You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: "மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை என சொல்பவர்கள் மீது நடவடிக்கை"
மருத்துவமனைகளில் இடங்கள் இல்லை என வரும் தகவல்கள் பொய் என்றும் அப்படி தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், நகரில் உள்ள 15 மண்டலங்களும் பிரிக்கப்பட்டு, அவற்றுக்குப் பொறுப்பாக ஐந்து அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அமைச்சர்கள், மண்டல அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் இன்று சென்னை மாநகராட்சியில் நடைபெற்றது.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு முதலில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சென்னையில் அரசு எடுக்கும் முடிவுகளை மைக்ரோ அளவில் கொண்டுபோய் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெறுகின்றன. சென்னையில் 39,600க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் 6,000 தெருக்களில்தான் கொரோனா நோயாளிகள் உள்ளனர். ஆகவே 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட தெருக்களில் எந்தப் பிரச்சனையும் இல்லை. மாநகராட்சி பணியாளர்கள் தவிர, அயல் பணியலும் பல தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்."
"இந்த கொரோனா போரில் நாம் நிச்சயம் வெல்வோம். இந்தச் சூழலில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். கைகளைக் கழுவுவது, சுத்தமாக இருப்பது, சமூக இடைவெளி இதையெல்லாம் கடைப்பிடித்தாலே நாம் இதிலிருந்து தப்பி விடலாம்" என்று அவர் தெரிவித்தார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த நிலையில், பல மருத்துவமனைகளில் படுக்கை இல்லை என வரும் செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக செய்தி வாசிப்பாளர் வரதராஜன் இது குறித்து வெளியிட்டிருந்த வீடியோ குறித்தும் கேட்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.
"சென்னையில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே 4,900 படுக்கை வசதிகள் உள்ளன. 4 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அயனாவரத்தில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை என ஐந்து மருத்துவமனைகளில் தீவிரமான நிலையிலும், மிதமான நிலையிலும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது" என்று கூறினார்.
செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது நடவடிக்கை
இதுதொடர்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் கூறியதாவது:
இதுதவிர, மாநகராட்சி மூலமாக 17,000 படுக்கை வசதிகள் கொண்ட சிசிசி மையங்கள் உள்ளன. அதில் எவ்வளவு நோயாளிகள் உள்ளனர், எவ்வளவு காலியாக உள்ளது என்பதெல்லாம் எங்களிடத்தில் தகவல்கள் உள்ளன. வரதராஜன் இந்த பேரிடர் காலத்தில் மிகத் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். பேரிடர் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு நோயாளி வந்தால் அவரை ஐ.சி.யுவில் வைப்பதா, ஆக்ஸிஜன் கொடுப்பதா, சிசிசி சென்டரில் வைப்பதா என்பதை மருத்துவர்தான் முடிவு செய்வார். வரதராஜன் அரசு செயலரைத் தொடர்பு கொண்டதாகச் சொல்கிறார். எந்தச் செயலரையும் அவர் தொடர்புகொள்ளவில்லை.
பத்திரிகையாளர்கள் பலருக்கு தொற்று ஏற்பட்டது. ஒரே அலுவலகத்தில் 42 பேருக்கு தொற்று ஏற்பட்டது. யாருக்காவது குறை இருக்கிறதா? தனியார் மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நோயாளிகள் பலரைக் குணப்படுத்தியிருக்கிறோம். அதைப் பற்றி வீடியோ ஏதாவது இருக்கிறதா?
இந்த நிலையில் எப்படி வரதராசன் இப்படி ஒரு புகாரைச் சொல்கிறார்? நம்மிடம் போதுமான மருத்துவ வசதிகள் உள்ளன. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 20 படுக்கையோடு ஆரம்பித்தோம். ஓமந்தூராரில் 500 படுக்கை வசதிகளை ஏற்படுத்தினோம். ஸ்டான்லி மருத்துவமனையில் 20 படுக்கைகளை ஏற்படுத்தினோம். ஈஎஸ்ஐ அயனாவரத்தில் 300-400 படுக்கை இருக்கிறது. கே.வி. குப்பத்தில் 1,400 படுக்கைகள் தயாராக உள்ளன.
டாக்டரின் முடிவு, நோயாளியின் விருப்பம் ஆகியவற்றுக்கு ஏற்ற வகையில்தான் ஒருவரை மருத்துவமனையில் சேர்ப்பதா என்பது முடிவு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் 3,571 வென்டிலேட்டர் இருக்கின்றன. இப்போது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் ஐந்து பேர் மட்டும்தான் வென்டிலேட்டரில் இருக்கிறார்கள்.
மாவட்ட வாரியாக சோதனை எண்ணிக்கை தர வேண்டுமெனக் கேட்டவுடன் நாங்கள் வெளியிட்டோம். அரசு வெளிப்படையாக இருக்கிறது. எல்லாரும் தூங்கும்போது, அரசு வேலை பார்க்கிறது. ஒரு பதிவை வெளியிடும் முன்பாக, பலமுறை யோசிக்க வேண்டும். வரதராஜன் என்னுடன் வந்தால் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்கிறேன். இரவு பகலாக மருத்துவர்களும் செவிலியர்களும் எப்படி போராடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறேன்.
யாராவது இதையெல்லாம் பாராட்டியிருக்கிறார்களா.. வரதராஜன் இதைப் பாராட்டியிருக்கிறாரா.. எங்களுக்கு பாராட்டே வேண்டாம். படுக்கை இல்லாத சூழல் இப்போது இல்லை. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்ற கருத்து இருக்கிறது. அந்த சூழலை எதிர்கொள்ளவும் அரசு தயாராக இருக்கிறது.
புதுவிதமான வைரஸ் பரவுவதாகச் செய்தி பரப்புவர்கள் மீது நடவடிக்கை
இந்த நோயே ஒரு புதுவிதமான நோய். முதலில் 99 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்தது. பிறகு, 86 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமலும் 14 சதவீதம் பேருக்கு அறிகுறியோடும் இருந்தது. இப்போது சிலருக்கு தீவிரமான அறிகுறிகள் ஏற்படுகின்றன. இது குறித்தெல்லாம் மருத்துவர்கள் குழு ஆராய்ந்து வருகிறது.
இதற்கிடையில், திடீரென புதுவிதமான வைரஸ் பரவுவதாகச் சொல்வது சரியல்ல. அப்படிக் கிளப்பிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி புதிய வைரஸ் இருப்பதாக யார் சொன்னது?
மருத்துவர்கள் கடுமையாகப் பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருந்தால், ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். யாரும் குடும்பத்தினருடன் இருப்பதில்லை. இந்த நிலையில் குறை சொல்லலாமா?
தமிழ்நாடுதான் சிறப்பாகச் செயல்படும் ஒரு மாநிலம். யாரும் எதையும் மறைக்க முடியாது. நேற்று 16,000 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர்கள் கடுமையாக போராடிக் கொண்டிருக்கிறோம். பதிவைப் போட்டு விமர்ச்சிக்க இது நேரமில்லை.
முதலமைச்சர் முகக் கவசம் அணியச் சொல்லியும் யாரும் கேட்பதில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இது அரசியலாவதில்லை. இங்கு மட்டும்தான் அரசியல் செய்கிறார்கள்
தமிழ்நாட்டில் 75 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. சென்னையில் மட்டும் ஐயாயிரம் படுக்கைகள் உள்ளன. அரசு மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பைப்களை அதிகப்படுத்தியிருக்கிறோம்.
தனியார் மருத்துவமனைகளில் குறைவாக உள்ளன. அதிகப்படுத்தச் சொல்லியிருக்கிறோம். அவர்களும் செய்வதாக சொல்லியிருக்கிறார்கள். 20 சதவீத படுக்கைகளில் கட்டணத்தைக் குறைக்கச் சொல்லியிருக்கிறோம்.
70 தனியார் மருத்துவமனைகளில் எந்தெந்த மருத்துவமனைகளில் இடங்கள் காலியாக உள்ளன என்பது குறித்து நாளை ஒரு இணையதளத்தை வெளியிடவிருக்கிறோம்" என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் நிலை என்ன?
தி.மு.கவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல் நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்குப் பதிலளித்த அமைச்சர், அவரது உடல்நலம் மேம்பட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பிறகு, மண்டலங்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களின் பணி குறித்து பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
"சென்னையில் 39,537 தெருக்களில் 4,404 தெருக்களில் தற்போது நோயாளிகள் உள்ளனர். தெருவாரியாகத் திட்டம்போட்டு அமைச்சர்கள் தலைமையில் 3 - 3 மண்டலங்களாக பிரித்துள்ளனர். ஏற்கனவே ஒவ்வொரு மண்டலத்திலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், சுகாதார அணியினர் பணியாற்றுகின்றனர்.
ஒவ்வொரு தெருவிலும் எங்கு நோயாளிகள் வருகிறார்களோ அதனைக் கட்டுப்படுத்துகிறோம். சென்னையில் உள்ள 8,00,000 முதியவர்களில் ஒன்றரை லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இவர்களை கடுமையாக பாதுகாத்து வருகிறோம். மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாக சோதனைகளை மேற்கொள்ளச் சொல்கிறார்கள். ஆகவே அதிகரிக்கும் எண்கள் குறித்து அச்சமடைய வேண்டாம். மற்ற நாடுகளோடு ஒப்பிட வேண்டாம்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா - சர்வதேச நிலவரம் என்ன?
- இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள் - சில முக்கிய தகவல்கள்
- 'வந்தே பாரத்' விமானங்களின் கட்டணம் உயர்வு: வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியர்கள்
- ''அரசியலமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்'' - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: