You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜெயலலிதா இல்லம்: கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு
முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்ற அவரது அண்ணன் மகள் ஜெ. தீபாவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது. ஜெயலலிதா இருந்தவரை ஜெ. தீபா எங்கே வசித்தார் என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவுசெய்தது.
அந்த வீட்டிற்கு 68 கோடி ரூபாய் இழப்பீடாக நிர்ணயம் செய்யப்பட்டு, அந்த தொகையை சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு செலுத்தியிருக்கிறது.
மேலும், வேதா நிலையத்தில் உள்ள அசையும், அசையா சொத்துக்களையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ. தீபா வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், இழப்பீடு நிர்ணியித்து விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும் அசையும் - அசையா சொத்துகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கவும் தீபா கோரியிருந்தார்.
ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளான தங்களிடம் கருத்து கேட்காமல் வீட்டைக் கையகப்படுத்தியிருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் ஒன்றும் கட்டப்பட்டுவரும் நிலையில், அவர் வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் தீபாவின் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ. தீபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தனியாரின் சொத்தான ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது என்றும் அந்த இல்லத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக வட்டார வருவாய் அலுவலர் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.
ஜெ. தீபா தரப்பின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை ஜெ. தீபா எங்கே இருந்தார், எங்கே வசித்தார் என கேள்வி எழுப்பினார். கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் நீதிபதி மறுத்துவிட்டார்.
மேலும் இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: