கொரோனா வைரஸ்: இனி ஆடம்பர திருமணங்கள் சாத்தியமா? திருமண சந்தையை புரட்டி போட்ட பெருந்தொற்று

    • எழுதியவர், அபர்ணா ராமமூர்த்தி
    • பதவி, பிபிசி தமிழ்

`Big Fat Indian weddings` - இந்தியக் கலாசாரத்தோடு ஒன்றிணைந்தவை திருமண நிகழ்வுகள். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப்பயிர் என்று சொல்லுவார்கள். அப்படிப்பட்ட திருமணத்திற்காக லட்சக்கணக்கில் அல்லது கோடிக்கணக்கில் செலவு செய்யும் மக்கள் இருக்கிறார்கள். 

திருமணத்திற்காக எவ்வளவு செலவு செய்யப்படுகிறது என்பது ஒரு அந்தஸ்தை போலவே கருதப்படும் சூழல் இந்தியாவில் உள்ளது.

எளிமையாக திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் ஆடம்பர திருமணங்கள் நிகழ்வதையும் நாம் பார்க்கிறோம்.

இந்தியாவில் ஒரு ஆடம்பர திருமணத்திறகு ஆகும் செலவு 2 கோடியிலிருந்து 25 கோடி ரூபாய் என பிஸ்னஸ் ஸ்டான்டர்ட் பத்திரிக்கை கூறுகிறது.

திருமணப் பத்திரிகைகளுக்கு மட்டுமே லட்சக் கணக்கில் செலவு செய்பவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால், சமீபத்தில் என் நண்பர் எனக்கு வாட்சப்பில் அனுப்பிய அவரது திருமணப் பத்திரிகை எனக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், இனி இதுதான் எதிர்காலமோ என்ற கேள்வியையும் எழுப்பியது.

திருமணத்தை பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்ப உள்ளதாகவும், அனைவரும் அந்த நேரலையில் கட்டாயம் கலந்து கொண்டு வாழ்த்த வேண்டும் என்றும் கூறியது அந்த திருமண அழைப்பு

சற்று யோசித்து பார்த்தால், தற்போதைய சூழலில் இதைவிட சிறந்த வழி இல்லைதான் என தோன்றியது. 

இனி இந்தியாவில் திருமண நிகழ்வுகள் இப்படிதான் நடக்குமா? கொரோனா தொற்று திருமண சந்தையை எந்தளவிற்கு மாற்றி இருக்கிறது?

திருமண சந்தை

கடந்த சில ஆண்டுகளில் திருமணங்கள் என்பது மிகப் பெரிய சந்தையாக உருவெடுத்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. ஆண்டுக்கு இந்தியாவில் 10 மில்லியன் திருமணங்கள் நடைபெறுகின்றன.

திருமணங்களுக்கான மேட்ரிமோனியல் இணையதளங்கள் தொடங்கி, மேக்-அப், புகைப்படங்கள் மற்றும் வீடியோ, கேட்டரிங் சேவைகள், மலர் அலங்காரங்கள், விளக்குகள், நகைகள், ஆடைகள் வாங்குவது, இசை நிகழ்ச்சி நடத்துபவர்கள் என திருமண சந்தை 40-50 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானது என்று கேபிஎம்ஜி அறிக்கை கூறுகிறது.

பல்வேறு முக்கியத்துறைகள் இதில் அடங்குவதால் இந்தியப் பொருளாதாரத்திலும் திருமண சந்தை மிகப் பெரிய பங்களிப்பை (30 -40%) அளிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

திருமணங்களுக்கு என வங்கிகள் தனியாக கடனும் வழங்குகின்றன.

எந்தப் பிரச்சனை வந்தாலும், பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலும் பாதிப்படையாத சந்தையாக இது விளங்கியது. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றால் திருமண சந்தையே ஆட்டம் கண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் டிரெண்டான ஒரு விஷயம் டெஸ்டினேஷன் வெட்டிங்க்ஸ். திருமணம் செய்து கொள்பவர்கள் ஒரு இடத்தை தேர்வு செய்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு அங்கு திருமணம் செய்து கொள்வதுதான் டெஸ்டினேஷன் வெட்டிங்.உதாரணமாக பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி இணையின் திருமணம் இத்தாலியில் உள்ள ஒரு நட்சத்திர ரெசாட்டில் நடைபெற்றது. நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் ராஜஸ்தானில் திருமணம் செய்து கொண்டனர்.

இதுபோன்ற டெஸ்டினேஷன் வெட்டிங்குகளின் மதிப்பு 23,000 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது என 2019ஆம் ஆண்டுக்கான ஃபிக்கி அறிக்கை கூறுகிறது. 2020ஆம் இறுதிக்குள் இது மேலும் 25 சதவீதம் வளர்ந்து 45,000 கோடியாக உயரும் என்றும் கணக்கிடப்பட்டது.

ஆனால் இதற்கெல்லாம் முட்டுக்கட்டையாக அமைந்துவிட்டது கொரோனா வைரஸ்.

வெட்டிங் பிளானர்ஸ் 

பெரிய அளவில் திருமணங்கள் நடப்பது சாத்தியமில்லை என்பதால், வெட்டிங் பிளானர்ஸ்கான தொழில் முடங்கி போய்விட்டது என்கிறார்கள் அத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.

ஒவ்வொரு வெட்டிங் பிளானர்சும் அவர்கள் வழங்கும் சேவைக்கு ஏற்றாற்போல பணம் வாங்குவார்கள். குறைந்தபட்சம் இரண்டரை லட்சத்தில் இருந்து பல கோடி ரூபாய் வரை இதற்காக வாங்கப்படுகிறது.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு திருமணம் குறித்து முடிவும், திட்டமிடலையும் செய்து வந்தது மனமக்களின் குடும்ப உறுப்பினர்கள்.

ஆனால் இப்போது ஒரு திருமண நிகழ்வை முழுமையாக திட்டமிடுவது என்பது மிகப்பெரிய தொழில். முக்கியமாக டெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை போன்ற மெட்ரோ நகரங்கள் இதற்கு பெயர் போனவை.

திருமண மண்டபம் புக் செய்வதில் தொடங்கி, எந்த மாதிரியான பூக்கள், மண்டபத்திற்குள் எப்படி நுழைய வேண்டும், புகைப்படக் கலைஞர்களை புக் செய்வது, தீம் வெட்டிங்க்ஸ், திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஜூஸ் கொடுப்பது, சுத்தம் செய்ய பணியாளர்களை அமர்த்துவது. திருமண ஆல்பம் வரை அனைத்தையும் ஒருங்கிணைப்பதுதான் வெட்டிங் பிளானர்களின் வேலை.

தற்போது நடுத்தர குடும்பங்கள் பல, வெட்டிங் பிளானர்ஸை கொண்டு திருமண திட்டமிடுதலை நடத்துகிறார்கள். இதற்கு பல லட்சங்கள் செலவானாலும், இது ஒரு அந்தஸ்து போல ஆகிவிட்டது. கொரோனா தொற்று பரவியதில் இருந்து இத்தொழில் மிகப்பெரிய சரிவை சந்தித்திருக்கிறது.

லாக்டவுன் வெட்டிங்ஸ்

ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும், இந்தியாவில் திருமணங்கள் நடக்காமல் இல்லை. பல கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள் நடைபெற்றுதான் வருகின்றன.

இந்நிலையில் லாக்டவுனில் கட்டுப்பாடுகளுடன் திருமணங்களை திட்டமிடுவதற்கும் நடத்துவதற்கும் சில வெட்டிங் பிளானர்ஸ் இதற்காக தனியாக செயல்படுகிறார்கள்.

லாக்டவுன் நேரத்தில் திருமணங்களை திட்டமிடும் ஹைத்தராபாத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஈவண்ட் ஹவுஸ் என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டது பிபிசி தமிழ்.

திருமண நிகழ்வுகளுக்கு பெயர் போன இந்தியா மாதிரியான ஒரு நாட்டில் சமூக விலகலை பின்பற்றி வெறும் 50 நபர்களுடன் திருமணம் நடப்பது சாத்தியமா என்று கேட்டேன்.

இதற்கு பதிலளித்த அந்நிறுவனத்தின் செயல்பாட்டு மேலாளர் ரவிஷங்கர், "நாங்கள் 15 ஆண்டுகளாக திருமண சந்தையில் இருக்கிறோம். ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்துள்ளோம். இந்தத் தருணம் சவாலனதுதான்" என்று அவர் கூறுகிறார்.

கொரோனா காலத்தில் சரியாக திட்டமிடப்பட்டு திருமணங்கள் நடத்தி வைக்கப்படும் என்று விளம்பரம் வெளியிட்டதில் இருந்து மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு நாளைக்கு 100ல் இருந்து 150 அழைப்புகள் வருவதாக கூறும் ரவிஷங்கர், இந்த மாற்றத்திற்காக மனதளவில் மக்கள் தயாராகிவிட்டதாக தெரிவிக்கிறார்.

"முதலில் ஒரு வாடிக்கையாளர் எங்களுக்கு அழைக்கும்போது நாங்கள் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, அவர்கள் இருக்கும் பகுதி. அவர்கள் சிவப்பு மண்டலப்பகுதிகளில் இருந்தால், திருமண நடத்திவைக்க சாத்தியம் இல்லை என்பதையும், அதற்கான காரணத்தையும் நாங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம். ஆரஞ்சு அல்லது பச்சை மண்டல பகுதிகள் என்றால்தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம்" என்று அவர் கூறுகிறார்.

"பிறகு திருமணம் நடக்கும் இடம் மிகவும் முக்கியமானது. பல்வேறு பகுதிகளில் திருமண மண்டபங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அதனால் வாடிக்கையாளர் இருக்கும் பகுதியில் சமூகக்கூடம் போன்ற இடங்கள் இருக்கிறதா என்பதை பார்க்க சொல்வோம். அந்த இடம் 200 பேருக்கானதாக இருக்க வேண்டும். 50 பேர்தான் ஒரு திருமண நிகழ்விற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

அவர்களுக்குள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமானால், இடம் பெரிதாக இருக்க வேண்டும்.

அலங்காரம் மிகவும் எளிமையாக இருக்கும். உணவு என்று வரும்போது ஒவ்வொருவருக்கும் சீலிடப்பட்ட டப்பாக்களில் (.closed boxes) உணவு வழங்கப்படும். அதே போல ஒவ்வொருவருக்கும் சானிடைஸர் பாட்டில்கள் வழங்கப்படும். யூவி ஹேண்ட சானிடைசேஷன் ஸ்டேஷன் ஒன்றும் தனியாக அமைக்கப்படும்" என்றார் ரவிஷங்கர்

முன்பெல்லாம் மக்களின் தேவை அதிகமாக இருந்தது. பல சிறப்பு சேவைகளை எங்களிடம் கேட்பார்கள். ஆனால், தற்போதுள்ள நிலைமையை அவர்கள் நன்கறிந்துள்ளனர். அதற்கு ஏற்றாற்போல ஒத்துழைக்கவும் செய்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

தடைபட்ட திருமண நிகழ்வுகள்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால், திட்டமிடப்பட்ட திருமண நிகழ்வுகள் பல ரத்து செய்யப்பட்டன. அப்படியே நடந்தாலும் 20 - 50 பேருக்கு மேல் கலந்துகொள்ளக் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடனே நடைபெறுகின்றன.

"திருமணம் என்பது வாழ்வில் ஓரே ஒரு முறை நடப்பது. அதை பெரிதாகவும் மறக்க முடியாத நாளாக்கவும் நாங்கள் பல திட்டங்களை வைத்திருந்தோம். ராஜஸ்தான் அல்லது புதுச்சேரியில் உள்ள ரெஸாரட்டில் டெஸ்டினேஷன் வெட்டிங் பிளான் வைத்திருந்தோம். ஆனால், கொரோனாவால் இப்போது அந்தக்கனவு கலைந்துவிட்டது" என்கிறன்றனர் சென்னையை சேர்ந்த தர்ஷன் மேத்தா மற்றும் தனிஷா இணை.

இவர்களுக்கு ஜூன் மாதம் மிக்பெரிய அளவில் திருமணம் நடக்கவிருந்தது.

எனினும், நம்பிக்கை இழக்காத அவர்கள், திட்டமிட்ட அதே தேதியில் சிறிய அளவில் நெருங்கிய குடும்பத்தினரோடு மட்டும் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

"எப்படி இருந்தாலும் எங்கள் திருமண நாள் எங்களுக்கு மறக்க முடியாத நாளாகவே இருக்கும். நிறைய பேர் எங்கள் திருமணத்திற்கு வர வேண்டும், பெரிய அளவில் நடத்த வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அதற்காக எங்கள் அன்பிற்குறியவர்களை ஆபத்தில் தள்ள முடியாது" என்கிறார் தர்ஷன் மேத்தா.

தடைபட்ட திருமண நிகழ்வுகளால் ஏற்படும் வேலையிழப்பு

கடந்த 8 ஆண்டுகளாக ஃப்ரீலான்ஸ் வெட்டிங் ஃபோட்டாகிராபராக இருந்து வருகிறார் சென்னையை சேர்ந்த ஹரி பிரகாஷ்.

தற்போது கொரோனா தொற்றால் இதுவரை இல்லாத அளவிற்கு இத்துறை பலத்த அடியை சந்தித்திருப்பதாக அவர் கூறுகிறார்.

"கொரோனா தொற்றுக்கு முன்பு ஒரு திருமணத்திற்கு புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ எடுப்பவர்கள் சேர்த்து 12 பேர் தேவைப்படுவார்கள். தற்போது இந்த நிலை அப்படியே மாறிவிட்டது. திருமணங்கள் பெரிய அளவில் நடப்பதில்லை. வீட்டிலேயேதான் சில திருமணங்கள் நடைபெறுகின்றன. அதற்கு, ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒரு வீடியோ கலைஞர் மட்டுமே தேவைப்படுகிறார்கள். 12 பேர் செய்ய வேண்டிய வேலையை இரண்டு பேர் மட்டுமே செய்வதால் மீதமுள்ள 10 பேர் வேலையை இழந்துள்ளனர்" என்கிறார் ஹரி பிரகாஷ்

மேலும் திருமண நிகழ்வுக்கான ஆல்பம் போடுவது தேவையற்றதாகிவிட்டது. இதனால், ஆல்பம் வடிவமைப்பாளர்கள் மற்றும் ஆல்பம் பிரிண்ட் செய்பவர்கள் பலரும் வேலை இழந்துள்ளார்கள் என்றும் அவர் கூறுகிறார்.

"இதெல்லாம் 3 அல்லது 4 மாதங்களில் சரியாகிவிடும் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் இது ஓரளவிற்கு சரியாக ஒன்றரை ஆண்டுகள் ஆகும்."சென்னையில் தனியாக ஸ்டூடியோ வைத்திருக்கும் ஹரி பிரகாஷ், தான் பணியமர்த்திய 3 பேருக்கு ஊதியம் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறார். அவர்களுக்கான மாத ஊதியத்தை முழுமையாக கொடுக்க முடியவில்லை என்றாலும், தன்னால் முடிந்த தொகையை இரண்டு மாதங்களாக வழங்கி வருவதாக அவர் கூறுகிறார்.

மேலும், ஸ்டூடியோவிற்கான வாடகையை செலுத்தவும் சிரமப்படுகிறார்.

இடத்தின் உரிமையாளர், வாடகை கொடுத்துதான் ஆக வேண்டும் என்று சற்று கடுமையாக கூறிவிட்டதாக அவர் தெரிவிக்கிறார்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, அவர் கேமிராவிற்கான மாதத்தவணையையும் செலுத்தி வருகிறார்.

"இப்போது மாதத் தவணைகள் செலுத்த விலக்கு அளிக்கப்பட்டாலும், நாளை வட்டியுடன் நாம்தான் கட்ட வேண்டும். அதனால் பெரிய பலனில்லை" என்பது ஹரி பிரகாஷின் கருத்து.

"நாங்கள் மட்டும் வேலையிழக்கவில்லை, மண்டபத்தை சுத்தம் செய்பவர்களில் இருந்து, கல்யாண சமையல் பாத்திரங்களை தேய்ப்பவர்கள் வரை, பலரும் வேலை இழந்துள்ளார்கள். அவர்கள் எதிர்காலம் எல்லாம் கேள்விக்குறியே" என்று அவர் தெரிவிக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: