தமிழ்நாடு மின் கட்டணம் அதிகமாக இருப்பதாக தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

பட மூலாதாரம், Getty Images
ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் மின் கட்டணம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தவறான கணக்கீட்டு முறையால் இது நடப்பதாகவும் தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மார்ச் - ஏப்ரல் மாதத்தில் ஊரடங்கின் காரணமாக, ஒவ்வொரு இல்லமாகச் சென்று மின்சாரப் பயன்பாடு குறித்த கணக்கெடுப்பை தமிழ்நாடு மின் வாரியம் மேற்கொள்ளவில்லை. அதனால், மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு முந்தைய மாதக் கட்டணத்தையே செலுத்தலாம் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்திருந்தது.
இதற்கு அடுத்த முறை மின்சாரப் பயன்பாடு கணெக்கெடுக்கப்படும்போது இரு சுற்றுகளுக்கும், அதாவது நான்கு மாதங்களுக்கு சேர்த்து எடுக்கப்படும் என்றும் நான்கு மாதங்களுக்கான கட்டணத்தில், முன்பு செலுத்திய தொகை கழித்துக்கொள்ளப்பட்டு, மீதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மின் வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால், இந்த முறையில் கட்டணம் கணக்கிடப்பட்டபோது, பலருக்கும் பெரும் தொகை மின் கட்டணமாகக் கணக்கிடப்பட்டிருப்பதாக பலர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியைச் சேர்ந்த எம்.எல். ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்திருந்தார்.


ஊரடங்கிற்கு முன்பாக தான் 480 யூனிட் மின்சாரம் பயன்படுத்திய நிலையில், அதற்குக் கட்டணமாக 1,070 கட்டியதாகவும் அதன் பின்னர் ஊரடங்கு காலத்தில் மின்சார கணக்கெடுப்பு செய்யப்படாததால், முந்தைய கட்டணமான 1,070 ரூபாயை மீண்டும் கட்டியதாகவும் ரவி தன் மனுவில் தெரிவித்திருந்தார்.
ஊரடங்கு காலத்திற்குப் பிறகு மீண்டும் மின்சாரக் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டபோது நான்கு மாதங்களுக்கு (அதாவது இரண்டு கணக்கீட்டு காலம்) 1,240 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாக பதிவுசெய்யப்பட்டது.
இதனால், இந்த 1240 யூனிட், தலா 620 யூனிட்டுகளாக இரண்டாகப் பிரிக்கப்பட்டு அதற்குரிய தொகை கணக்கிடப்பட்டது. இந்தக் கணக்கீட்டு முறையால், இந்த இரண்டு கணக்கீட்டு காலத்திலும் தான் 500 யூனிட்டுக்கும் அதிகமாக பயன்படுத்தியதாகக் கணக்கிடப்பட்டு 2,572 ரூபாய் மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதாவது, முதல் 100 யூனிட்டுகள் இலவசம், 101 முதல் 200 யூனிட்டுகள் வரை யூனிட்டிற்கு ரூ. 3.5, 201 முதல் 500 யூனிட் வரை யூனிட்டிற்கு ரூ. 4.60, 501 முதல் 620 யூனிட்டுகள் வரை யூனிட்டுக்கு ரூ. 6.60 என்ற அடிப்படையில் மின்வாரியம் கணக்கீடு செய்தது. ஆகவே ஒரு கணக்கீட்டு காலத்திற்கு 2,572 ரூபாய் என்ற வீதத்தில் இரண்டு கணக்கீட்டு காலத்திற்கு 5,144 ரூபாய் மின்கட்டணமாக செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் கூறியது. முந்தைய மின்கட்டணமாக அவர் செலுத்திய 1,070ஐக் கழித்துக் கொண்டு மீதத் தொகையைச் செலுத்தும்படி மின்வாரியம் கூறியது.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், மின் பயன்பாடு கணக்கிடப்படாத முதல் கணக்கீட்டுக் காலத்துக்கு மின்வாரியம் 480 யூனிட்டுக்கான கட்டணத்தையே மின்வாரியம் தன்னிடம் வசூலிக்க வேண்டும். அடுத்த இரண்டு மாத காலத்துக்கு 760 யூனிட்டிற்கான கட்டணத்தை கணக்கிட்டிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் முதல் கணக்கீட்டுக் காலத்துக்காவது மின்சாரப் பயன்பாடு 500 யூனிட்டுக்கு கீழ் இருந்தது என்ற வகையில் கட்டணம் குறைவாக வந்திருக்கும்.
ஆனால், மின்சார வாரியம் மொத்த யூனிட்களை இரண்டாக சரி சமமாகப் பிரித்துக் கணக்கிட்டதால் தான் கூடுதலாக 578 ரூபாய் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். இதுபோலவே, வழக்கமாக 500 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்திவந்தவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், கணக்கீடு எடுக்கப்படாததால் ஒருவர் முதல் கணக்கீட்டுக் காலத்தில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தியிருப்பார் என்பதைக் கணக்கிட வாய்ப்பில்லை. ஆகவே, இந்த முறையிலேயே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிலேயே இருந்ததால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்றும் மின்வாரியத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதித்த விதிமுறைகளின் அடிப்படையிலேயே இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் மின்வாரியத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் நீதிபதி சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் அரசுத் தரப்பின் விளக்கம் ஏற்கப்பட்டு, மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் தனியாக ஒரு இணைப்பு சார்ந்த பிரச்சனைகள் இருந்தால், அதனை மின்வாரியத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, தீர்த்துக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












