EIA 2020, புதிய கல்விக்கொள்கை, மின்சார திருத்தச் சட்டம்: கொரோனா நெருக்கடியை அரசு சாதகமாக பயன்படுத்துகிறதா?

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

ஒரே நாடு, ஒரே கல்வி என்ற புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அதேபோல மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற அமைச்சகத்தின் பெயரை, மத்திய கல்வி அமைச்சகம் என்று மாற்றவும் ஒப்புதல் வழங்கியுள்ளது.

1986ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, கடைசியாக 1992ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட கல்விக் கொள்கை மாற்றப்பட்டு, தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கை அமல்படுத்தப்படும்.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது.

இந்தியாவுக்கான புதிய கல்விக் கொள்கையை வெளியிடுவதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் மத்திய அரசு 2017ஆம் ஆண்டில் குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழு 2019ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதியன்று தேசியக் கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.

இந்த அறிக்கை கூட்டாட்சித் தத்துவதிற்கு எதிராக இருப்பதாகவும் ஒற்றை நாடு - ஒற்றைக் கல்வி முறையை நோக்கி இந்தியாவைத் திருப்புவதாகவும் கூறி தமிழகத்தில் உள்ள கல்வி ஆர்வலர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைப் பதிவுசெய்தனர்.

இந்நிலையில்தான் இன்று இந்த புதிய கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

"கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வரமாட்டார்கள், குறைந்த எதிர்ப்பே இருக்கும் என்ற நிலையைப் பயன்படுத்தி ஆளும் பாஜக அரசு தற்போது இந்தக் கொள்கையை நிறைவேற்றி இருக்கிறது. குறிப்பாக புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில்தான் அதிக எதிர்ப்பு இருந்தது. இந்த கொரோனா நெருக்கடியை அரசு தனக்கு சாதகமாக பயன்படு்த்திக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது" என்கிறார் கல்வியியல் பேராசியர் ரத்தின சபாபதி

நிதி சட்டம் 2020

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட மற்றோரு விஷயம் நிதி மசோதா.

மார்ச் 27ஆம் தேதி குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, புதிய நிதி சட்டம் ஏப்ரல் 1, 2020ல் இருந்து அமலுக்கு வந்தது.

இதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டது. மத்திய அரசின் நடப்பாண்டு பட்ஜெட்டை நடைமுறைப்படுத்த வகைசெய்கிறது இந்த நிதி மசோதா

நிதி சட்டம் 2020

பட மூலாதாரம், Getty Images

நிதி மசோதா என்பது அரசின் செலவினங்களுக்கு சட்டப்படி ஒப்புதல் தெரிவிப்பதற்கானதாகும். மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால்தான் வரும் நிதியாண்டிற்கான தொகையை அரசு செலவு செய்ய முடியும்.

நிதி மசோதாவை மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்ய அந்த மசோதா மீது, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசி, அவர்களின் கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.

ஆனால், இந்த ஆண்டு மசோதா தாக்கல் செய்யும்போது நடைபெறும் விவாதம், மத்திய அமைச்சரின் உரை எதுவும் இல்லாமல் அவசர அவசரமாக தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேசுகையில், ''நாடு அசாதாரண சூழலை எதிர்கொண்டுள்ளதால், நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்

புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு 

புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவு 

பட மூலாதாரம், Getty Images

மத்திய அரசு விரைவில் கொண்டுவர உத்தேசித்திருக்கும் புதிய மின்சார திருத்தச் சட்டத்திற்கான வரைவும் கொரோனா வைரஸ் நெருக்கடி காலத்தில்தான் வெளியிடப்பட்டது.

2003ஆம் ஆண்டின் மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்களைச் செய்வதற்கான புதிய திருத்தச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவுச் சட்டம் ஏப்ரல் 17ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது.

இந்த புதிய மின்சார சட்டத் திருத்த மசோதாவின்படி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முற்படுகிறது என்றும் இது அரசியலமைப்பின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்று செயற்பாட்டாளர்கள், அரசியல் எதிர்ப்பாளர்கள் கூறினர்

வரைவு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் பழனிசாமியும் பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசின் புதிய திருத்தங்கள் மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிப்பதாக உள்ளன என அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ''அனைத்து மாநிலங்களும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகின்றன என்பதால் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு விரிவான பதிலைக் கொடுக்க சிறிது காலம் தேவைப்படும். அதே நேரத்தில் மின்சார சட்டத்தில் எந்தவொரு அவசரத் திருத்தங்களும் மாநில மின் பயன்பாடுகளுக்கு சிரமங்களை ஏற்படுத்தக்கூடும், அவை தற்போதைய தொற்றுநோயால் கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்கின்றன. வரைவு திருத்த மசோதாவின் சில விதிகள் பொது மக்களை கஷ்டத்திற்கு உள்ளாக்கக்கூடும் என்பதால், குறிப்பாக இந்த நெருக்கடி காலத்தில், மின்சார சட்டத்தில் இதுபோன்ற பெரும் திருத்தங்களை கொண்டு வர இது சரியான தருணம் அல்ல என கருதுகிறேன்,'' என முதல்வர் பழனிசாமி அதில் குறிப்பிட்டிருந்தார். 

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 

சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020 

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில் சமூக ஊடகங்களில் பெரும் கவனத்தை பெற்றது இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு.

கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன என்பது செயற்பாட்டாளர்களின் கருத்து.

இந்தியாவில் பெருநிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளைத் தொடங்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் அனுமதி பெற வேண்டும். அதன்படி, சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 அறிவிக்கைப்படி திட்டம் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயார் செய்ய வேண்டும். பிறகு, மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும். அரசு இவற்றை ஆய்வு செய்து, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத திட்டமாக இருப்பின் அனுமதி வழங்கவோ, இல்லாதபட்சத்தில் அனுமதி மறுக்கவோ செய்யும்.

இந்நிலையில், சூழலியல் தாக்க மதிப்பீடு 2006 சட்டத்தினை நிறுவனங்களுக்கு ஏற்றவாறு மத்திய அரசு மாற்றி அமைக்க முனைகிறது என்று சூழலியல் செயற்பாட்டாளர்கள் தற்போது குற்றஞ்சாட்டுகிறார்கள்.

மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புதிய வரைவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன. அது முழுக்க பெருநிறுவனங்கள் நலனை மட்டுமே பேணுவதாக இருக்கிறது என்கிறார்கள் அவர்கள். 

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: