You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கந்த சஷ்டி கவசம்: அதிமுகவை விமர்சிக்கும் பாஜக - தமிழக அரசியல் கூட்டணியில் முரண்?
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அதிமுக அரசை கடுமையாக எச்சரித்து கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் பக்கத்தில் கந்த சஷ்டி கவசம் பாடலை விமர்சித்து வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக இந்து மத அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
பெரியார் சிலை மீது காவிச் சாயம்
இந்த நிலையில் கோவையில் உள்ள பெரியார் சிலை மீது காவிச் சாயம் பூசப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில், நகரின் முக்கிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று இந்து கோவில்களின் வாசலில் டயர் எரிக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவமும் நடந்தது. இதனை கண்டித்து பா.ஜ.க உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.
இதன் ஒருபகுதியாக பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், திங்களன்று, கோவையில்செய்தியாளர்களை சந்தித்தபோது தனது கண்டனங்களை பதிவு செய்தார். அப்போது, அதிமுக அரசு குறித்து கடுமையான கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக தவறு செய்கிறது
"கோவையில் கடந்த காலத்தில் நடந்த கொடூரம் மீண்டும் நடைபெறுவதை சமீபத்தில் நடந்த அறிகுறிகள் காட்டுகின்றது. கோயில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் மாநில அரசு மெத்தனப் போக்குடன் செயல்படுகின்றது இது கண்டனத்திற்குரியது. கோவில் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் காவல் துறையினரை சுதந்திரமாக இந்த அரசு செயல்பட விடவில்லை" என குற்றம்சாட்டினார்.
"திமுக கடந்த காலங்களில் செய்த அதே தவறைத் தான் அதிமுகவும் செய்கின்றது. இந்துக்களுக்கு எதிரான செயல்களை திராவிட இயக்கங்கள் கண்டிப்பதில்லை. இந்துக்களுக்கு எதிரான கருத்துகளை சொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், ஈபிஎஸ் தலைமையிலான அரசு வரும் தேர்தலில் வெற்றிபெறாது" எனக் கூறினார்.
மேலும், இந்துக்களுக்கு எதிரான விவகாரத்தில் மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனில் மத்திய அரசு மூலம் மாநில அரசை நிர்பந்திப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராதாகிருஷ்ணனின் செய்தியாளர் சந்திப்பின்போது வானதி சீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :