கொரோனா தொற்று அதிகரிக்கும் போது இந்திய அரசு ஊரடங்கை தளர்த்துவது ஏன்?

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தரவுகள் காட்டுகின்றன. எனினும் ஊரடங்கை இந்திய அரசு தளர்த்தியிருப்பது ஏன்?

இதுகுறித்து விரிவாக எழுதுகிறார் பிபிசி செய்தியாளர் அபர்ணா அல்லூரி.

கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக நேற்று மத்திய அரசு அறிவித்தது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜுன் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். தரைவழி போக்குவரத்து, விமான போக்குவரத்து எல்லாம் கடந்த 10 நாட்களுக்கு முன்பே பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்டுவிட்டது.

பல தொழில்களும், பணியிடங்களும் ஏற்கனவே திறக்கப்பட்டுதான் இருக்கின்றன. கட்டுமானத் தொழில் மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டது. மார்கெட்டுகளில் எப்போதும் போல மக்கள் கூட்டம் இருக்கிறது. விரைவில் உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், வழிபாட்டுத் தளங்கள் அதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிடும்.

ஆனால், கொரோனா தொற்றின் வீரியம் ஒருபக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்தியா ஊரடங்கை முதல் முறையாக அறிவித்தபோது இங்கு 519 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. 10 பேர் உயிரிழந்து இருந்தனர்.

ஆனால், தற்போது குறைந்தது 1 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு மேல் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அப்படி இருக்கையில், ஊரடங்கைத் தளர்த்தி தொழில்களைத் தொடங்க இந்தியா அனுமதித்தது ஏன்?

ஊரடங்கை இதற்கும் மேல் நீட்டிப்பது கடினம்

"இது நிச்சயம் ஊரடங்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய நேரம்" என்கிறார் தொற்று நோய் குறித்த ஆய்வாளரும் பேராசியருமான கௌதம் மேனன்.

"ஒரு கட்டத்திற்கு மேல், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், மனநல ரீதியாகவும் ஊரடங்கை நீட்டிப்பது கடினம்" என்று அவர் கூறுகிறார்.

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளில் இருந்து, பேரிழப்பு ஏற்படத் தொடங்கிவிட்டது. ஏனெனில் பலரும் இங்கு தினக்கூலியாகவோ அல்லது அதற்கு நிகரான வேலைகளிலோ இருக்கிறார்கள். இதனால் பலரும் தங்களது வாழ்வாதரத்தை இழந்தனர். அதோடு பல்வேறு தொழில்களும் இந்த ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டன. கார் உற்பத்தியாளர்களில் இருந்து, ஆடை நிறுவனங்கள் முதல் பெட்டிக்கடைகள் வரை அனைத்து தொழில்களும் சரிவை சந்தித்துள்ளன.

பொருளாதாரம் பாதிக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்தது.

ஏப்ரல் மாத இறுதியில் ஊரடங்கு தளர்த்தப்பட வேண்டும் என்றும் ஊரடங்கை மேலும் நீட்டித்தால் இந்தியா பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார நிபுணருமான ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

இந்தியா கொரோனா தொற்று பாதிப்புகளோடு, பொருளாதாரத்தையும் சேர்த்து சமாளிக்க வேண்டும் என்று உலகளாவிய ஆலோசனை அமைப்பான மெக்கின்ஸி கருத்து தெரிவித்திருந்தது.

"இந்த ஊரடங்கின் முக்கிய நோக்கமே இந்தியாவில் கொரோனா உச்சத்தை தள்ளிப்போட்டு, அதற்குள் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதே ஆகும். இதனால், கொரோனா உச்சம் அடையும் போது அதனை சமாளிக்க இந்தியா தயாராக இருக்கும். இந்த நோக்கம் பெருமளவில் வெற்றி அடைந்துள்ளது" என்கிறார் பொது சுகாதார வல்லுநரான மருத்துவர் என். தேவதாசன்.

கடந்த 2 மாதங்களில் அரங்கங்கள், பள்ளிகள் மற்றும் ரயில் பெட்டிகள் கூட தனிமைப்படுத்தப்படும் இடங்களாக மாற்றப்பட்டுள்ளன. கொரோனா பரிசோதனை அதிகப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு கவசங்களின் தயாரிப்பும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

மாறிக் கொண்டிருக்கும் நிலைமை

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கிய ஒருசில வாரங்களில் குறைவான பாதிப்பு மட்டுமே இருந்தது வல்லுநர்களுக்கு புரியாத ஒன்றாக இருந்தது.

அடர்த்தியான மக்கள் தொகை, நிதி பற்றாக்குறையில் இருக்கும் பொது சுகாதார மருத்துவமனைகள் இருந்த போதிலும், அதிகப்படியான தொற்று பாதிப்போ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. கொரோனா பரிசோதனை விகிதம் குறைவு ஒரு காரணமாக இருந்தாலும், அனைத்து கேள்விகளுக்குமான பதிலை இது அளிக்கவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று மிகவும் தீவிரமாகும் முன் ஊரடங்கை அமல்படுத்தும் தேவை அரசுக்கு ஏற்பட்டது.

ஆனால், நிலைமை அதன்பிறகு மாறிவிட்டது.

"மேலும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களாக இருப்பார்கள்" என தேவதாசன் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் ஊரடங்கை தளர்த்தலாம் என்று அரசாங்கத்திற்கு நம்பிக்கை அளித்த விஷயம் எது?

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும், அவற்றில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்பட வேண்டிய அளவிற்கு தீவிர நோயாளிகள் குறைவு. மேலும் மும்பை நகரத்தை தவிர வேறெங்கும் மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை.

இந்திய அரசு அளிக்கும் தரவுகள், கொரேனாவால் மற்ற நாடுகளை விட ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவே கூறுகிறது.

உதாரணமாக, இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3 சதவீதமாக உள்ளதாக அரசு கூறுகிறது. இது உலக அளவில் ஒப்பிட குறைவானதாகும்.

ஆனால், சிலர் இதை ஒப்புக்கொள்ளவில்லை.

கொரோனா இறப்புகளை கணக்கிட அல்லது பதிவு செய்ய இந்தியா சரியான முறையை பின்பற்றவில்லை. கொரோனாவால் ஏற்படும் அனைத்து உயிரிழப்புகள் பதிவாவது கிடையாது என்கிறார் பிரபல தொற்று நோய் நிபுணரான மருத்துவர் ஜேகப் ஜான்.

மேலும் கொரோனா தொற்றுப் பரவலைக் காட்டும் வரைகோட்டை தட்டையாக்க வேண்டும் என்று இல்லாமல், கொரோனா இறப்பு விகிதத்தை காட்டும் வரைகோட்டைத் தட்டையாக்குவதுதான் இலக்காக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

இந்நிலையில், ஜூலை அல்லது ஆகஸ்டு மாதங்களில்தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சத்தை அடையும் என்று நம்பும் மருத்துவ வல்லுநரான ஜான், ஒழுங்கற்ற முறையில் இருந்த ஊரடங்கினால் எந்த பயனும் இல்லை என்று உணர்ந்த அரசு அதை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறுகிறார்.

கொரோனா உச்சத்தை அடையும்போது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா?

சரியான நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதாக நம்பும் மருத்துவர் மேனன், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீதே அதிக கவனம் செலுத்தப்பட்டதாக கூறுகிறார்.

"வெளிநாட்டில் இருந்து வரும் நபர்கள் கொரோனா வைரஸ் பரப்புவதை தடுப்பதன் மூலம் உள்நாட்டில் இத்தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தார்கள். ஆனால், விமான நிலையங்களில் செய்யப்பட்ட பரிசோதனைகள் எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

தற்போது உள்ளூர் அளவில் ஊரடங்கை பிறப்பிக்க வேண்டிய நேரம்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் தொற்று பாதிப்பு வேறுபடுவதால், ஊரடங்கை நீட்டிப்பது மற்றும், தளர்த்துவதற்கான முடிவை மாநில அரசுகளே எடுக்குமாறு மத்திய அரசு கூறிவிட்டது.

நாட்டின் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமான கொரோனா தொற்றுகள் இருப்பது மகாராஷ்டிராவில்தான்.

அதோடு தமிழ்நாடு, குஜராத் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.

ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்பிவரும் காரணங்களால் பிகார் போன்ற மாநிலங்களிலும் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை இப்போது அதிகரித்து வருகிறது.

"முதலில் கொரோனா தொற்று பாதிப்புகள் பெரும்பாலும் நகரங்களில்தான் இருந்தது. இப்போது புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இதனால், நகர்ப்புறங்களில் இருந்து, கிராமப்புறங்களுக்கு நாம் வைரஸ் தொற்றை அனுப்பி வைக்கிறோம்" என்று தேவதாசன் கூறுகிறார்.

இந்த ஊரடங்கால் 3 லட்சம் பேர் வரை கொரோனா பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், 71,000 உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அரசு கூறுகிறது. ஆனால், இனி என்ன நடக்கும் என்பதை நம்மால் சரியாக கூற முடியாது.

Corona Virus: Is enough testing done in India? What is the real situation?

ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும் பாதுகாப்பாக இருக்குமாறும் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

எவ்வளவு நாள் ஊரடங்கை நீட்டிக்க முடியும் அல்லது காவலர்கள் கண்காணிக்க முடியும்.

"மக்கள் இருக்கும் சூழல்தான் எனக்கு கவலை அளிக்கிறது. அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று நினைத்தாலும் பல இடங்களில் அது முடியாமல் போகிறது. கூட்டுக்குடும்பங்களில் வாழும் நபர்கள், குடிசைப்பகுதிகள், எப்போதும் கூட்டமாக இருக்கும் சந்தைகள், தெருக்கள், அல்லது வழிபாட்டுத்தளங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது கடினமாகிறது" என்கிறார் மேனன்.

கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட காலம் இருக்கப்போகிறது. நாம் அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். மக்கள் அதோடு வாழக் கற்றுக் கொள்வதே இதற்கான தீர்வாக இருக்கும்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: