கொரோனில், சுவாசரி: பதஞ்சலி நிறுவனத்தின் கொரோனா வைரஸ் மருந்துகளை விற்க ஆயுஷ் அமைச்சகம் தடை

பட மூலாதாரம், Getty Images
கோவிட் -19 தொற்றை குணப்படுப்படுத்தும் ஆயுர்வேத மருந்து என பதஞ்சலி வெளியிட்ட மருந்திற்கு ஆயுஷ் அமைச்சகம் தடை விதித்துள்ளது.
பதஞ்சலி நிறுவனம் செவ்வாயன்று, 'கொரோனில்' மற்றும் 'சுவாசரி' என்னும் இரு மருந்துகளை வெளியிட்டு, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கான ஆயுர்வேத மருந்து என தெரிவித்தது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சையளிக்கக்கூடிய பதஞ்சலி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மருந்து குறித்த ஊடக செய்தி தங்களின் கவனத்திற்கு வந்துள்ளதாகவும், மருந்து குறித்த விவரங்கள் நிறுவனத்திடம் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவரை இந்த மருந்து குறித்த விளம்பரத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தங்கள் மருந்து தொடர்பான அனைத்து தகவல்களையும் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அளித்துள்ளதாகவும், தகவல் தொடர்பு இடைவெளி தற்போது நிரப்பப்பட்டுள்ளதாகவும் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆச்சார்ய பாலகிருஷ்ணா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத மருத்துவத்துக்கு ஊக்கத்தையும் பெருமையையும் இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதஞ்சலி நிறுவனத்தால் கூறப்பட்ட மருத்துவ ஆய்வுகள் குறித்த தகவல்கள் அமைச்சகத்திற்கு தெரியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட்-19ஐ குணப்படுத்தும் எனக் கோரப்பட்ட மருந்தின் பெயர், கலவை, இந்த ஆய்வு நடத்தப்பட்ட இடங்கள், மருத்துவமனைகள், எத்தனை பேரிடம் பரிசோதிக்கப்பட்டன என்ற விவரங்கள், நிறுவன நெறிமுறை குழு அனுமதி, இந்திய மருத்துவ பரிசோதனைகள் பதிவின் அனுமதி, ஆய்வின் முடிவுகள் ஆகியவற்றை பதஞ்சலி நிறுவனம் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உத்தரகாண்ட் மாநில அரசிடம் இந்த மருந்து உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களின் நகல்கள், அனுமதி விவரங்கள் ஆகியவற்றையும் ஆயுஷ் அமைச்சகம் கோரியுள்ளது.
பிபிசியிடம் பேசிய மத்திய மருந்துகள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மூத்த அதிகாரி, "பொதுவாக ஒரு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சந்தைக்கு வருவதற்கு குறைந்தது மூன்று வருடங்கள் வரை ஆகும். சில அசாதாரண சூழலில் இந்த கால அவகாசம் குறையலாம். இருப்பினும் ஒரு புதிய மருந்து சந்தைக்கு வருவதற்கு பத்து மாதங்களிலிருந்து ஒரு வருடம் வரை ஆகும்."
"ஆனால் சில வாரங்களில் கொரோனில் என்ற இந்த மருந்தை கண்டுபிடித்து சந்தைக்கு கொண்டுவந்து பதஞ்சலி 'சாதனை' புரிந்துள்ளது என்றார்.
மேலும் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி, "இந்த மருந்து குறித்தான மருத்துவ பரிசோதனை குறித்த எந்த தகவலும் தங்கள் துறைக்கு தெரியப்படுத்தவில்லை," என தெரிவித்தார்.
இருப்பினும் பதஞ்சலியின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆச்சர்ய பாலகிருஷ்ணன்,"ஒரு மூன்றாம் தரப்பு நிறுவனம் மூலம் இந்த மருந்து குறித்த மருத்துவ பரிசோதனையை தங்கள் நிறுவனம் மேற்கொண்டோம். இது கோவிட் -19க்கு முழுமையான தீர்வை அளிக்கும்," என பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












