You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் மழைக்காலம்: கொரோனா அதிகரிக்குமா? அல்லது குறையுமா?
கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய காலத்தில் இந்தியாவில் நிலவும் வெப்பநிலை காரணமாக அந்த வைரஸின் தீவிரம் குறைந்துவிடும் எனப் பலரும் கூறி வந்தனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கடுமையான வெப்பம் இருந்தும் , கொரோனா வைரஸ் பரவல் எந்த விதத்திலும் குறையவில்லை.
தற்போது இந்தியாவில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை காரணமாக கொரோனா பரவல் வேகமெடுக்கும் என்ற தகவலும் பரவத் தொடங்கியுள்ளது. இந்த தகவல் உண்மையா?
வைரஸ் தொற்றின் வேகம் என்பது காலநிலை,மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் அந்த வைரசின் குணாதிசயம் ஆகிய மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படும். கொரோனா வைரஸ் போலவே அறிகுறிகளைக் கொண்டிருக்கும் இன்புளூயன்சா வைரஸ் தொற்று மழைக்காலத்தில்தான் அதிகம் பரவுகிறது என அமெரிக்காவின் நோய் மற்றும் கட்டுப்பாடு அமைப்பு கூறுகிறது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு மருந்து எப்போது கிடைக்கும்?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் : இதுவே கடைசி கொள்ளை நோய் அல்ல
- கொரோனா வைரஸ்: கோவிட் - 19 பற்றி நமக்கு தெரியாத விஷயங்கள் என்ன?
நுரையீரலைத் தாக்கும் வைரஸ்களின் அறிகுறிகள் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அவற்றை ஒரே மாதிரி அணுக முடியாது உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
மழைக்காலம் -கொரோனா வைரஸ்: தொடர்பு என்ன?
வெதர் இணையதளத்தில் வெளியாகியுள்ள ஓர் கட்டுரையில், சமீபத்தில் மும்பை ஐஐடியில் நடைபெற்ற ஆய்வில் ஈரப்பதமான காலநிலை கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு தலைகீழாக, கனடியன் மெடிக்கல் அசோசியேசன் சஞ்சிகையில் வெளியான கட்டுரை ஒன்றில், காலநிலை மாற்றத்திற்கும், கொரோனா பரவுவதற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என கூறப்பட்டுள்ளது.
எனவே காலநிலைக்கும், கொரோனா பரவுவதற்கும் இடையிலான தொடர்பில் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன. தற்போதுதான் கொரோனா வைரஸின் குணாதிசயங்களை ஆராய்ச்சியாளர்கள் படிப்படியாக அறிந்து வருவதால், இந்த குழப்பத்திற்கான துல்லியமான தீர்வை அளிக்க இன்னும் சில காலம் ஆகலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மழைக்காலம் உதவுமா?
அறிவியல் காரணங்கள் தவிர்த்து, நடைமுறை வாழ்க்கையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மழைக்காலம் ஓரளவுக்கு உதவலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
''சாலையில் எச்சில் துப்புவதால், அதன் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. ஆனால் மழைக்காலத்தில் இந்த எச்சில்கள் மழைநீர் மூலம் சாலைகளிலிருந்து அடித்துச் செல்லப்படும் என்பதால் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்'' என மும்பையைச் சேர்ந்த விஞ்ஞானி சுபோத் சென் என்பவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் மழைக்காலங்களில் மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள் அதிகம் இருப்பார்கள் என்பதால் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் குறையலாம் எனவும் சுபோத் சென் அந்த பேட்டியில் குறிப்பிடுகிறார்.
நடைமுறை சிக்கல்களை உருவாக்குமா மழைக்காலம்?
''கடந்தாண்டு இதே மழைக்காலத்தில் கேரளாவில் பெருவெள்ளம் ஏற்பட்டு மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்படும் நிலையை அடைந்தனர். இந்த ஆண்டில் பருவ மழையானது வழக்கமான அளவிலிருந்தால் நமக்குப் பிரச்சனைகள் இருக்காது. ஒருவேளை அது பெருமழையாக மாறி, வெள்ளத்தை ஏற்படுத்தினால் மக்கள் கூட்டமாக முகாம்களில் தங்க வேண்டிய சூழல் வரும். இதனால் கொரோனா தொற்று பரவும் வாய்ப்புகளும் அதிகரிக்கலாம் '' என வைராலஜி நிபுணரான சித்ரா பட்டாபிராமன் ஆஃப்டோலைன் என்ற இணையதளத்திற்கு எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
வரும் நாட்களில் மழைக்கால நோய்களான டெங்கு,சிக்கன்குனியா,மலேரியா,டைபாய்டு போன்றவை பரவத் தொடங்கலாம். ஏற்கனவே கொரோனா காரணமாக அழுத்தத்தில் இருக்கும் நம் மருத்துவ கட்டமைப்பு, இதனால் மேலும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம் என அவர் அந்த கட்டுரையில் எச்சரித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :