You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா ஊரடங்கு: இந்தியாவில் இன்று முதல் திறக்கப்படும் வழிபாட்டுதலங்கள், ஷாப்பிங் மால்கள்: நீங்கள் பின்பற்ற வேண்டியவை என்ன?
கொரோனா காரணமாக இந்தியாவில் அமலிலிருந்த பொது முடக்கம் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் வழிபாட்டுத்தலங்கள், ஷாப்பிங் மால்கள், உணவகங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
இருந்தாலும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
கோயில்களில் பிரசாதம் வழங்கக்கூடாது, ஏசி சாதனங்களை இயக்கினால் அதன் வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வைக்க வேண்டும் உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. தற்போது 5-ம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. அதே சமயம் படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
சானிடைசர்கள் கட்டாயம்
இன்று திறக்கப்படும் அலுவலகம் மற்றும் கடைகளுக்கு வெளியே கட்டாயம் சானிடைசர்கள் வைக்க வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வழிபாட்டுத் தலங்களில், பிரசாதம் வழங்கக்கூடாது, புனித நீர் தெளிக்கக்கூடாது, சிலை மற்றும் வழிபாட்டு நூல்களைத் தொடக்கூடாது, ஒரே நேரத்தில் அதிகளவிலான மக்கள் கூடக்கூடாது எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் பக்தர்கள் காலணிகளை தங்களது வாகனங்களுக்குள்ளே வைத்துவிட்டுச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
கூட்டம் கூடுவதை தவிர்க்க, வழிபாட்டுத்தலங்களில் பாடல் பாடும் குழுக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உணவகங்கள்
உணவகங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களின் அமர்ந்து சாப்பிடாமல், உணவுகளை வாங்கிச்செல்ல மக்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
வீடுகளுக்கு உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மற்றும் சமையல்காரர்களுக்கு தெர்மல் சோதனை செய்யப்படும்.
அலுவலகங்கள்
அலுவலகத்தைப் பொருத்தவரை, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் அலுவலகத்திற்கு வர அனுமதி இல்லை. அங்குள்ள உணவகங்களில் சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், லிப்ட்களில் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், ஒருவருக்கு கொரோனா அறிகுறி தோன்றினால் உடனே அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள்
ஷாப்பிங் மால்களில் கடைகளை திறக்க அனுமதி உண்டு. ஆனால்,அங்குள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டுப்பகுதிகளை திறக்க அனுமதி இல்லை.
ஹோட்டல்களில் தங்க வருபவர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்க, செக்-இன் செக்-அவுட்டின் போது க்யூ ஆர் கோட், ஆன்லைன் விண்ணப்பம் போன்றவற்றைப் பயன்படுத்த வேண்டும். பணத்தையும் இணையத்தில் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள் வெளியே வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமூக முடக்கம் அறிவிக்கப்பட்ட முதல் நாளிலிருந்து, பேரிழப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில் பலரும் இங்குத் தினக்கூலியாகவோ அல்லது அதற்கு நிகரான வேலைகளிலோ இருக்கிறார்கள். இதனால் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்தனர். அதோடு பல்வேறு தொழில்களும் இந்த முடக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கார் உற்பத்தியாளர்களிலிருந்து, ஆடை நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை அனைத்து தொழில்களும் சரிவைச் சந்தித்துள்ளன. இதனால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது.
அத்தியாவசிய பொருட்கள் அல்லாத துணிமணிகள், மின்னணு சாதனங்கள், மரச்சாமான் பொருட்கள் போன்றவற்றின் விற்பனை மே மாதத்தில் 80 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இந்திய சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மளிகை பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனையும் 40 சதவீதத்துக்கு மேல் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது ''ஒரு தோல்வியடைந்த பொது முடக்கம்'' என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: