பாஜகவின் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று: டெல்லி மருத்துவமனையில் கோவிட்-19 சிகிச்சை

பட மூலாதாரம், Getty Images
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிடிஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
"ஜோதிராதித்ய சிந்தியா கோவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் திங்களன்று அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.
டெல்லியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும் சமீபத்தில் ஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார்.
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு
காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா இந்த ஆண்டு மார்ச் 11ஆம் தேதிதான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது அவர் ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.
டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததும் ஜோதிராதித்ய சிந்தியா, மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜகவின் சார்பாக மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், Ani
ஜோதிராதித்ய சிந்தியா கட்சி மாறியவுடன், அவருக்கு ஆதரவான காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சி மாறியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மையை இழந்தது.
அதனால், கமல்நாத் சட்டமன்றத்தில் பெரும்பான்மை வாக்கெடுப்புக்கு முன்னரே பதவி விலகினார்.
பின்னர் பாஜகவின் சிவ்ராஜ் சிங் சௌகான் மீண்டும் முதல்வரானார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் தொடங்கியபோது, சுகாதார அமைச்சர் உள்பட எந்த அமைச்சரும் இல்லை என்று அவரது அரசு விமர்சிக்கப்பட்டது.
ஜோதிராதித்ய சிந்தியா யார்?
2001ம் ஆண்டு ஜோதிராதித்யவின் தந்தை மாதவராவ் இறந்தபிறகு ஜோதிராதித்ய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தனது தந்தையின் இறப்பால் காலியான குணா மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.
பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2002ம் ஆண்டு அவர் முதல் முதலில் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன்பின் 2004, 2009 மற்றும் 2014ஆகிய ஆண்டுகளிலும் வெற்றி பெற்றார்.

பட மூலாதாரம், Getty Images
இருப்பினும் தனக்கு செயலாளராக இருந்த கேபிஎஸ் யாதவிடம் 2019 பொதுத் தேர்தலில் தோற்றது அவரின் நம்பிக்கையை குலைத்தது.
சிந்தியா குவாலியர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தாத்தா ஜிவாஜிராவ் சிந்தியா சமஸ்தானத்தின் அரசின் கடைசி அரசர்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தவர் ஜோதிராதித்ய சிந்தியா. 2008ம் ஆண்டு ஏப்ரல் 6-ம் தேதி அவர் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சராக ஆனார்.
2009 முதல் 2012 வரை மத்திய தொழில் வர்த்தகத்துறை இணை அமைச்சராக இருந்தார். பிறகு மின்சாரத் துறை இணையமைச்சராக (தனிப் பொறுப்பு) பதவி வகித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் இளம் அமைச்சர்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












