கொரோனா வைரஸ்: வீட்டைவிட்டு விரட்டப்பட்ட முதியவர் மதுரை தனிமைப்படுத்தல் முகாமில் தற்கொலை

மதுரையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் கல்லூரி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த முதியவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

மதுரை மாநகராட்சி வடக்குத் தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல், மூச்சுத்திணறல், இருமல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், இதையடுத்து அவர் தனது குடும்பத்தினராலேயே வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த முதியவர் சில தினங்களாக சாலையோரத்தில் வசித்து வந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவசர ஊர்தி வரவழைக்கப்பட்டு அவர் கொரோனா வைரஸ் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். பரிசோதனை முடிவில் அந்த முதியவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

இதனையடுத்து மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரானா தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் அந்த முதியவர் முகாமிலேயே தற்கொலைக்கு முயன்று காயமடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்து மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வந்த முதியவர் இன்று (திங்கட்கிழமை) காலை உயிரிழந்தார்.

அவர் தற்கொலைக்கு முயல்வதற்கு முன்பு முதியவரை சிலர் காணொளி எடுத்துள்ளனர். அதில் பேசிய தனுஸ்கோடி, “எனக்கு உடம்பு சரியில்லை. அதிக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. ஆனால் மருத்துவர்கள் யாரும் எனக்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் இப்படி செய்கிறேன்” என்கிறார்.

தற்கொலைக்கான காரணம் என்ன?

தனிமைப்படுத்தும் மையத்தில் அனுமதிக்கப்பட்ட முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “முதியவர் தனுஷ்கோடிக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் தங்கவைக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை அவர் உயிரிழந்துள்ளார்.

கொரோனா அறிகுறி இருந்ததால் தனுஷ்கோடியை அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். அவர் இரண்டு தினங்களாக சாலையோரத்தில் தங்கியுள்ளார். இதை கண்ட சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் அவர் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமில் சேர்க்கப்பட்டார்” என்று கூறினார்.

இந்த நிலையில், முதியவர் தற்கொலை செய்துகொண்டதற்காக காரணம் என்னவென்று அவரிடம் கேட்டபோது, “கொரோனா அச்சம் காரணமாக தனது சொந்த குடும்பத்தினரே தன்னை பராமரிக்க மறுத்து வீட்டை விட்டு வெளியே அனுப்பியதால் ஏற்பட்ட மன அழுத்தமே அவரை தற்கொலை செய்ய வைத்துள்ளது. குடும்ப பிரச்சனை மற்றும் அவரது மன அழுத்தம் மட்டுமே அவரது தற்கொலைக்கு காரணம்,” என்று அவர் மேலும் கூறினார்.

கொரோனா வார்டில் உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் தற்கொலை செய்து கொண்டதாக தனுஷ்கோடி காணொளி வாயிலாக அளித்துள்ள விளக்கம் குறித்து கேட்டபோது, “மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.

எனவே, பத்து ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த இருபது மனநல மருத்துவர்களை கொண்டு மதுரை மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படுகிறது. உதாரணமாக ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் மதுரை அழைத்து வரப்பட்ட தமிழகத்தை சேர்ந்த ஒருவர் மிகவும் மன அழுத்ததுடன் இருந்தார். மனநல மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று அவர் விரைவில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தார். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கொரோனா வார்டுகளிலும் தரமான உணவு மற்று மருந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கண்டு பயப்படதேவையில்லை” என்று கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: