You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நீங்கள் இந்தியரா? விமான நிலையத்தில் கனிமொழி எம்.பியை கேட்ட சிஐஎஸ்எஃப் காவலர்
டெல்லிக்கு வருவதற்காக சென்னை விமான நிலையம் வந்த திமுக எம்.பி கனிமொழியை, "நீங்கள் இந்தியனா?" என அங்கு பணியிலிருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப்படை (சிஐஎஸ்எஃப்) பெண் காவலர் கேட்ட நிகழ்வு, சர்ச்சையாகியிருக்கிறது.
இது தொடர்பாக தமது டிவிட்டர் பக்கத்தில், தனது விமான நிலைய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட கனிமொழி, "இன்று விமான நிலையத்தில் ஒரு சிஐஎஸ்எஃப் காவலரிடம், எனக்கு இந்தி தெரியாது என்பதால் ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பேச முடியுமா என கேட்டபோது, அவர், "நீங்கள் இந்தியனா?" என்று என்னிடம் கேட்டுள்ளார். இந்தி மொழி அறிவதை வைத்தே, இந்தியனாக இருப்பதற்கு சமம் என்பது எப்போதிலிருந்து உள்ளது என்பதை அறிய விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
#HINDIIMPOSITION என்ற இந்தி திணிப்பு தொடர்பான டிவிட்டர் ஹேஷ்டேக்கையும் கனிமொழி பயன்படுத்தியிருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு அவரது பக்கத்தை பின்தொடருவோர் கடுமையான கருத்துகளைப் பதிவிட்டு, மொழி திணிப்பு கூடாது என வலியுறுத்தி வருகிறார்கள்.
முன்னதாக, இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு டெல்லிக்கு புறப்படும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற, சென்னை விமான நிலையத்துக்குக் கனிமொழி வந்தார்.
நாளை திங்கள்கிழமை டெல்லியில் உள்ள நாடாளுமன்ற துறைசார் ஆலோசனைக்குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார் அவர். இதையடுத்து கனிமொழி விமான நிலையத்துக்கு வந்தபோது, அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி, கனிமொழியிடம் இவ்வாறு பேசியிருப்பதை அவரது உதவியாளர் அருண் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து கனிமொழியின் தரப்பு நேரடி கருத்தை பிபிசி பெற முயன்றது. அதற்குள் அவர் விமானத்துக்குள் சென்று விட்டதால் அவரை தொடர்பு கொள்ள இயலவில்லை.
விசாரித்து வருகிறோம்
இதற்கிடையே, விமான நிலைய சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரிகளிடம் பிபிசி பேசியது. "சம்பவம் தொடர்பான தகவல், கனிமொழி எம்.பியின் டிவிட்டர் பக்கத்தில் வெளிவந்த பிறகே தங்களின் கவனதுக்கு வந்துள்ளதாகவும், எந்த அடிப்படையில் அந்த பெண் அதிகாரி கனிமொழியிடம் அவ்வாறு கேட்டார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று விமான நிலைய பாதுகாப்புப் பிரிவு உயரதிகாரி தெரிவித்தார்.
"கனிமொழி ஒரு எம்.பி என்பதால், அதற்குரிய சம்பிரதாய வழிமுறைகளின்படி அவருக்கு விமான நிலையத்தில் தரப்பட்டிருக்க வேண்டிய முன்னுரிமை அல்லது முக்கியத்துவத்தில் ஏதேனும் குறைபாடு எழுந்ததா என்பது குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்" என்றும் விமான நிலைய பாதுகாப்பு பொறுப்பு உயரதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்தியில் ஆட்சியில் உள்ள அமைப்புகளின் இந்தி திணிப்பு நடவடிக்கை பல வழிகளில் தொடருவதாக கருத்து வெளியிட்டிருந்தார்.
வருத்தம் தெரித்த சி.ஐ.எஸ்.எஃப்
இந்த சம்பவம் தொடர்பாக சி.ஐ.எஸ்.எஃப் தலைமையகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், டெல்லியில் தரையிறங்கிய கனிமொழியை அந்த படையின் உயரதிகாரிகள் விமான நிலையத்திலேயே சந்தித்து நடந்த சம்பவம் தொடர்பாக வருத்தும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளனர்.
இது தொடர்பாக பின்னர் டெல்லியில் உள்ள தமது வீட்டுக்கு வந்ததும் சென்னை விமான நிலைய சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் கனிமொழி விளக்கினார்.
அப்போது, விமான நிலையத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை இந்தி மொழியில் அறிவித்தபடி இருந்ததாகவும், அதனால், அந்த அறிவிப்பை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் வெளியிடுமாறும் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டதாகவும் கனிமொழி கூறினார்.
ஆனால், அதன் பிறகும் தொடர்ந்து இந்தி மொழியிலேயே அறிவிப்பை வெளியிட்ட அதிகாரிகளிடம், இந்த விவகாரம் குறித்து புகார் பதிவு செய்யப்போவதாகவும் கூறி விட்டு, டிவிட்டரில் அதை பதிவு செய்தேன் என்று கனிமொழி கூறினார்.
இந்த நிலையில்தான் கனிமொழியின் டிவிட்டருக்கு பதில் அளித்துள்ள சிஐஎஸ்எஃப் தலைமையகம், கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்புணர்வான அனுபவத்துக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும், சென்னையில் நடந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட மொழியையும் நிர்பந்திப்பது தங்களுடைய படையின் கொள்கை கிடையாது என்றும் சிஐஎஸ்எஃப் தலைமையகம் அதன் டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: