You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் பாதிப்பு: உலக அளவில் நான்காவது இடத்தில் இந்தியா - சர்வதேச செய்திகள் என்ன?
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்துக்கு வந்துள்ளது.
முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 10, 956 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 396 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து, 97 ஆயிரத்தி, 535-ஆக உள்ளது. இதுவரை 1,47,195 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,498 ஆக உள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல துறை தெரிவிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2028 காவல்துறை அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில சுகாதார துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா அறிவித்துள்ளார்.
சர்வதேச செய்திகள் என்ன?
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதில் ஒருவருக்கு வைரஸ் தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதில் 5 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,239 ஆக உள்ளது. அங்கு இதுவரை உயிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் பிரேசிலில் மிக குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது, எனவே உண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 941 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1, 13,803 ஆக அதிகரித்துள்ளது என ஜான்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைகழக தரவுகள் கூறுகின்றன.
ஜூலை மாதம் ஹஜ் புனித யாத்திரைக்கு செல்ல மலேசிய வாழ் மக்களுக்கு அனுமதி கிடையாது என மலேசியா அரசாங்கம் அறிவித்துள்ளது. முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட மலேசியாவில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தோனீசிய அரசாங்கமும் பயணிகளின் நலன் கருதி ஏற்கனவே ஹஜ் யாத்திரைக்கான தடையை அறிவித்துவிட்டது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: