You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விநாயகர் சதுர்த்தி விவகாரம்: அதிமுக VS பாஜக மோதலாக மாறுகிறதா?
தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தை முன்வைத்து மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வார்த்தை மோதல்களைத் தொடங்கியுள்ளனர். ஆனால், மத்தியில் அதிமுகவை உள்ளடக்கிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன்.
விநாயகர் சதுர்த்தி, ஆகஸ்ட் 22ஆம் தேதியன்று கொண்டாடப்படும் நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவும் ஊர்வலமாகச் சென்று அவற்றைக் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
இதையடுத்து, தடைகளை மீறி ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கப்போவதாக இந்து முன்னணி அறிவித்தது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, இந்து முன்னணியின் அறிவிப்பு குறித்து சுட்டிக்காட்டப்பட்டது. தடை மீறப்பட்டால் உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளுமென நம்புவதாக உயர்நீதிமன்றம் கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இதற்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, "கர்நாடகாவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு" என்று பதிவிட்டார். அவரது இந்தப் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்குப் பதிலடியாக அதிமுகவினரும் பாஜகவை விமர்சித்து பதிலளிக்க ஆரம்பித்தனர்.
புதன்கிழமை இரவில் இந்த வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. இந்த நிலையில், வியாழக்கிழமை காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், "தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாது" என்று கூறினார்.
மேலும் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பான விவகாரத்தில் இந்து முன்னணி என்ன நிலைப்பாடு எடுக்குமோ அதையே தாங்களும் பின்பற்றப்போவதாக தெரிவித்தார்.
"மகாராஷ்டிரா, கர்நாடகா, புதுச்சேரியில் அந்தந்த மாநில அரசுகள் விநாயகர் ஊர்வலங்களுக்கு அனுமதி அளித்துள்ளன. இந்த விவகாரத்தில் இந்து முன்னணி என்ன நிலைப்பாட்டை எடுக்குமோ, அதனை நாங்கள் ஆதரிப்போம்" என்று தெரிவித்தார்.
இதற்குப் பிறகு பிற்பகலில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஹெச். ராஜாவின் கருத்துக்கு கடுமையாக எதிர்வினையாற்றினார்.
"ராஜாவைப் பற்றி தெரியும் அவருடைய வலிமை, ஆண்மை என்ன என்பதை நீங்களே தெரிந்துகொண்டிருப்பீர்கள். ஒரு ட்விட்டரைப் போட்டுவிட்டு ஓடி ஒளிபவர்கள் வலிமை உள்ளவர்களா, கோர்ட்டில் மன்னிப்புக் கேட்டவர்கள் ஆண்மையுள்ளவர்களா?" என்று கேள்வியெழுப்பினார்.
மேலும், ஜெயலலிதாவைப் பார்க்க வீட்டு வாசலில் காத்துக்கொண்டிருந்ததை மறந்துவிட வேண்டாம் என்றும் வரலாறு தெரியாமல் இன்றைய தலைமுறையை ஏமாற்ற வேண்டாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
ஹெச் ராஜாவுக்கு எதிராக ஜெயக்குமாரின் கடுமையான கருத்துகள் ஒரு புறமிருக்க அதிமுகவின் அதிகாரபூர்வ ஐ.டி அணியின் ட்விட்டர் பக்கத்தில் பாஜகவுக்கு எதிரான கருத்துகள் வெளியிடப்பட்டன.
இதற்கு முன்பாக அதிமுக - பாஜக இடையில் சமூக வலைதளங்களிலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் சிறு சிறு மோதல்கள் ஏற்பட்டிருக்கின்றன என்றாலும் அவை கூட்டணி முறியும் அளவுக்குச் சென்றதில்லை.
இப்போது அமைச்சர்வரை எதிர்வினையாற்றியிருந்தாலும் கூட்டணி தொடரும் என்பதை கோடிட்டுக் காட்டியிருக்கிறார் பாஜக மாநிலத் தலைவர் முருகன்.
"இவை எல்லாமே இங்கிருப்பவர்கள் செய்யும் செயல்கள். மத்திய அரசு கூட்டணி வேண்டாம் என முடிவெடுத்தால் எப்படிச் செய்ய வேண்டுமென்பது அவர்களுக்குத் தெரியும். தற்போது தமிழ்நாட்டில் பாஜகவுக்கு தனியாக பெரிய ஆதரவுத் தளம் இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே கூட்டணி அவசியம் என்பதும் தெரியும். தேசிய தலைமையைப் பொருத்தவரை தமிழ்நாட்டைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இங்கிருக்கும் தலைவர்கள் அது புரியாமல் அவ்வப்போது எதிர்வினையாற்றிவருகிறார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமியைப் பொருத்தவரை, சசிகலா சிறையில் இருந்து வெளிவருவதற்கு முன்பாக அதிமுக, தேர்தலில் செல்ல வேண்டிய திசையை முடிவுசெய்ய வேண்டும் என நினைக்கிறார்; அதில் அவருக்கு வெற்றி கிடைத்து வருகிறது. தற்போது நடக்கும் நிகழ்வுகள் கட்சிக்குள் முதல்வரின் கரத்தைத்தான் வலுப்படுத்தும் என்கிறார் ராதாகிருஷ்ணன்.
இதற்கிடையில், வியாழக்கிழமை காலையில் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்ட தமிழக அரசு, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட வேண்டும் என மீண்டும் தெரிவித்துள்ளது.
பிற செய்திகள்:
- தோனிக்கு புகழாரம்: பிரதமர் மோதி எழுதிய 2 பக்க உணர்ச்சிப்பூர்வ கடிதம்
- பிரசாந்த் பூஷன்: நான் கருணை வேண்டவில்லை- தண்டனையை மகிழ்வோடு ஏற்பேன்
- பிஎம் கேர்ஸ் நிதி: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தொடரும் கேள்விகள்
- இந்திய - இலங்கை உடன்படிக்கையை எதிர்த்த மஹிந்த யாப்பா இன்று சபாநாயகர்
- இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் சரியாக கணக்கிடப்படுவது இல்லையா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: