப்பியும், தனது படைகளை நிலை நிறுத்தியும், தென் சீன கடலில் சீனா தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.
விரிவாகப் படிக்க கல்வான் மோதலுக்கு பின் சீன கடலுக்கு போர் கப்பலை அனுப்பிய இந்தியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: