You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிஎம் கேர்ஸ் நிதி: உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் தொடரும் கேள்விகள்
- எழுதியவர், ப்ரவீண் ஷர்மா
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
பிஎம் கேர்ஸ் நிதி குறித்து எதிர்கட்சி மற்றும் சமூக ஆர்வலர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றத்தின் ஒரு முக்கியமான முடிவு வெளிவந்தது.
பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிவாரணத்திற்கான பிஎம் கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு (என்.டி.ஆர்.எஃப்) மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
பொது நலன் வழக்குக்கான தன்னார்வ தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், பிஎம் கேர்ஸ் நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப்-க்கு மாற்ற உத்தரவிட முடியாது என்று கூறியது.
கொரோனா வைரஸ் தொற்று நிவாரணத்திற்கான இந்த நிதியை மாற்றுமாறு அரசாங்கத்துக்கு உத்தரவிடக் கோரியது இந்த மனு. மனுவில் பிஎம் கேர்ஸ் நிதி குறித்து ஐயம் எழுப்பிய இந்த அமைப்பு, பிஎம் கேர்ஸ் நிதியில் இதுவரை சேர்ந்துள்ள பணம் குறித்த தகவல்களை வெளியிடுவதை மத்திய அரசு தவிர்த்து வருகிறது என்றும் கூறியிருந்தது.
நீதிமன்ற முடிவுக்கு காங்கிரஸ் எதிர்வினை
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்பேற்றல் ஆகியவற்றுக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது என்று செவ்வாயன்று காங்கிரஸ் கூறியது.
இந்த முடிவு குறித்துப் பதிலளித்த காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சூர்ஜேவாலா, "தெளிவற்ற மற்றும் சந்தேகத்துக்குரிய விதிகள்' அடிப்படையில், இந்த நிதியில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்கான வாய்ப்பு உச்ச நீதிமன்றத்திடம் இருந்தது" என்று கூறியுள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு தனது தீர்ப்பில், 'பேரிடர் மேலாண்மைச் சட்டத்தில் அரசியலமைப்பு தடை இல்லாததால் தன்னார்வப் பங்களிப்புகளை எப்போதும் என்.டி.ஆர்.எஃப்-க்கு வழங்க முடியும்' என்று கூறியது.
பாஜக-வின் எதிர்வினை
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, பாஜக, காங்கிரஸ் கட்சி மீதான தனது தாக்குதலைத் தொடங்கியது.
ராகுல் காந்தி மற்றும் அவரது ஆதரவில், சமூகப் பிரச்சனைகள் குறித்துக் கேள்வி எழுப்பும் ஆர்வலர்கள் குழு என்ற போர்வையில் இயங்குபவர்களின் தவறான நோக்கங்களுக்கு முட்டுக்கட்டையாக, உச்ச நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பு வந்துள்ளதாக, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா கூறினார்.
மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "பி எம் கேர்ஸ் நிதியில், சட்டபூர்வமான விதிமுறைகள் மற்றும் பணத்தின் வெளிப்படையான நிர்வாகம் குறித்த விதிமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், வெளிப்படைத் தன்மை தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேவையில்லாமல், தவறான நோக்கங்களுடன் இது குறித்து உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதி மன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.
"ராகுல் காந்தி தனது ஆலோசகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இவ்வாறு செய்து வருகிறார். அவர் தனது அறிக்கைகளின் மூலம், வெவ்வேறு முனைகளிலும் தொடர்ந்து நாட்டைப் பலவீனப்படுத்த முயன்று வருகிறார்" என்றும் அவர் கூறினார்.
மேலும் அவர், "பி எம் கேர்ஸ் நிதி நிர்வாகம் சட்டப்பூர்வமாகவே நடந்து வருகிறது. கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட இந்த நிதி, இதுவரை 3,100 கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளது. வென்டிலேட்டர்களுக்கு ரூபாய் .2,000 கோடியும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூபாய் 1000 கோடியும், தடுப்பூசி உருவாக்க ரூபாய் 100 கோடியும் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
உச்ச நீதிமன்றமே ஒன்றும் செய்யமுடியாத நிலையில் சாமானியர் செய்யக்கூடியது என்ன?
பிஎம் கேர்ஸ் ஃபண்ட் தொடங்கப்பட்ட நாளிலிருந்தே இது குறித்த சர்ச்சைகளும் தொடங்கின. இந்த நிதியின் நோக்கங்கள் குறித்து எதிர்கட்சிகளும் செயல்பாட்டாளர்களும் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பிபிசியிடம், " ஒரு பேரழிவின்போது வழங்கப்படும் எந்தவொரு பணமும் என்.டி.ஆர்.எஃப்-க்கு வரும் என்று பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 46 தெளிவாகக் கூறுகிறது. எனவே புதிய நிதியை உருவாக்க வேண்டிய அவசியமே எழவில்லை." என்று கூறினார்
மேலும் அவர், "என்.டி.ஆர்.எஃப், சி.ஏ.ஜி தணிக்கைக்கு உட்பட்டது. தகவலறியும் சட்டமும் இதில் செல்லுபடியாகும். ஆனால், பி.எம். கேர்ஸ் ஃபண்ட், சி.ஏ.ஜி தணிக்கைக்கும் தகவலறியும் சட்டத்துக்கும் அப்பாற்பட்டதாகவே உள்ளது" என்று கூறினார்.
அரசாங்கம் இதன் ஆவணங்களைக் கூட வெளியிடவில்லை என்றும் அவர் இது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.
இந்த நிதி உருவாக்கத்தின் பின் உள்ள அரசாங்கத்தின் நோக்கம் புரியவில்லை என்றும் இந்த பணத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்தும் எந்தத் தெளிவுமில்லை என்றும் பிரஷாந்த் பூஷண் கூறுகிறார்
செவ்வாய்க்கிழமை வெளியான இந்த முடிவு குறித்து, "உச்சநீதிமன்றமே ஒன்றும் செய்யாவிட்டால், சாமானியர்கள் என்ன செய்ய முடியும்? அரசாங்கத்தின் பொறுப்புணர்வைத் தீர்மானிப்பதே உச்ச நீதிமன்றத்தின் கடமை." என்று கவலை தெரிவிக்கிறார்.
ஏற்கெனவே ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பி எம் கேர்ஸ் ஃபண்ட் தொடர்பாக முன்னதாகவும், பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு இன்னும் நிலுவையில் உள்ளது.
பி எம் கேர்ஸ் நிதியை அரசியலமைப்பிற்கு விரோதமானதாக அறிவிக்கக் கோரி, வழக்கறிஞர் ஷாஷ்வத் ஆனந்த் ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏப்ரல் 27 அன்று திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
"இன்று தீர்ப்பு வெளியாகியுள்ள வழக்கில், இந்த நிதியின் பணத்தை என்.டி.ஆர்.எஃப் க்கு மாற்ற வேண்டும் என்று தான் கோரப்பட்டதேயன்றி, இந்த நிதியை அரசியலமைப்பிற்கு விரோதமாக அறிவிக்கக் கோரப்படவில்லை, அரசாங்கத்தின் நோக்கம் குறித்து மட்டுமே கேள்வி எழுப்பப்பட்டது". என்று அவர் கூறுகிறார்.
"பி எம் கேர்ஸின் அனைத்துத் தகவல்களும் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். அரசாங்கத்தின் ஆவணப் பத்திரம் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்" என்று ஷாஷ்வத் ஆனந்த் கூறுகிறார்.
இந்த நிதியை இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) தணிக்கைக்கு உட்படுத்துமாறும் அவர் கோருகிறார்.
"பி எம் கேர்ஸ் நிதி, அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்க வேண்டும், என்பது மட்டுமல்ல, பிஎம்என்ஆர்எஃப்-ம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவிக்கக் கோரியும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நாங்கள் மனு தாக்கல் செய்தோம்." என்று ஷாஷ்வத் கூறுகிறார்.
பி.எம் கேர்ஸ் நிதி குறித்த மொத்தத் தரவையும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கோரும் இவர், பி.எம்.என்.ஆர்.எஃப் இன் முழுமையான தரவு இணைய தளத்தில் உள்ளது என்றும் கூறுகிறார்.
பி எம் கேர்ஸ் ஒரு அரசு அறக்கட்டளை என்றும் ஒரு பிரதமராக மோடி அவர்கள் இந்த நிதியை உருவாக்கியுள்ளார் என்றும் ஷாஷ்வத் கூறுகிறார்.
"இப்படி ஒரு அறக்கட்டளையை உருவாக்கவே முடியாது. சட்டமியற்றியே இதை உருவாக்க முடியும். ஆனால், இது சட்டப்படியன்றி, அரசால் தன்னிச்சையாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் இது சட்ட விரோதமானது" என்று அவர் கூறுகிறார்.
"சட்டத்தின் மூலமாக இது கொண்டுவரப்பட்டிருந்தால், இது சி ஏ ஜி தணிக்கைக்கு உட்பட்டிருக்கும். அதனால் தான் சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது", என்பது இவர் வாதம்.
ஆனால், பி.எம் கேர்ஸ் பணத்தை என்.டி.ஆர்.எஃப்-க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஏன் வந்தது, அதனால் என்ன நேர்ந்துவிடும்?
இந்தக் கேள்விக்கு, "என்.டி.ஆர்.எஃப், தகவலறியும் உரிமைச் சட்டத்திற்குள் அடங்கும். சி ஏ ஜி தணிக்கைக்கு உட்படும். மேலும் இது வருடாந்தர அறிக்கையை வெளியிடுகிறது. இது அரசாங்கத்தின் பொறுப்பு, பொது மக்களின் பணம். பொது மக்களின் பணத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்" என்று இவர் விளக்கம் தருகிறார்.
"பி எம் கேர்ஸ் நிதியை தவறாகப் பயன்படுத்த முடியும். அதிகாரிகள் அதை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதைக் கண்காணிக்க வழியேதுமில்லை. என்.டி.ஆர்.எஃப் -ல் இவ்வாறு நடப்பது சாத்தியமன்று" என்று கூறுகிறார் ஷாஷ்வத்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: