You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் உயிரிழப்பு விகிதம் உலகிலேயே தமிழகத்தில்தான் குறைவு: முதல்வர் பழனிசாமி
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து, இல்லம் திரும்புவோரின் சதவிகிதம் இன்று இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம் என்றும் உயிரழப்போரின் சதவிகிதமும் இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவு எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் வாயிலாக தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதனை அவர் தொலைக்காட்சி வழியாகவும் மக்களுக்கு உரையாற்றினார்.
கொரோனா தொற்றில் தமிழக அரசின் செயல்பாடு என்ற தலைப்பில் தமிழக மக்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், இதுவரை தமிழக அரசு செலவிட்டுள்ள நிதி, தன்னார்வலர்கள் மூலம் பெறப்பட்ட நிதி மற்றும் மீண்டும் பொருளாதாரத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக எழுதியுள்ளார்.
கொரோனா உயிரிழப்பு தமிழகத்தில்தான் குறைவு என மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதார வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், நடுநிலையாளர்கள், தொடர்ந்து தமிழ்நாட்டை பாராட்டி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
''கொரோனா வைரஸ் நம் இயல்பு வாழ்க்கையை பாதித்ததோடு மட்டும் அல்லாமல், நம் பொருளாதாரத்தையும் பாதித்து விட்டது. கடந்த காலங்களில் நாம் இதுபோன்ற பல்வேறு இடர்களை எதிர்கொண்டும், குறுக்கீடுகளை தவிடுபொடியாக்கியும் முன்னேறி இருக்கின்றோம். வறட்சியாக இருந்தாலும் சரி, சுனாமி போன்ற ஆழிப்பேரலைகள் ஆனாலும் சரி, தானே, வர்தா, ஓகி, கஜா போன்ற கோர புயல்கள் ஆனாலும் சரி, இவற்றையெல்லாம் சகோதர, சகோதரிகளாகிய உங்களின் பெரும் ஒத்துழைப்பாலும், நமது பேராற்றலாலும், துரிதமான, திடமான நடவடிக்கைகளாலும் எதிர்கொண்டுள்ளோம். சீனாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டது பற்றி அறிந்தவுடன், ஜனவரி 2020 முதல் முனைப்புடன் செயல்பட்டு துரிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சமூக பரவல் என்ற நிலைக்கு ஒரு போதும் தமிழ்நாடு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காகதான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது,'' என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார் பழனிசாமி.
கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்பிருந்தே இந்தியாவிற்கே முன்னோடியாக தமிழக அரசு திட்டுமிட்டு, பல்முனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ள முதல்வர், '' தமிழ்நாட்டில் சுமார் 5.50 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகள் மூலமே 86 விழுக்காடு கொரோனா தொற்றுக் கொண்டுவர்கள் எவ்விதமான அறிகுறிகளும் இல்லாதவர்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிந்தது. நோய் தொற்றின் தகவல்களை பகிர்ந்துக் கொள்ள வலைதளம் ஒன்று புதிதாக உருவாக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களை கண்காணிக்க, விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் சோதனை சாவடிகளில் பணியமர்த்தப்பட்டனர். விமான நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் 2.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பரிசோதனை செய்யப்பட்டு, தொற்று உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின்னர், எல்லைப் பகுதிகள் முழுவதுமாக மூடுப்பட்டுன. இதனால் தொற்றின் ஆபத்து பெருமளவு குறைக்கப்பட்டுது,'' என தெரிவித்துள்ளார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
தமிழக அரசு கொரோனா தொற்றை எதிர்த்து போராட இதுவரை ரூ,4,333கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், பள்ளி மாணாக்கர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோரிடமிருந்து இதுவரை, ரூ.378.96 கோடி வரப்பெற்றுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க 123 அரசு மருத்துவமனைகளும், 169 தனியார் மருத்துவமனைகளும் ஆக மொத்தம் 292 கோவிட் - 19 மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு மருத்துவ சேவை அளிக்கப்படுகிறது என்றார். தமிழக அரசிடம் மொத்தம் 3,384 வென்டிலேட்டுர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பிட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2.01 கோடி ரூபாய் செலவில் அரிசி மற்றும் கொரோனா நிவாரண நிதியாக 1000 ரூபாய் ரொக்கமாக ஏப்ரல் 2ஆம் தேதி முதலே வழங்கப்பட்டது.
பயிர்க் கடன், வீட்டுக் கடன், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட கடன்கள் ஆகியவற்றை செலுத்துவதற்கு மூன்று மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவேண்டிய சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த அதே போல கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெருமளவிலுள்ள தொழில்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும், நடுத்தர நிறுவனங்களுக்கு ஊரடங்கினால் ஏற்பட்ட பாதிப்புகளை களைய எடுக்கப்பட்டுள்ள நடுவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
- தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் கடன் தவணைகளை திருப்பிச் செலுத்த மூன்று மாத கால அவகாசம்
- சிப்காட் மூலம் கடுன் வழங்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கும், அதேபோன்று கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக "கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஒரு நிறுவனத்திற்கு 25 லட்சம் ரூபாய் வரை தமிழ்நாடு அரசின் 6 ரூபாய் வட்டி மானியத்துடன் கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 1.6.2020 தேதி வரை 855 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் 112 கோடி ரூபாய் கடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கோவிட்19 மருந்து உற்பத்தி மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் 50 நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகிறது
மேலும், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ள முதல்வர், ''முதல் கட்டமாக அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்டு நாடுகளில் உள்ள 17 நிறுவனங்களுடன் சுமார் 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், மே மாதம் 26ஆம் தேதியன்று கையெழுத்தானது. இதன் மூலம் தமிழக இளைஞர்கள் 47 ஆயிரம் பேர் வேலை பெற உள்ளனர்,'' என்றார்.
மேலும் பொது மக்கள் முகக்கவசம் அணிவதை தொடர்ந்து பின்பற்றவேண்டும் என்றும் சோப்பு பயன்படுத்தி கைகளை நன்று கழுவவேண்டும் என்றும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: