உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் மீது குற்றச்சாட்டு: 25 பள்ளிகளில் வேலை செய்து 1 கோடி வரை சம்பளம் பெற்றதாக புகார் - நடந்தது என்ன?

பட மூலாதாரம், Ashok sharma
- எழுதியவர், சமிராத்மஜ் மிஸ்ரா
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடக்கப்பள்ளி கல்வித்துறையில் மோசடி செய்து ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆசிரியை அனாமிகா ஷுக்லா சனிக்கிழமையன்று காஸ்கஞ்சில் கைது செய்யப்பட்டார்.
இந்த மோசடி குறித்து விசாரிக்க, தொடக்கப்பள்ளி கல்வித்துறை, அனாமிகா ஷுக்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த நோட்டீஸுக்கு பதிலளிக்காமல் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்ய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார்.
காஸ்கஞ் காவல் நிலையத்தில் தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் அனாமிகா ஷுக்லாவின் மீது புகார் அளித்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் இப்போதுவரை கைது செய்யப்பட்ட அனாமிகா ஷுக்லாதான் மோசடி செய்த அனாமிகா ஷுக்லாவா என தெளிவாக தெரியவில்லை.
காஸ்கஞ் பகுதியின் தொடக்கக்கல்வி அலுவலர் அஞ்சலி அகர்வால், "இந்த விஷயம் குறித்து தெரிந்தவுடன் நாங்கள் அனாமிகா ஷுக்லா எனும் ஆசிரியருக்கு நோட்டீஸ் அனுப்பினோம். சனிக்கிழமையன்று அவர் வேறு ஒரு நபர் மூலம் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். அவரிடம் கேட்டபோது, அனாமிகா அலுவலகத்திற்கு வெளியே வந்தது தெரிய வந்தது. உடனே போலீஸுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்" என பிபிசியிடம் கூறினார்.
அவர் கைது செய்யப்பட்டவுடன் அங்கிருக்கும் பத்திரிக்கையாளர்களிடம் தன்னுடைய பெயர் அனாமிகா சிங் என கூறினார். பின்னர் போலீஸ் விசாரணையின்போது வேறு பெயர் சொன்னார். அவரிடம் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட மூலாதாரம், Ashok sharma
மோசடி செய்து 25 இடங்களில் ஒரே நேரத்தில் வேலை செய்து, ஒரே வருடத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளமாக பெற்றதாக அனாமிகா ஷுக்லாவின் மேல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட அனாமிகா ஷுக்லா காஸ்கஞ் மாவட்டத்தின் ஃபரித்பூர் பகுதியில் உள்ள கஸ்தூர்பா பள்ளியில் அறிவியல் ஆசிரியராக ஒன்றரை ஆண்டு பணியாற்றி வருகிறார்.
வெள்ளிக்கிழமையன்று தொடக்கப்பள்ளி கல்விதுறை அதிகாரி அஞ்சலி அகர்வால் அனாமிகா ஷுக்லாவின் ஊதியத்தை நிறுத்திவிட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கஸ்தூர்பா பள்ளியில் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முப்பதாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும்.
தொடக்கப்பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களின் தரவுப்பட்டியல் தயார் செய்தபோது அனாமிகா ஷுக்லாவின் இந்த மோசடி வெளியானது. இந்த நடைமுறையின் போது 25 பள்ளிகளின் பட்டியலில் அனாமிகா ஷுக்லா எனும் பெயர் இருப்பது கண்டறியப்பட்டது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த விஷயம் வெளியானதும் இது குறித்து தொடக்கப்பள்ளி கல்வித்துறையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. அமெட்டி, அம்பேடத்கர் நகர், ரேபரேலி, பிரயாக்ராஜ் மற்றும் அலிகட் போன்ற பகுதிகளில் இருக்கும் பள்ளிகள் உட்பட 25 பள்ளிகளில் ஆசிரியராக அவரது பெயர் வந்தது.
கடந்த 13 மாதங்களில் 25 பள்ளிகளில் இருந்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
ஆனால் இந்த அனைத்து பணமும் ஒரே வங்கி கணக்கில் போடப்பட்டுள்ளதா அல்லது தனித்தனி வங்கி கணக்குகளில் போடப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. அது குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
காஸ்கஞ் தொடக்கப்பள்ளி கல்வி அலுவலர் அஞ்சலி அகர்வால் கூறுகையில், ”அவர் சம்பளத்தை அவர் வேலைபார்க்கும் பள்ளியிலிருந்து வாங்கியுள்ளார். பிற இடங்களில் இதே பேரை கொண்ட ஆசிரியரின் சம்பளமும் இவர் வங்கி கணக்கில் வந்துள்ளதா என விசாரணை நடந்து வருகிறது. மேலும் மற்ற இடங்களில் இவர் பெயரில் யார் வேலை செய்கின்றனர் மற்றும் அதற்கான சம்பளம் வாங்குகின்றனர் என்பது குறித்த விசாரணையும் நடந்து வருகிறது. இவ்வாறு மோசடி செய்தது இவர்தானா என்றும் விசாரிக்கப்படுகிறது. இது குறித்து ஆன்லைனில் நாங்கள் பார்த்தபோது ஆதார் கார்டில் இருந்த பெயரும் பட்டியலில் இருந்த பெயரும் ஒன்றாக இருந்தது. அவரின் தந்தை பெயரும் ஒன்று போல இருந்தது. அந்த ஆவணத்தில் புகைப்படம் தெளிவாக இல்லை”, என்றார்.

பட மூலாதாரம், Ashok sharma
கைது செய்யப்பட்ட பின் அனாமிகா, தனக்கு வேலை வாங்க உதவி செய்தவருக்கு தான் ஒரு லட்சம் ரூபாய் அளித்ததாக அங்கிருந்த பத்திரிக்கையாளரிடம் கூறினார்.
காஸ்கஞ் மாவட்டத்தின் உள்ளூர் பத்திரிக்கையாளர் அஷோக் ஷர்மா, ஒரு வேளை மோசடி செய்த அனாமிகா இவர் இல்லையென்றால் நோட்டீஸுக்கு பதில் அளிக்காமல் வேலையை ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்.
ஆனால் அனாமிகா ஷுக்லா எனும் பெயரில் ரேபரேலியிலிருந்து வெள்ளிக்கிழமையன்றே வாட்ஸப்பில் தொடக்கக்கல்வி அதிகாரிக்கு ராஜினாமா கடிதம் வந்துள்ளது என கூறப்படுகிறது. ஆனால் இதற்கு ஆதாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
இந்த வழக்கில் தொடக்கக் கல்வி துறையில் வேலை செய்பவர்களின் உதவி இல்லாமல் ஒரு தனி ஆசிரியர் இவ்வளவு பெரிய மோசடியை தனியாக செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.
இது குறித்து தீவிர விசாரணை செய்ய வேண்டும் எனவும் குற்றவாளியை விரைவில் கண்டறிய வேண்டும் எனவும் தொடக்கக்கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












