கொரோனா வைரஸ்: “தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறினால் இனி அரசு முகாம்தான்”

சென்னையில் கொரோனா தொற்றை குறைக்க, கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசு முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிக பாதிப்புள்ள மாவட்டமாக சென்னை தொடர்ந்து நீடிக்கிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872ஆக உள்ளது. குறிப்பாக, சென்னையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 17,598ஆக உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து, சென்னை நகரத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த, கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களை வீடுகளில் தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிடுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

''கொரோனா அறிகுறிகள் தென்படும் நபர்களில் ஏசிம்டமேடிக் நபர்களாக இருப்பவர்கள், அவர்களின் விருப்பம் இருந்தால் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் தனியாக கழிவறை, அவர்கள் தங்குவதற்கு ஒரு அறை இருந்தால் அவர்கள் வீட்டில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் இவர்களில் 20 சதவீதம் நபர்கள் தனிமைப்படுதலை முறையாக பின்பற்றாமல், பொது வெளிகளுக்கு வருவதால், நோய் தொற்று அதிகரித்துள்ளது. இதனை தடுக்க, ஏசிம்டமேடிக் நபராக ஒருவர் இருப்பது உறுதியானால், அவரையும், அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரோடு தங்கியிருப்பவர்களும் அரசின் முகாமிற்கு மாற்றப்படுவார்கள்,''என்றார் ஆணையர் பிரகாஷ்.

அவர் மேலும், 'ஏசிம்டமேடிக் நபராக இருப்பவர்களுடன் வசிப்பவர்கள், அரசு முகாம்களில் 10 அல்லது 14 நாட்கள் தங்கவைத்து பின்னர் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிற்கு அனுப்பப்படுவர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சிலர் விதிகளை பின்பற்றுவதில்லை என்பதால், வீடுகளில் தனிமைப்படுத்துவதை நிறுத்துகிறோம்,''என்று பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை நகரத்திற்கான கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேசும்போது, தமிழகத்தில் குணமானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார். நோய் தொற்று அதிகமுள்ள சென்னை நகரத்தில் அதிக எண்ணிக்கையில் சோதனைகள் செய்யப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாஸ்க் அணிவதை மக்கள் அடுத்து ஒரு மாதத்திற்கு கட்டாயம் பின்பற்றினால் நோய் பரவலை தடுக்கலாம் என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வேறு மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்கள் தற்போது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்படும் நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

சென்னையில் கொரோனா அறிகுறிகள் தென்படுபவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவரும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்த கருத்திற்கு விளக்கம் தருவதாக கூறியுள்ளார் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்.

''கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை மீறும் பட்சத்தில், அவர்களை வீட்டில் இருந்து அரசு முகாமுக்கு மாற்றுவோம். அரசின் விதிகளை பின்பற்றி, வீட்டில் இருந்து வெளியேறாமல் இருப்பவர்கள் தொடர்ந்து அவர்கள் வீட்டில் இருக்கலாம். தனிமைப்படுத்தப்பட்டவர்ளை கண்காணிக்க குழுக்கள் உள்ளன. விதிகளை பின்பற்றவில்லை என உறுதியானால், அவர்களை முகாமுக்கு மாற்றுவோம். நோய் பரவலை தடுக்க இந்த ஏற்பாட்டை செய்கிறோம்,'' என்றார் ராதாகிருஷ்ணன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: