ராஜஸ்தான் காங்கிரஸ்: சச்சின் பைலட் “பாஜகவில் இணையப்போவதில்லை”

சச்சின் பைலட்

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், தான் பாஜகவில் சேரப்போவதில்லை என பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர தான் கடினமாக உழைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக ராஜஸ்தான் மாநில அரசியலில் சச்சின் பைலட்டை மையமாக கொண்டு பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து இந்தியா டுடே தொலைக்காட்சியிடம் பேசிய சச்சின் பைலட், முதலமைச்சர் அசோக் கெலோத் மீது தனக்கு எந்த கோபமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

"நான் அவர் மீது கோபமாக இல்லை. ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் என்ன உறுதியளித்ததோ அதை பூர்த்தி செய்ய விரும்புகிறோம். வசுந்திரா ராஜே குடும்பத்தினர் சட்டவிரோத சுரங்க நடவடிக்கையில் ஈடுபடுவதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். ஆனால் பதவிக்கு வந்த பிறகு கெலோத் இந்த விஷயம் தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு மாறாக அவர்களும் அதே பாதையில் செல்கின்றனர்," என தெரிவித்துள்ளார்.

Banner image reading 'more about coronavirus'
Banner

முன்னதாக, செவ்வாயன்று ராஜஸ்தான் மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

யார் இந்த சச்சின் பைலட்?

சச்சின் பைலட்டின் தந்தை ராஜேஷ் பைலட் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவராக ராஜேஷ் பைலட் பார்க்கப்பட்டார். சச்சின் பைலட்டின் தாயான ரமா பைலட் காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2002-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சச்சின் பைலட் இணைந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவராக பார்க்கப்பட்ட சச்சின் பைலட் 2014 ஜனவரி முதல் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்தார்.

2018-ஆண்டில் ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக சச்சின் பைலட் கருதப்பட்டார். ராஜஸ்தான் மாநில முதல்வராக அவர் தேர்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2018 டிசம்பரில் அவர் துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

அப்போது முதலே அவருக்கும் முதலமைச்சர் அசோக் கெலோத்துக்கும் கசப்பான உறவு நிலவி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :