சாத்தான்குளம் சம்பவம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images
சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினபு, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்குப் பிறகு தென் மண்டல ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்பது ஒரளவுக்கு உண்மைதான். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் மாற்றம் ஏற்படும்" என்று தெரிவித்தார்.
மேலும், சாத்தான் குளம் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு இருக்கும் தொடர்பு குறித்து கேட்டபோது, "ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசிற்கு காவல்துறைக்கான உரிமை இல்லை தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
காவலர்கள் சிறையில் அடைப்பு
ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்கீழ் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதில் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யபட்டவர்களிடம் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அலுவலகம் பின்புறமுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இன்று காலை முதல் மாலை வரை சிபிசிஐடி ஐஜி சங்கர் தலைமையில் விசாரணை நடைபெற்றது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் ஆகியோருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைத்து உடல் தகுதி பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர்களை தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து முதன்மை குற்றவியல் நீதிபதி ஹேமா முன்பு 3 போலீசார் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் சிபிசிஐடி போலீசார் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே காவலர் முத்துராஜ் சிபிசிஐடி போலிசாரால் இன்று காலை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் முத்துராஜ் தவிர்த்து ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் ஆகிய மூவரை மட்டும் இன்று (வியாழக்கிழமை) இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

பட மூலாதாரம், Getty Images
சாத்தான்குளத்தில் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்த வியாபாரிகள் வழக்கில் முக்கிய சாட்சியமாகக் கருதப்பட்ட காவலர் ரேவதியின் வீட்டிற்கு நீதிமன்ற உத்தரவின்படி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினர் தாக்கியதில் தந்தை - மகனான வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிந்தனர்.
இந்த வழக்கு விசாணைக்காக நியமிக்கப்பட்ட கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதிதாசனிடம் சாத்தான்குளம் காவல் நிலைய தலைமை பெண் காவலர் ரேவதி முக்கிய தகவல்களைத் தெரிவித்தார். ரகசியம் காக்கப்படும் என்ற அடிப்படையில் நீதிபதியிடம் சாட்சியமளித்ததாகவும் தற்போது இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிட்டதால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என காவலர் ரேவதி கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று நீதிமன்றம் காவலர் ரேவதிக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவதோடு, அவரது வீட்டுக்கு பாதுப்பு வழங்கவும் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து பேய்குளம் அருகிலுள்ள அறிவான் மொழியில் உள்ள ரேவதியின் வீட்டிற்கு ஆயுதப் படையைச் சேர்ந்த 2 பெண் காவலர்கள் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் சாத்தான்குளம் சம்பவத்திற்கும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் தொடர்பில்லையென அந்த அமைப்பு மறுத்துள்ளது.
சாத்தான்குளம் சம்பவத்தோடு தொடர்பில்லை: ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மறுப்பு
எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் இருப்பவர்கள் தங்கள் அமைப்பில் இருக்க முடியாது எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில், தன்னார்வலராக அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகின.
இதற்குப் பிறகு, மத அமைப்பு ஒன்றின் பெயரும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் பெயரும் இடம்பெற்றுள்ள அடையாள அட்டை ஒன்றும் சமூக வலைதளங்களில் வலம்வந்தது.
இந்த நிலையில், ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கும் சாத்தான் குளம் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லையென அந்த அமைப்பு ஒரு அறிக்கை மூலம் மறுத்துள்ளது. சாத்தான் குளம் காவல் நிலையத்தில் கொரோனா தொடர்பான பணிகளுக்காகவே இந்த தன்னார்வலர்கள் சேர்க்கப்பட்டதாகத் தெரியவருவதாகவும் எல்லா தன்னார்வலர்களையும் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் என அழைக்கக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
சாத்தான் குளத்தில் தன்னார்வலர்களாக பதிவுசெய்யப்பட்டவர்கள், எஃப்ஓபி அமைப்பில் பதிவுசெய்யப்படவில்லையென்றும் அவர்களுக்கென பயிற்சியோ, அடையாள அட்டையோ எஃப்ஓபி அமைப்பின் சார்பில் வழங்கப்படவில்லையென்றும் அந்த அமைப்பின் மாநில நிர்வாகி பேராசிரியர் ஜி. லூர்துசாமி தெரிவித்துள்ளார்.
எஃப்ஓபி அமைப்பில் இணைய பல்வேறு விதிமுறைகள் இருப்பதாகவும் தாங்கள் எல்லாவிதமான சித்ரவதைகளையும் எதிர்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. சில அமைப்புகள் எஃப்ஓபிக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறி சமூக வலைதளங்களில் பரவிவரும் செய்திகள் தவறானவை என்றும் எந்த ஒரு அரசியல் அமைப்பிலும் இருப்பவர்கள் எஃப்ஓபியில் இணைய முடியாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் விவகாரத்தில் எஃப்ஓபி எப்படி இணைத்துப் பேசப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டிருப்பதாகவும் எஃப்ஓபியின் உறுப்பினர்கள் என்ற பெயரில் யாராவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
வழக்கின் பின்னணி என்ன?
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஒரு செல்போன் கடையை நடத்திவந்தனர்.
ஜூன் 19 அன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னிக்ஸ் அவரது தந்தை ஜெயராஜை கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று (ஜூன் 22) இரவில் பென்னிக்சும் செவ்வாய்க்கிழமையன்று (ஜூன் 23) அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












