You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்க போராட்டங்களை விமர்சித்த அழகிப்பட்டம் வென்ற மாடல் மற்றும் பிற செய்திகள்
கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் அமெரிக்க காவல் துறையின் பிடியில் இருந்தபோது மரணமடைந்த நிகழ்வைத் தொடர்ந்து அந்நாடு முழுவதும் வெடித்துள்ள போராட்டங்களை இழிவு படுத்துவதாக, அழகிப்பட்டம் வென்ற பெண் ஒருவர் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார்.
பிரேசிலிய - சீன வம்சாவளியைச் சேர்ந்த சமந்தா கேட்டி ஜேம்ஸ் என்னும் அந்த மாடல் 2017இல் மிஸ் யுனிவர்ஸ் மலேசியா பட்டம் வென்றவர்.
"சில பாடங்களைப் படிப்பதற்காக, கறுப்பினத்தவராக அமெரிக்காவில் பிறக்க நீங்கள்தான் முடிவு செய்தீர்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள்," என்று அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
போராட்டக்காரர்களிடம் 'ரிலாக்ஸ்' என்றும் தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருந்த அவர், "வெள்ளை இனத்தவர்கள் வென்றுவிட்டதுபோல தெரிகிறது, அவர்களுக்கு உங்கள் மீது அதிகாரம் உள்ளது," என்று கூறியிருந்தார்.
இதனால், அவரது அழகிப்பட்டம் பறிக்கப்படவேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் விமர்சித்தனர்.
தற்போது, தனது கருத்துகளுக்காக மன்னிப்பு கேட்டுள்ள சமந்தா, மலேசிய பள்ளியில் வெள்ளை இன மாணவியாக இருந்த தனக்கே இனவெறியை எதிர்கொண்ட அனுபவம் உண்டு என்று கூறியுள்ளார்.
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வட இந்தியப் பெண்
தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்ட வட இந்தியப் பெண் ஒருவர், தாம் கட்டாயப்படுத்தப்பட்டு பாலியல் தொழிலில் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சாலையில் ரத்தக் காயங்களுடன் கிடந்த அந்த பெண்ணைக் காப்பாற்றி, கடந்த திங்கள்கிழமை அன்று (மே 1) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அனுமதித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லை: கேரள சிறுமி தற்கொலை
கேரளாவின் மலப்புரம் மாவட்டம், இரும்பிலியம் ஊராட்சியில் உள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில் படித்த இந்த மாணவி, தம்மால் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கமுடியவில்லை என்ற கவலையில் இருந்துள்ளார்.
இந்நிலையில் தமது வீடு இருக்கும் தலித் காலனியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் தீவைத்துக் கொளுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் இந்த சிறுமி.
விரிவாகப் படிக்க: ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வசதி இல்லை: கேரள சிறுமி தற்கொலை
தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
விரிவாகப் படிக்க: தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா - புதிய உச்சத்தை தொட்ட பாதிப்பு
காவல்துறை அதிகாரி மீது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு
ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்திற்கு நேரடி காரணமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியான டெரெக் சயூவின் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டாக மாற்றிமைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி, இந்த சம்பவத்தின்போது நிகழ்விடத்தில் இருந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் மீது முதல் முறையாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: