Covaxin: ’தடுப்பு மருந்தில் அவசரம் காட்டுவது ஆபத்தானது’ - ஐசிஎம்ஆர்-ன் காலக்கெடுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இந்திய அறிவியல் அகாடமி

கோவாக்ஸின்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை பொதுமக்களுக்கு பயன்படுத்த ஆகஸ்டு 15ஆம் தேதியை காலக்கெடுவாக நிர்ணயித்ததற்கு இந்திய அறிவியல் அகாடமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பை ஒடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இந்தியாவிலும் நடந்து வருகிறது. இதில், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இதற்கு 'கோவேக்சின்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதை மனிதர்களிடம் பயன்படுத்தி பரிசோதிக்க 12 ஆஸ்பத்திரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இப்பணியை முடித்து, ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஐ.சி.எம்.ஆர். இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதற்கு ஏற்கனவே மருத்துவ நிபுணர்கள் பலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்திய அறிவியல் அகாடமியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ''கொரோனாவை குணப்படுத்தும் தடுப்பூசியை உருவாக்கியதை வரவேற்கிறோம். அதை விரைவாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு வாழ்த்துகிறோம்.

ஆனால், விஞ்ஞானிகளை குறிப்பாக, கொரோனா தடுப்பூசி கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகளை கொண்ட எங்கள் அமைப்பு, ஐ.சி.எம்.ஆர். அறிவித்துள்ள ஆகஸ்டு 15-ந் தேதி காலக்கெடுவை சாத்தியமற்றதாக கருதுகிறது. இது, பொதுமக்கள் மத்தியில் நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உண்டாக்கி இருக்கிறது.

நிர்வாக ரீதியான ஒப்புதலை வேண்டுமானால் விரைவுபடுத்தலாம். ஆனால், அறிவியல்ரீதியான பரிசோதனை நடைமுறைகள், தகவல்கள் சேகரிப்பு போன்றவற்றுக்கு கால அவகாசம் தேவைப்படும். அதை அவசரப்படுத்தினால், தரத்தில் சமரசம் செய்ய வேண்டியதாகி விடும்.

தடுப்பூசி பரிசோதனைக்கு 3 கட்டங்கள் தேவைப்படும். முதல் கட்டத்தில், பாதுகாப்பை மதிப்பிட வேண்டும். 2-ம் கட்டத்தில், பல்வேறு 'டோஸ்' அளவின் திறன் மற்றும் பக்கவிளைவுகளை பார்க்க வேண்டும். 3-ம் கட்டத்தில், ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான மனிதர்களில் அதன் திறன் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பிறகுதான் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுசெல்ல வேண்டும்.

மருத்துவ பரிசோதனைக்கு ஆரோக்கியமான தன்னார்வலர்கள் தேவை. அதற்கு ஒப்புதல்கள் பெற வேண்டும்.

ஒரு கட்டத்தில் பெறப்பட்ட தகவல்கள் ஏற்க முடியாததாக இருந்தால், அடுத்தகட்ட ஆய்வை கைவிட வேண்டும். எனவே, இந்த காலக்கெடுவானது, அர்த்தமற்றதாகவும், முன் எப்போதும் இல்லாததாகவும் இருக்கிறது. இதில் அவசரம் காட்டுவது, தரத்தில் சமரசம் செய்து கொள்வதுடன், இந்திய மக்களிடம் எதிர்பாராத அளவுக்கு நீண்ட காலத்துக்கு பாதிப்பை உண்டாக்கி விடும்'' என்று இந்திய அறிவியல் அகாடமி கூறியுள்ளது.

'பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்தவேண்டும்' :மத்திய உள்துறை அமைச்சகம் - இந்து தமிழ் திசை

மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை நடத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய உயர் கல்வித்துறைச் செயலருக்குக் கடிதம் எழுதியுள்ளதாக இந்து தமிழ் திசை நாளேடு வெளியிட்ட செய்தி தெரிவித்துள்ளது.

இந்த கடிதத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளைக் கட்டாயம் நடத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கின்றன.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் செமஸ்டர் தேர்வு நடத்துவது இப்போது சாத்தியப்படுமா? அப்படி இருந்தால் எவ்வாறு தேர்வுகள் நடத்துவது? என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்க, உயர்கல்வி துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை அமைத்து அரசு கடந்த 2 நாட்களுக்கு முன் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் திடீரென ஒரு கடிதத்தை மத்திய உயர்கல்விச் செயலருக்கு அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக எழுதிய கடிதத்தில், "பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தேர்வுகளை நடத்த இன்று மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி நாட்காட்டி குறித்த பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வழிகாட்டுதல்களின்படி பல்கலைக்கழக இறுதிக் காலத் தேர்வுகள், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைப் (SOP) படி கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என இந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்திய பயிற்சியாளர் பதவி வேண்டாமென டிராவிட் மறுத்தாரா? - டைம்ஸ் ஆஃப் இந்தியா

கடந்த 2017-இல் ராகுல் டிராவிட்டை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ நிர்வாகிகள் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனிப்பட்ட காரணங்களை சுட்டிக்காட்டி பயிற்சியாளர் பதவியை ஏற்க டிராவிட் மறுத்துவிட்டதாக வினோத் ராய் கூறியுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனியார் இணையதள நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் பிசிசிஐ நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், "ராகுல் எங்களிடம் வெளிப்படையாக பேசினார். எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்திய அணிப் பயிற்சியாளராகச் செயல்பட்டால், குடும்பத்தினருடனும், இரண்டு மகன்களுடனும் நேரம் செலவிட இயலாத நிலை ஏற்படும். நான் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன்" என்று டிராவிட் வெளிப்படையாக கூறினார்" என்று ராய் தெரிவித்தார்.

"ராகுலின் பக்கம் நின்று யோசித்துப் பார்த்தபோது அவரின் கருத்தில் நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. அவர் மனதில் என்ன இருந்ததோ அதைக் கூறினார். அவர் கூறியதை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்" என்றும் ராய் கூறினார்.

"ராகுல் டிராவிட்டிடம் தொடர்ந்து பேசினோம். 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இளம் வீரர்களிடம் நெருக்கமாகப் பழகிச் சிறப்பாக வழிநடத்துகிறார். அணியை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல பல வழியில் திட்டமிட்டுச் செயல்படுகிறார்'' என வினோத் ராய் மேலும் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :