கொரோனா வைரஸ்: வெளிச்சத்துக்கு வராத இந்தியாவின் கொரோனா நாயகர்கள்

தீப் சந்த்
படக்குறிப்பு, தீப் சந்த்
    • எழுதியவர், விகாஸ் பாண்டே
    • பதவி, பிபிசி

ஜூன் மாதத்தில் ஒருநாளின் ஒரு காலைநேரத்தில், டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவுக்கு வெளியே கலக்கத்துடன் நின்றுகொண்டிருந்த ஒரு கோவிட்-19 நோயாளியின் குடும்ப உறுப்பினரை தீப் சந்த் கண்டார்.

கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி இருந்த தனது உறவினரின் நிலை குறித்து அறிய அந்த மருத்துவமனையின் ஒரு மருத்துவர் அல்லது செவிலியரிடம் பேச அவர் தீவிரமாக முயன்றார்.

ஆனால், அன்றைய தினமோ பல கொரோனா நோயாளிகள் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்ததாலும், சிலர் கவலைக்கிடமாக உள்ளதாலும், புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொண்டே இருந்ததாலும் அது மருத்துவர்களுக்கு மிகவும் மோசமான நாளாக இருந்தது.

எனவே, இவற்றையெல்லாம் கண்ட மருத்துவமனை உதவிப் பணியாளரான தீப் சந்த், அந்த நபரிடம் சென்று ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்டார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

ஆம், நான்தான் அந்த நபர், என் உறவினரின் உடல்நிலை குறித்து அறிவதற்காகதான் நான் அங்கு தவித்துக்கொண்டிருந்தேன். அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு அன்றுடன் மூன்று நாட்கள் ஆகியிருந்தது.

அவரது உடல்நிலை குறித்து தினமும் தொலைபேசியில் அழைத்து தகவல் கூறி வந்த மருத்துவர்கள், வேலைப்பளுவின் காரணமாக அன்றைய தினம் எங்களை தொடர்புகொள்ளவே இல்லை.

தீப் சந்த் என்னை நோக்கி வந்தபோது, அவர் பாதுகாப்பு கவச உடைகளை அணிந்திருந்ததால் நான் அவரை ஒரு மருத்துவர் என்று தவறாக நினைத்து, அவரிடம் பல கேள்விகளை கேட்டேன்.

"நான் ஒரு மருத்துவமனை உதவிப் பணியாளர், என்னால் இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று அவர் கூறினார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

நான் அப்போது கடுமையாக பேசியிருந்தாலும், அவர் எனக்கு மென்மையாக, எவ்வித எரிச்சலும் இல்லாமல் பதிலளித்தார்.

பிறகு, என் உறவினரின் இரத்த ஆக்சிஜன் அளவு சீராக இருப்பதாக அவர் கூறினார்.

நான் இப்படித்தான் 28 வயதாகும் தீப் சந்த்தை சந்தித்தேன். ஒரு மருத்துவமனையின் அதிகார படிநிலையில் இவரை போன்றவர்கள் மிகவும் கீழ்நிலையில் இருக்கிறார்கள். மேலும், எவ்வித தொழில்முறை மருத்துவ பயிற்சியும் இல்லாத இவர்களது பணி மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் மற்றும் நோயாளிகளுக்கும் உதவுவதே ஆகும்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

சோதனைகளுக்கான மாதிரிகளை எடுப்பது, நோயாளிகளுக்கு எக்ஸ்-ரே எடுக்க அவர்களை சக்கர நாற்காலியில் அழைத்துசெல்வது, அவர்களுக்கு உணவு பரிமாறுவது, சில சமயங்களில் அவர்களுடன் பேசுவது போன்ற அனைத்தும் இதில் அடங்கும். குழப்பத்தையும், தவிப்பையும் உண்டாக்கியுள்ள இந்த நோய்த்தொற்று பரவல் சமயத்தில், இந்த மருத்துவ உதவிப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு மட்டுமல்ல, அவர்களது குடும்பங்களுக்கும் ஆதரவளிக்கும் ஆதாரமாக மாறிவிட்டனர்.

எங்களது ஒட்டுமொத்த குடும்பமும் கலக்கமடைந்திருந்த சூழ்நிலையில், தீப் சந்த் கொடுத்த தகவல் எங்களுக்கு பெரும் நிம்மதியை அளித்தது என்பதால் என்னால் அந்த சந்திப்பை மறக்கவே முடியாது.

இதைத்தொடர்ந்து, எப்போதெல்லாம் மருத்துவர்களும், செவிலியர்களும் பரபரப்பாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் அடிக்கடி தீப் சந்த் மற்றும் அவருடன் பணிபுரியும் மற்ற உதவியாளர்களின் உதவியை நாடி இருந்தோம்.

ஜூன் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை அடைந்து வந்ததால் அங்குள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் கிடைப்பதில் பெரும் பிரச்சனையும், தகவல் பெறுவதில் சிக்கலும் நிலவிய குழப்பான சூழ்நிலையில், தீப் சந்த் போன்றவர்களே நோயாளிகளின் குடும்பத்தினருக்கு பெரும் உதவிகரமாக இருந்தனர்.

தீப் சந்த் போன்ற மருத்துவமனை உதவிப் பணியாளர்கள் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு தகவலும் ஆறுதலும் சொல்வதையும், குடும்பத்தினர் கூறும் தகவல்களை அலைபேசியில் பேச முடியாத நிலையிலுள்ள நோயாளிகளுக்கு கொண்டு சேர்ப்பதிலும் பெரும் பங்கு வகிதத்தை நான் பலமுறை கண்டேன்.

"அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை, எங்களால் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது" என்ற மருத்துவர்களின் கூற்றுகள் சூழ்நிலையை பிரதிபலிப்பதை போன்று இருந்தது.

ஆனால், "நீங்கள் கவலைப்பட வேண்டாம், நான் இவரைவிட மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகள் குணமடைந்ததை பார்த்திருக்கிறேன்" என்பது போன்ற மருத்துவமனை உதவியாளர் அளிக்கும் தகவல்கள் நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைகின்றன.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

மருத்துவர்கள் "எதுவும் நடக்கலாம்" என்று மீண்டும் மீண்டும் சொல்லும்போது, மனம் உங்களை இருண்ட இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது. இது எனக்கு எல்லாவற்றையும் சந்தேகிக்க வைத்தது.

நாங்கள் சரியான மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தோமா? வெண்டிலேட்டர் பொருத்துவதற்கு முன்னர் அவரை சமாதானப்படுத்துவதற்குப் பதிலாக நாம் அவர் சொன்னதை கேட்டிருக்க வேண்டுமா? ஏனெனில், வெண்டிலேட்டர் வேண்டாமென்று அவர் உறுதியாக இருந்தபோது, மருத்துவர்கள் வீணடிக்க அதிக நேரம் இல்லை என்று கூறிக்கொண்டே இருந்ததால் இதில் முடிவெடுப்பது மிகவும் கடினமானதாக இருந்தது.

மருத்துவர்களிடம் நேரடியாக பேச முடியாத சூழ்நிலைகளில், தீப் சந்தின் வார்த்தைகள் மிகவும் ஆறுதல் அளிப்பவையாக இருந்தன.

இவையெல்லாம் நடந்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், சமீபத்தில் தீப் சந்த்திடம் பேசியபோது, தான் நோயாளிகளின் குடும்பத்தினரின் வலியை உணருவதாகவும், ஆனால் தகவல் தொடர்பை அதிகரிப்பதற்கு பெரிதாக எதுவும் செய்ய முடியாத நிலையில், மருத்துவர்களும் செவிலியர்களும் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

"அவர்கள் மிகவும் வேலைப்பளுவுடன் இருந்தாலும், மிகவும் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினருக்கு நாளைக்கு ஒருமுறையாவது தகவல் தெரிவிக்க முயற்சிக்கிறார்கள். இது யாருடைய தவறும் கிடையாது. ஏனெனில், இப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவில்லை" என்று அவர் கூறுகிறார்.

மாறாக, தீப் சந்த்தும் அவரை போன்ற உதவிப் பணியாளர்களும் நோயாளிகள் குறித்த தங்களாலான தகவல்களை தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தி வருகின்றனர்.

"திரையில் ஆக்ஸிஜன் அளவை என்னால் காண முடிகிறது. அந்த தகவலை நோயாளிகளின் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கு எவ்வித பிரச்சனையுமில்லை" என்று தீப் சந்த் கூறுகிறார்.

இவரை போன்ற பணியாளர்கள் குடும்பத்தினரிடமிருந்து உணவு, கடிதம் போன்றவற்றை பெற்று நோயாளிகளுக்கு சென்று கொடுப்பதை நான் பார்த்துள்ளேன்.

கொரோனா வைரஸ்

சுமார் ஐந்தாண்டுகளாக மருத்துவமனை உதவிப் பணியாளராக இருக்கும் தனது பணியாற்றும் முறையையே கொரோனா வைரஸ் பரவல் அடியோடு மாற்றிவிட்டதாக கூறும் தீப் சந்த், பாதுகாப்பு கவச உடைகளை தினமும் 10-12 மணிநேரங்கள் அணிவது மிகவும் அசௌகரியமானது என்றாலும் அது கோவிட்-19 நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனுபவிக்கும் துயரத்தை விட குறைவானது என்று கூறுகிறார்.

ஒருநாள் எனது உறவினர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துமனைக்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தபோது நடந்த உரையாடலை கேட்ட தீப் சந்த்துடன் பணிபுரியும் சக ஊழியரான அமித் குமார் தலையாட்டியப்படி, அனைத்திற்கும் 'ஆமாம்' என்கிறார்.

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"ஒருசில நேரங்களில் நோயாளி இன்று சரிவர உணவு சாப்பிட்டார், காலையில் புன்னகைத்தார் என்று கூறும் மிகச் சிறிய விடயங்கள் கூட குடும்பத்தினருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதை நான் பார்த்திருக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

நாடுமுழுவதும் இதுபோன்ற மருத்துவமனை உதவிப் பணியாளர்கள் தினமும் தங்களது உயிரை பணயம் வைத்தே பணிக்கு வருகின்றனர். இதுவரை அவர்களில் நூற்றுக்கணக்கானோருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சிலர் உயிரிழந்தும் உள்ளனர். இதனால், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான போரில் அவர்களது பங்கு அளவு கடந்ததாக உள்ளது.

அதே சமயத்தில், இதுபோன்ற அச்சுறுத்தல் எதையும் கருதாமல் பணிபுரியும் தீப் சந்த் போன்றோர் தாங்கள் எவ்வித சிறப்பு அங்கீகாரத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

எனினும், கடந்த மார்ச் மாதம் கொரோனா சிகிச்சை பிரிவில் தான் பணியாற்ற வேண்டுமென்று மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது, "நான் என் பாதுகாப்பு மட்டுமின்றி என் குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்தும் கவலை கொண்டேன்" என்று அவர் ஒப்புக்கொள்கிறார்.

"அனைத்து நோயாளிகளும் ஏதோ ஒரு குடும்பத்தின் உறுப்பினர்தானே" என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் ஏப்ரல் மாதம் முதல் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்ற தொடங்கியதாகவும், அதன் பிறகு இதிலிருந்து விலக வேண்டுமென்று ஒருமுறைகூட நினைத்ததில்லை என்றும் அவர் கூறுகிறார்.

வார்டு பாய்ஸ் என்றழைக்கப்படும் மருத்துவமனை உதவிப் பணியாளர்களின் பணிக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவிக்கிறார்கள். "மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சை பிரிவுகளின் மிக முக்கிய அங்கமாக இவர்கள் விளங்குகின்றனர்" என்கிறார் டெல்லியிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் சுஷிலா கட்டாரியா.

வரைபடம்

உலகம் முழுவதும் உறுதி செய்யப்பட்ட தொற்றுகள்

Group 4

முழுமையாக பார்க்க பிரௌசரை அப்டேட் செய்யுங்கள்

ஆதாரம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம், தேசிய பொது சுகாதார முகமைகள்

கடைசியாக பதிவு செய்யப்பட்டது 5 ஜூலை, 2022, பிற்பகல் 1:29 IST

"இந்த நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மருத்துவர்கள் மற்றும் செவியாளர்களை போலவே இவர்களும் ஹீரோக்கள்தான்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால், மருத்துமனைகளில் பணியாற்றுபவர்களிலேயே குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களில் இவர்களும் அடக்கம். உதாரணமாக, பீகாரிலுள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உதவியாளராக பணியாற்றும் சோஹன் லாலுக்கு ஒரு மாத ஊதியம் வெறும் ஐந்தாயிரம் ரூபாய்தான்.

அபாயம் நிறைந்த கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றுபவர்களுக்கு இது மிகவும் குறைந்த ஊதியமென்று அவர் கூறுகிறார். "ஆனால், இதை தவிர்த்து எனக்கு வேறெந்த வேலையும் இல்லாததால் நான் இதையே தொடர்ந்து செய்து வருகிறேன். எனது பணியின் முக்கியத்துவமும் எனக்கு புரிகிறது."

கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், Getty Images

"மருத்துவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் வார்டுக்கு வருவது மிகவும் அரிதானதே. எனவே, நோயாளிகள் தங்கள் செய்திகளை மருத்துவர்களுக்கு தெரிவிக்க எங்களை போன்றவர்களையே நம்பியிருக்கிறார்கள். சிலநேரங்களில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நாங்களே நோயாளிகளுக்கு மருந்துகள் அளிப்பதும் உண்டு" என்று அவர் கூறுகிறார்.

நோயாளிகளின் இறப்பை வெகு அருகிலிருந்து பார்க்க வேண்டியிருக்கலாம் என்பதே இவர்களது பணியில் மற்றொரு மிகப் பெரிய சவால். தான் பராமரித்து வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தால் அது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக தீப் சந்த் கூறுகிறார்.

"சில நேரங்களில் நோயாளிகள் எங்களுடன் இரண்டு வாரங்களுக்கு தங்கி கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தைப் போலவே ஆகிவிட்ட பின்னர் இறந்துவிடுவார்கள்," என்று அவர் கூறுகிறார்.

ஆனால், "நாங்கள் கொரோனாவை தோற்கடிக்கும் வரை அல்லது அது என்னைத் தோற்கடிக்கும் வரை" தனது பணியை நிறுத்தப்போவதில்லை என்று அவர் நம்பிக்கையுடன் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: