You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாத்தான்குளம் தந்தை, மகன் சிறையில் மரணம்: பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவுசெய்ய உத்தரவு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்ததால் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அப்பகுதி மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக இரண்டு காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காவல்துறை தாக்கியதால் தந்தை - மகன் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் சடலங்களை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயிரிழந்த ஜெயராஜின் மனைவியும் உயிரிழந்த பென்னீஸின் தாயாருமான செல்வராணி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் இருவரது உடலையும் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்ய வேண்டுமென்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு அவசர மனுவாக நீதிபதி பி. புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, பிரேதப் பரிசோதனையை மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பிரேதப் பரிசோதனையை வீடியோவில் பதிவுசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் தந்தை மகன் கைது ஏன்?
சாத்தான்குளம் அரசரடி தெருவைச் சேர்ந்த ஜெயராஜ் (58) என்பவரது மகன் பென்னீஸ். இவருக்கு வயது 31. இவர் சாத்தான்குளத்தில் காமராஜர் சிலை அருகே ஏபிஜே மொபைல்ஸ் என்ற பெயரில் ஒரு செல்போன் கடையை நடத்திவந்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று இரவில் கடையை அடைப்பது தொடர்பாக காவல்துறையினருக்கும் பென்னிக்சுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வெள்ளிக்கிழமையன்று ஜூன் 19ஆம் தேதியன்று பென்னீஸ் மீதும் அவரது தந்தை ஜெயராஜ் மீதும் சாத்தான்குளம் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தனர்.
இதற்குப் பிறகு, பென்னீசையும் அவரது தந்தை ஜெயராஜையும் கைது செய்த காவல்துறையினர், 21ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறை பதிவுசெய்த முதல் தகவல் அறிக்கையில், காவல் துறையினரை திட்டிவிட்டு அவர்களே "தரையில் புரண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக் காயம் ஏற்பட்டது," எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று இரவில் பென்னீசும் செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில் ஜெயராஜும் உயிரிழந்தனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் பிபிசி கேட்டபோது, "ஜூன் 22ஆம் தேதி, திங்கள்கிழமை மாலை நெஞ்சு வலியால் மயங்கி விழுந்த பென்னீசை பணியில் இருந்த வார்டன்கள் மீட்டு துணைச் சிறையின் கண்காணிப்பாளர் சங்கர் உதவியுடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அவர் இரவு ஒன்பது மணியளவில் இறந்துவிட்டார். அதற்கு சிறிது நேரத்திலேயேபென்னீஸின் தந்தை ஜெயராஜுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார்," எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து இறந்தவர்களின் உறவினர்கள் சாத்தான்குளத்தில் போராட்டத்தில் இறங்கினர். இவர்களுக்கு ஆதரவாக, பேய்க்குளம், திசையன்விளை ஊர்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன.
"பென்னீஸும் ஜெயராஜும் தரையில் உருண்டதால், காயம் ஏற்பட்டதாக வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். யாராவது காயம் ஏற்படும்படி தரையில் உருள்வார்களா? மேலும், சாத்தான்குளத்திற்கு அருகிலேயே பல கிளைச் சிறைகள் இருக்கும்போது 100 கி.மீ. தூரத்தில் உள்ள கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தது ஏன்?" என இறந்தவர்களின் உறவினரான சார்லஸ் பிபிசியிடம் கூறினார்.
காவல்துறையினர் காவலில் இருக்கும்போது பென்னீஸின் ஆசன வாயில் லத்தியால் குத்தியதால் ஏற்பட்ட ரத்தப் போக்கினாலேயே அவர் உயிர் பிரிந்ததாக சார்லஸ் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், அவர்களது உடல்கள் வைக்கப்பட்டிருந்த பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் கோவில்பட்டி நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் விசாரணை நடத்தினார். இதற்குப் பிறகு, சாத்தான்குளம் காவல் நிலையத்தைச் சேர்ந்த ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் உத்தரவிட்டிருக்கிறார்.
செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களுமே இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
காவல்துறையினரைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகே வணிகர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். வணிகர்கள் காவல்துறையில் தாக்கப்பட்டு இறந்திருப்பதால், நாளை கடைகளை அடைக்கப்போவதாக சில வணிகர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: