ரிலையன்ஸ்: 58 நாட்களில் 1.68 லட்சம் கோடி ரூபாய் திரட்டி கடனில்லா நிறுவனமானது

முகேஷ் அம்பானி

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.

தினத்தந்தி: கடனில்லா நிறுவமான ரிலையன்ஸ்: 58 நாட்களில் 1.68 லட்சம் கோடி ரூபாய் திரட்டியது

58 நாட்களில் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி திரட்டியதன் மூலம் கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் மாறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"ஜியோவில் முதலீடு செய்த ஃபேஸ்புக் உள்ளிட்ட பதினோரு நிறுவனங்களின் வாயிலாக பெறப்பட்ட 1,15,693 கோடி ரூபாய் மற்றும் உரிமை வெளியீட்டில் இருந்து கிடைத்த 53,124.20 கோடி ரூபாயையும் சேர்த்து 58 நாட்களில் ரூ.168,818 கோடிக்கு மேல் திரட்டியுள்ளது ரிலையன்ஸ் குழுமம்.

இதுமட்டுமின்றி, 150 பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட இந்தியாவின் முதல் நிறுவனமாக ரிலையன்ஸ் உருவெடுத்துள்ளது.

இது குறித்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஆர்ஐஎல்) தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது: எங்களது ஜியோ பிளாட்பார்ம்களில், உலகின் சில முதன்மையான நிதி முதலீட்டாளர்களிடமிருந்து பெற்றுள்ள முதலீடுகள் மற்றும் ஒரு மெகா பங்கு விற்பனை ஆகியவை இணைந்து, ரிலையன்ஸ் குழுமத்தை மார்ச் 2021க்கு முன்னதாகவே நிகர கடன் இல்லாததாக மாற உதவியுள்ளது.

2021 மார்ச் 31ஆம் தேதி என்னும் எங்களின் இலக்குக்கு முன்னதாகவே ரிலையன்ஸ் நிகர கடனில்லாமல் செய்வதன் மூலம் பங்குதாரர்களுக்கு நாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளோம் என்று அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையடைகிறேன்" என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தினமணி: இந்திய உதிரி பாகங்களை பயன்படுத்தி இறக்குமதியை தவிர்ப்போம்- ரயில்வே

இந்திய ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

இந்திய ரயில்வேயின் தேவைகளில் இறக்குமதி முற்றிலும் குறைக்கப்பட்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை மட்டுமே பயன்படுத்தப்படும் என இந்திய ரயில்வே வாரியத்தலைவா் வி.கே. யாதவ் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

காணொலி முறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ஏற்றுமதி செய்யக் கூடிய வகையில் இந்திய ரயில்வே உற்பத்தி பொருட்கள் இருப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றோம். ரயில்வே கட்டுமானப்பணி ஒப்பந்த புள்ளிகளில் சீன நிறுவனங்கள் பங்கேற்பதற்கு தடை செய்யப்படுமா என்று கேட்கப்படுகிறது. ரயில்வே ஒப்பந்தப்புள்ளி ஏலத்தில் கலந்து கொள்ள உள்ளூா் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரயில்வே இறக்குமதியை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் கொள்கையை முழுமையாக அமல்படுத்தி வருகின்றோம்.

உதாரணமாக ரயில்வேயின் சமிக்ஞைகள் திட்டத்தில் இதே கொள்கை அடிப்படையில் 70 சதவீதம் ஒப்பந்தப்புள்ளி 'இந்தியாவில் தயாரிப்போம்' கொள்கையின்படி அளிக்கப்பட்டது. இந்திய தயாரிப்புகளை அதிகமாக பயன்படுத்துவது உறுதிசெய்யப்பட்டு இறக்குமதியை முற்றிலும் தவிர்ப்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சிகளின் மூலம் ரயில்வேயில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஏற்றுமதியாகும்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Presentational grey line

தி டைம்ஸ் ஆஃப் இந்தியா: இணைய வழி வகுப்பில் படிக்க வசதியில்லை - தற்கொலை செய்துகொண்ட மாணவி

தற்கொலை

பட மூலாதாரம், Getty Images

மேற்குவங்கத்தில் இணையவழி வகுப்புக்கு தேவையான திறன்பேசி அல்லது கணினி உள்ளிட்ட வசதியும் இல்லாததால் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"நான் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். கடந்த மார்ச் மாதம் முடக்க நிலை அறிவிக்கப்பட்டவுடன், மேற்குவங்கத்தில் ஹௌராவில் உள்ள நாங்கள் பீகாரில் உள்ள சொந்த ஊருக்கு சென்றுவிட்டோம். ஆனால், ஹௌரா அருகே உள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் எனது மகளும், அவளது அண்ணனும் எங்களுடன் பீகாருக்கு வராது அங்கேயே இருந்துவிட்டனர். இந்த நிலையில், எனது மகளுக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இணையவழி வகுப்பு தொடங்கியது. முடக்க நிலையின்போது, வீட்டிலிருந்த திறன்பேசி சேதமடைந்துவிட்டதால், இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள முடியாத மன வேதனையில் இருந்த எனது மகள் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள்" என்று அந்த மாணவியின் தந்தை கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: