You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
N-95 முகக்கவசம்: வால்வ் உள்ள கொரோனா வைரஸ் மாஸ்க் குறித்து இந்திய அரசு புதிய எச்சரிக்கை
வால்வுகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசத்தை பொதுமக்கள் அணிவதைத் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு இந்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவை பொது இயக்குநர் ராஜீவ் கார்க் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், இந்த முகக் கவசங்கள் தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.
N-95 முகக்கவசம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் N-95 முகக்கவசங்கள்தான் மற்ற முகக்கவசங்களை விட பாதுகாப்பானது என பேசப்பட்டது. இது தொடர்பாக ஊடக செய்திகளும் வெளிவந்தன.
இந்தநிலையில், "வால்வ் வைத்து பயன்படுத்தப்படும் N-95 மாஸ்க்குகள், கொரோனா தொற்றுப் பரவல் குறித்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது." என ராஜீன் கார்க் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
காற்று வெளியே வந்து செல்ல வசதியாக முகக்கவசத்தில் அமைக்கப்படும் வால்வுகள் பிரத்தியேகமாக மருத்துவத் துறையினருக்காக தயாரிக்கப்படுவை என்றும், அந்த முகக்கவசங்களை பொதுமக்கள் தவறான முறைகளில் பயன்படுத்துவதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
என்ன சொல்கிறது மத்திய சுகாதாரத் துறை?
அந்த கடிதத்தில், "என்-95 முகக்கவசத்தின் பொருத்தமில்லாத வகையில் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. குறிப்பாக வால்வுடன் கூட முகக்கவசங்களை நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் தவிர பொதுமக்களும் பயன்படுத்துகின்றனர். சில என்-95 முகக்கவசங்களில் இருக்கும் வால்வுகள் ஒரு வழி திறப்புப் பாதை கொண்டதாக இருக்கும்."
"அதாவது உள்ளே இருந்து காற்று எளிதாக வெளியேறும் வகையில் இருக்கும். அது வடிகட்டப்படாது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட என்-95 முகக்கவசங்களை அணிந்தால், அந்த முகக்கவசத்தை அணிபவருக்கு வேண்டுமானால் கொரோனா பரவாது. ஆனால், அணிந்திருப்பவருக்கு கொரோனா இருந்தால் அது பிறருக்கு பரவும்," என குறிப்பிட்டுள்ளார்.
துணியால் செய்த முகக்கவசங்கள்
மேலும், "பொதுமக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரும்போது சாதாரண துணியால் செய்த முகக்கவசத்தை அணிவதே சிறந்தது என்றும், அந்த முகக்கவசம் மூக்கு மற்றும் வாய்ப் பகுதிக்கு அருகே மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் ஏப்ரல் மாதம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
முகக் கவசங்களை பிறருடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனித் தனி முகக் கவசங்களைப் பயன்படுத்துங்கள். முகக் கவசங்களைப் பயன்படுத்தும் முன் கைகளை நன்றாகக் கழுவிக் கொள்ளுங்கள்," என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாஸ்க்குகளை சோப்புப் போட்டுத் துவைக்கலாம் என்றும் ஐந்து நிமிடம் கொதிக்கும் தண்ணீரில் போட்டு எடுப்பது நல்லது என்றும், அந்த தண்ணீரில் உப்புப் போட்டுக் கொதிக்க வைப்பது இன்னும் சிறந்தது என்றும் யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :