You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் தந்தை மகன் சிறை மரணம்: அரசு வேலை, நிதியுதவி வேண்டாம் - குடும்பத்தினர் ஆவேசம்
கோவில்பட்டி சிறையில் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும் மகனும் இறந்த விவகாரத்தில் அவர்களது குடும்பத்துக்கு அரசு அறிவித்த வேலையும் வேண்டாம், ரூ.20 லட்சம் பணமும் வேண்டாம். 'அவர்களை காவலில் வைத்து அடித்து மரணத்துக்கு காரணமாக இருந்த போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுதான் வேண்டும்" என்று அவர்களது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
குற்றம்சாட்டப்படும் போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்யும்வரை இறந்தவர்கள் உடலை வாங்கமாட்டோம் என்றும் கூறிவந்த குடும்பத்தினர் தற்போது, வியாழக்கிழமை, உடல்களைப் பெற்றுக்கொள்ள சம்மதித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி கூடுதல் நேரம் கடை வைத்திருந்ததாக சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட தந்தையும், மகனும் போலீஸ் காவலில் அடித்து துன்புறுத்தப்பட்டு பிறகு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அங்கே அவர்கள் இருவரும் உயிரிழந்ததாகவும் அவர்களது குடும்பத்தினரும், எதிர்க்கட்சித் தலைவர்களும், குற்றம்சாட்டுகின்றனர். உடல்நலக் குறைவால் அவர்கள் இறந்ததாக கூறுகிறது அரசு.
உயிரிழந்த இருவரது உடலும் பிணக்கூராய்வு நெல்லை அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் நேற்று மதியம் முதல் இரவு 7 மணி வரை விசாரணை மேற்கொண்டார்.
இறந்த ஜெயராஜின் மகள் பெர்சி காவல்துறையினர் உடலை வாங்க சொல்லி தங்களை மிரட்டுவதாகவும் ஆனால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது கொலை வழக்குப் பதிவு செய்தால் மட்டும் தான் உடலை வாங்குவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் வியாழக்கிழமை பகலில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரும், அவரது தாயும் இறந்த இருவர் உடலையும் பெற்றுக்கொள்ள சம்மதித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பெர்சி தனது தந்தை மற்றும் தம்பி ஆகிய இருவரையும் அடித்து கொலை செய்த காவலர்கள் மீது இரட்டை கொலை வழக்கு பதிவு செய்யப்படும் என்று நீதித்துறை மீது நம்பிக்கை வைத்து அவர்களது உடல்களை பெற்றுக்கொள்ள சம்மதிப்பதாக கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: