You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோழிக்கோடு விமான விபத்து: “மலர்களை சுமந்து சென்றவன்” - விமானியின் நண்பர் எழுதிய உருக்கமான பதிவு
கேரள மாநிலம் கோழிக்கோடில் துபையில் இருந்து வந்த 190 பேருடன் வந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம், ஓடுபாதையில் தரையிறங்கும்போது தடுமாறி விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரு விமானிகள் உட்பட உயிரிழந்தவர்களின் 18 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பலியான விமானி கேப்டன் தீபக் சாத் இந்திய விமானப் படையில் விங் கமாண்டராகப் பணியாற்றியவர்.
கடந்த 1990களில் நடந்த விபத்தில் தலை மற்றும் உடலின் பல்வேறு இடங்களில் பலத்த காயமடைந்த தீபக் சாத் 6 மாதம் ஓய்விலிருந்துள்ளார்.
மீண்டும் விமானியாக வருவார் என யாரும் எதிர்பாராத நேரத்தில் தனது மனவலிமையால் மீண்டும் விமானி ஆகி உள்ளார்.
உருக்கமான பதிவு
இவர் குறித்த நினைவுகளை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார் அவர் உறவினரும் நண்பருமான நீலேஷ் சாத்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த பதிவை அறிவழகன் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துப் பகிர்ந்துள்ளார். இப்போது இந்த பதிவு பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்தப் பதிவில், "தீபக் சாதே 36 வருட பறப்பு அனுபவம் கொண்டவன், தேசியப் பாதுகாப்பு மையத்தில் இருந்து வந்தவன், மதிப்பு மிக்க வீரவாள் விருது பெற்றவன், தேசிய வானுர்திப்படையில் 21 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஏர் இந்தியாவின் வணிக விமானியாக மாறினான்." என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த பதிவில் உள்ள சில வரிகள் பின் வருமாறு:
ஒரு வாரத்துக்கு முன்பு நான் அவனை அழைத்துப் பேசிய போது, அதே சிரிப்போடு பேசினான், நான் "வந்தே பாரத்" குறித்துக் கேட்டபோது, பெருமையாகவும், நிறைவாகவும் இருப்பதாகச் சொன்னான்.
உரையாடலின் போது நான் கேட்டேன்,
"தீபக், அரபு நாடுகள் இப்போது பயணிகளை அனுமதிப்பதில்லையே?
நீ காலி வானூர்திகளையா ஓட்டிச் செல்கிறாய்?"
அவன் சொன்னான்,
"நிலேஷ், நான், மலர்களையும், பழங்களையும், காய்கறிகளையும் அந்த நாட்டு மக்களுக்காகக் கொண்டு செல்கிறேன், ஒருபோதும் காலி விமானங்களோடு போவதில்லை."
- இவ்வாறாகக் குறிப்பிட்டுள்ளார்.
கணவரின் இழப்பை அறியா நிறைமாத கர்ப்பிணி
கேரளா விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தி்ன் இரு விமானிகளில் ஒருவரான இணை விமானி அகிலேஷ் சர்மா (32) உயிரிழந்த தகவலை, நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மேகாவிடம் (29) அவரது குடும்பத்தினர் அவர் உடல்நலன் கருதி மறைத்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவிந்த் நகரில் அந்த குடும்பம் வாழ்கிறது. இந்த நிலையில், அகிலேஷ் சர்மாவின் உடலை பெற்று வருவதற்காக அவரது சகோதரர் புவனேஷ், மைத்துனர் சஞ்சீவ் சர்மா கோழிக்கோடு சென்றுள்ளனர்.
அகிலேஷ் சர்மாவின் தந்தை துளசி ராம் சர்மா, மதுராவில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவருக்கு அகிலேஷ் சர்மா, புவனேஷ் சர்மா, லோகேஷ் சர்மா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: