அனுஜித்: உயிரோடு இருக்கும் போது ரயில் விபத்தை தடுத்தார், செத்த பின்பும் பலருக்கு வாழ்வு கொடுத்தார் - கேரளா கொண்டாடும் நாயகன்

சிலர் வாழும் போது படைக்கும் வரலாற்றைவிட, இறக்கும் போதும் வரலாறு படைப்பார்கள். அப்படியான ஒருவர்தான் 27 வயதான அனுஜித்.

மூளை செயலிழப்பு

கோவிட் 19 தொற்று காலத்தில் தனது வேலையை இழக்க, வேறு வேலை தேடிக் கொண்டிருந்த அனுஜித், வேலை தேடுவதற்காகக் கடந்த வாரம் செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார்.

அவரது மூளை செயலிழந்துவிட்டதாகக் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் அவர் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனை அறிவித்தது.

இதனையடுத்து அனுஜித்தின் ஆசைப்படி, அவரது இரு விழிப்படலங்கள், இருதயம், இரு சிறுநீரகங்கள், சிறுகுடல் மற்றும் கைகள் ஆகியவை எட்டு பேருக்கு தானம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு நோயாளிகளில் 3 பேர் கொச்சியைச் சேர்ந்தவர்கள்.

ரயில் விபத்தை தடுத்து நிறுத்தியவர்

10 ஆண்டுகளுக்கு முன்னர், பெரும் ரயில் விபத்தைத் தடுத்து நிறுத்தி நூற்றுக்கணக்கான பயணிகளைக் காப்பாற்றிய பெருமை அனுஜித்துக்கு உண்டு.

அவருக்கு 17 வயது இருக்கும்போது 2010ஆம் ஆண்டு தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயின்று கொண்டிருந்தபோது, கொட்டக்கரை அருகே ரயில் தண்டவாளத்தில் விரசல் இருப்பதை அனுஜித் பார்த்துள்ளனர்.

உடனே ரயில் வரும் பாதை நோக்கி ஓடிய அனுஜித், தனது சிவப்புநிற புத்தகப்பையைக் காண்பித்தவாறு தண்டவாளத்தில் ஓடி ரயிலை நிறுத்தினார்.

"10 ஆண்டுகளுக்கு முன் பல உயிர்களைக் காப்பாற்றிய அனுஜித், தற்போது எட்டு பேருடன் வாழ்கிறார்" என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பேருக்கு தானம் அளிக்கப்பட்ட அனுஜித்தின் கைகள், அதுதவிர சிறுகுடல் மற்றும் இருதயம் ஆகியவை ஹெலிகாப்டர் மூலம் கொச்சியில் உள்ள இரு மருத்துவமனைகளில் நான்கு நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளது.

இரு கண்விழிப்படலங்களும் கேரளா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிகல் சைன்ஸில் உள்ள இரு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

உடல் உறுப்புகளை விரைவில் கொண்டு செல்ல அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ஹெலிகாப்டர் சேவைக்கு உத்தரவிட்டிருந்தார்.

அனுஜித்தும் கெல்வினும்

அனுஜித்தை போலவே எர்ணாகுளத்தை சேர்ந்த 39 வயதான கெல்வின் ஜாயும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழக்க, அவரது உடல் உறுப்புகளும் தானமாக வழங்கப்பட்டது.

கெல்வினின் இருவிழிப்படலங்கள், இருதயம், இரு சிறுநீரகங்கள், சிறுகுடல், கைகள் மற்றும் கல்லீரல் ஆகியவை தானமாக வழங்கப்பட்டது.

கெல்வின் கடந்த சனிக்கிழமை அன்று அம்ரிதா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

முதல்முறை

மூளை செயலிழந்து உயிரிழந்த நபர்களின் உறுப்புகள் எட்டு பேருக்கு வழங்கப்பட்டிருப்பது இதுவே இந்தியாவில் முதல்முறை என கேரள அரசின் உறுப்புதான திட்டத்தின் நோடல் அதிகாரியான மருத்துவர் நோபல் கிரேசியஸ் பிபிசி இந்தி சேவையிடம் தெரிவித்தார்.

"கேரளாவில் ஒருவரிடம் இருந்து எட்டு பேருக்கு உறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு உயிரிழந்த ஒருவரின் உறுப்புகள் அதிகபட்சம் ஆறு பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக மூளைச்சாவு அடைபவர்களின் உறுப்புகள் சுமார் 5 பேருக்கு உதவும்" என்று நோபல் குறிப்பிட்டார்.

உறுப்புதானம் பெற்ற நபர்களுக்கு அது சரியாகப் பொருந்தியதா அல்லது ஏதேனும் எதிர்வினை உள்ளதா என்பதை 10 நாட்களுக்கு பிறகே கூற முடியும் என்று தெரிவித்த மருத்துவர் நோபல், தானம் பெற்றவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :