கேரளா கோழிக்கோடு விமான விபத்து: பைலட் கணவரின் இழப்பை அறியாமல் மதுராவில் காத்திருக்கும் நிறைமாத கர்ப்பிணி

கேரளா கோழிக்கோடு விமான விபத்து

கேரளா விமான விபத்தில் உயிரிழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தி்ன் இரு விமானிகளில் ஒருவரான இணை விமானி அகிலேஷ் சர்மா (32) உயிரிழந்த தகவலை, நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவி மேகாவிடம் (29) அவரது குடும்பத்தினர் மறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள கோவிந்த் நகரில் அந்த குடும்பம் வாழ்கிறது. இந்த நிலையில், அகிலேஷ் சர்மாவின் உடலை பெற்று வருவதற்காக அவரது சகோதரர் புவனேஷ், மைத்துனர் சஞ்சீவ் சர்மா கோழிக்கோடு சென்றுள்ளனர்.

அகிலேஷ் சர்மாவின் தந்தை துளசி ராம் சர்மா, மதுராவில் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். அவருக்கு அகிலேஷ் சர்மா, புவனேஷ் சர்மா, லோகேஷ் சர்மா ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.

கேரளா விமான விபத்து

பட மூலாதாரம், Getty Images

மதுராவில் உள்ள அமர்நாத் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த அவர், மகராஷ்டிராவின் கொண்டியாவில் உள்ள சிஏஇ ஆக்ஸ்ஃபோர்ட் விமான பயிற்சிக்கல்லூரியில் விமானியாக பயிற்சி முடித்தார்.

பிறகு ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் 2017-ஆம் ஆண்டு சேர்ந்த அவர், 2018-ஆவது ஆண்டில் மேகாவை திருமணம் செய்து கொண்டார்.

நிறைமாத கர்ப்பிணியான மேகாவுக்கு இன்னும் 10 நாட்களில் குழந்தை பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர் கூறியுள்ளதால் அதிர்ச்சிகரமான தகவல் ஏதும் அவருக்கு தெரியக்கூடாது என அவர் உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினர் மறைத்துள்ளனர்.

தற்போதைக்கு கோழிக்கோடு விமான விபத்து நடந்துள்ளதாகவும், மேகாவின் கணவர் அகிலேஷ் உயிருடன் இருப்பதாகவும் மேகாவிடம் கூறியுள்ளதாக அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: