You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அன்பழகன் - திமுக எம்.எல்.ஏ உடல்நலத்தில் முன்னேற்றம்: கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனின் உடலநலன் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
'திரு.ஜெ.அன்பழகன் அவர்களின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பூரணநலம் பெற இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,'' என்றார் முதல்வர் பழனிசாமி. மேலும் அரசின் சார்பில் எல்லா உதவிகளும் அளிக்கப்படும் என்றார்.
இன்று, வெள்ளிக்கிழமை, காலை வெளியான அறிவிப்பின்படி, அவர் உடல்நலத்தில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு உயிர்காக்கும் கருவி மூலம் 80 சதவீத ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று மருத்துவமனை வியாழன் மாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஒன்றிணைவோம் வா'
சென்னை திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ள ஜெ.அன்பழகன், கொரோனா ஊரடங்கு காலத்தில், திமுகவின் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது, விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
மே 2ஆம் தேதி, காய்ச்சல் இருப்பதாக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அப்போது கொரோனா சோதனை செய்ததில், அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என திமுக நிர்வாகி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
''அவர் முதலில் அவரது இல்லத்தில் தன்னைத்தானே தனிமைபடுத்திக் கொண்டிருந்தார். காய்ச்சல் இருந்ததால் சோதனை நடத்தப்பட்டது. அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் உள்ளது. அதோடு சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.''
''அவரது குடும்பத்தார் அவரை சந்திப்பதற்குக் கூட அதிக கட்டுப்பாடுகள் இருப்பதால், கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் அவரை நலம் விசாரிக்க முடியாத சூழல் உள்ளது. எங்களுக்கு இது வருத்தமான காலம்,''என்கிறார் அந்த நிர்வாகி.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
அன்பழகனுக்கு நோய் தொற்று உறுதியானதால், நிவாரண உதவிகளை வழங்கும் திமுகவினர் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யார் இந்த அன்பழகன்?
ஊரடங்கு காலத்தில் அவரது தொகுதியில் பொது மக்களுக்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார் ஜெ.அன்பழகன். அதோடு, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சேவை நிறுத்தப்பட்டிருப்பது குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தார் அவர்.
அன்பழகன் கடந்த 2001ல் தியாகராய நகர் எம்.எல்.ஏவாகவும், 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
திமுக எம்.எல்.ஏ மற்றும் அரசியல்வாதியாக மட்டுமல்லாது தமிழ் திரைப்பட தயாரிப்பாளராகவும் இவர் அறியப்படுகிறார்.
விஜய் படத்துக்கு உதவ முன்வந்தவர்
2013ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த தலைவா படம் வெளியாவதில் சிக்கல் உண்டானது.
அப்போது அந்தப் படத்தின் குழுவினர் விரும்பினால் தனது 'அன்பு பிக்சர்ஸ்' நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் 300 திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடத் தயார் என்று கூறியிருந்தார் அன்பழகன்.
எனினும், அன்பழகனை படக்குழுவினர் யாரும் நாடவில்லை.
அப்போதைய முதல்வர் ஜெயலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து, அவருக்கு படத்தை வெளியிட உதவுமாறு கோரிக்கை வைத்து நடிகர் விஜய் காணொளி வெளியிட்ட பின் அந்தப் படம் வெளியானது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: