கொரோனாவால் இறந்தோர் சடலங்களுக்கு அருகே பிற நோயாளிகளுக்கு சிகிச்சை தரப்பட்டது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மயங்க் பகவத்
- பதவி, பிபிசிக்காக
சில நாட்கள் முன்பு மும்பையில் உள்ள சியான் மருத்துவமனையில் கொரோனாவால் உயிரிழந்தோர் சடலங்களை மற்ற கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெரும் வார்டில் வைத்திருந்தனர். சடலங்களுக்கு அருகிலேயே மற்ற கொரோனாநோயாளிகள் சிகிச்சை பெரும் காணொளி ஒன்று சமூக வலை தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இந்த காணொளியைக் காட்டி மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சிகள் கண்டனம் செய்தன. ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என்ற கேள்வியும் எழுந்தது.
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் இறுதி சடங்குகளில் ஐந்து பேர் வரை மட்டுமே கலந்துகொள்ளலாம் என மகாராஷ்டிர அரசாங்கம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
எதிர்பாராதவிதமாக மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் உடல்களை உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர். சடலங்களை திரும்ப பெற்றால் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் கொரோனாவால் உயிரிழப்போர் இறுதி சடங்குகளிலும் உறவினர்கள் கலந்துகொள்வதில்லை. கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் உடலைப்பெற்றதால், சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இறுதி சடங்குகளில் கலந்துகொள்வதற்கு பலரும் அஞ்சுகின்றனர்.
எனவே கொரோனா நோயாளிகளுக்காக பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் மயானத்தில் பணிபுரியும் ஊழியர்களின் அனுபங்களை பிபிசி கேட்டறிந்தது.
'இறுதி மரியாதைகளை நாங்களே செய்கிறோம்'
கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதால் உயிரிழப்பவர்களின் உடல்கள் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகின்றன. பெரும்பாலும் ஆம்புலன்சில் வரும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களுடன் உறவினர்கள் யாரும் வருவதில்லை என்கிறார்கள் மின்மயானத்தில் பணிபுரியும் ஊழியர்கள். எனவே மின்மயான ஊழியர்கள் தாங்களே இறுதி சடங்குகளை மேற்கொள்வதாகவும் கூறுகின்றனர்.
இது பற்றி மேற்கு மும்பையில் உள்ள மின்மயானம் ஒன்றில் பணிபுரியும் ராஜு கூறுகையில், ''கொரோனாவால் இறப்பவர்களின் இறுதி சடங்குகளை மேற்கொள்ள உறவினர்கள் யாரும் வருவதில்லை. கடந்த சில நாட்களில் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோதான் உறவினர்கள் சிலர் வந்து மின்மயானத்திற்கு வெளியே காத்திருந்தனர். கொரோனா வைரஸ் பரவல் குறித்து மக்களிடம் அச்சம் நிலவுகிறது. எனவே ஆம்புலன்ஸ் மூலம் மின்மயானம் வந்து சேரும் சடலங்களுக்கு நாங்களே இறுதி மரியாதைகள் செய்கிறோம்.
மேலும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை உறவினர்கள் தூரத்தில் நின்று காணலாம் என அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. ஆனாலும் உறவினர்கள் யாரும் மின்மயானம் வருவதில்லை. எப்போதும் உயிரிழந்தவரின் உடலை கடைசியாக ஒரு முறை காண உறவினர்கள் கூட்டம் கூட்டமாக மின்மயானம் வருவார்கள். ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது'' என்கிறார் அவர்.
ஏன் சடலங்களை உறவினர்கள் வாங்க மாறுகின்றனர் ?
சியான் மருத்துவமனை காணொளி வைரலாக பரவியதை அடுத்து மருத்துவமனை எப்படி இயங்குகிறது என்ற கேள்வி பலருக்கு எழுந்தது. ஆனால் கொரோனவால் உயிரிழந்தவரின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுத்ததே அந்த காணொளியில் இருந்த சூழ்நிலைக்கு காரணமாக கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Getty images
இது தொடர்பாக, மகாராஷ்டிர மருத்துவர்கள் சங்கம் ஒன்றின் தலைவரான மருத்துவர் அவினாஷ் சக்னுரே கூறுகையில், ''கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் சூழ்நிலையில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடல்களை உறவினர்கள் வாங்க மறுக்கின்றனர். குறிப்பாக உறவினர்கள் யார் என நாங்கள் தேடி செல்ல வேண்டியுள்ளது. எனவே உறவினர்கள் யாரும் வராவிட்டால், உடல்களை நாங்களே மின்மயானம் எடுத்து செல்கிறோம். அதற்கும் சில வழிமுறைகள் உள்ளன. அதை நாங்கள் கடைபிடிக்க வேண்டும். அதற்கு கால அவகாசம் தேவை. அதுவரை சடலங்களை தரையில் வைத்துவிட முடியாது.
எனவே உடலை மின்மயானம் கொண்டு செல்லும் வரை கொரோனா வார்டில் படுக்கையில் தான் வைத்துள்ளோம்.
மக்கள் ஒரு தரப்பினர் கூறுவதை மட்டுமே நம்புகின்றனர். ஒருபுறம் நேரம் பார்க்காமல் தங்களுக்காக உழைக்கும் மருத்துவர்களை கை தட்டி கவுரவிக்கின்றனர். மற்றொரு புரம் எந்த விதத்திலும் தவறு செய்யாத மருத்துவர்கள் மீதும் பழி சுமத்தப்படுகிறது என கொரோனா வார்டில் பணிபுரியும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

மேலும் ''கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை வைத்துக்கொண்டே, அந்த இடத்தில் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தவறு தான். ஆனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை உடனடியாக அப்புறப்படுத்த முடியாது, நாங்கள் மேற்கொள்ள வேண்டிய சில கடமைகள் உள்ளன. அதுவரை சடலங்களை அவமதிக்கும் விதமாக தரையில் வைக்கமுடியாது'' என்கிறார் மருத்துவர் அவினாஷ்.
பெரும்பாலும் இறந்தவர்களின் உறவினர்களுக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறிகள் இருக்கும். எனவே அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டிருப்பார்கள். அதனால் அவர்களால் இறுதி சடங்குகளை மேற்கொள்ள முடியாது.
இது தொடர்பாக சியான் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர் விஷ்வதீப் பாலெராவ் கூறுகையில், ''மருத்துவமனையில் ஊழியர் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனாலும் முழுநேரம் அனைத்து ஊழியர்களும் பணிபுரிகின்றனர். மருத்துவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. சடலங்களுக்கு மத்தியில் இருந்த நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். இல்லையென்றால் மருத்துவர்கள் தங்களுக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பது தொடர்பான காணொளி பதிவு செய்யப்பட்டிருக்கும். எனவே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா வேண்டாமா என்பதே குழப்பமாகிவிடும்'' என்கிறார்.
இறுதி சடங்குகளுக்கு அனுமதி உண்டு
பிரிஹன் மும்பை மாநகராட்சி சார்பில் நாயர் என்ற மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் பணிபுரியும் அக்கான்ஷா பாக்வே தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்கிறார்.

''தங்களின் உறவுகள் உயிரிழந்தபோதும், சடலங்களுக்கு அருகில் வர உறவினர்கள் அஞ்சுகிறார்கள். சடலங்களை பெற்றுக்கொண்டு இறுதி மரியாதை செய்யவும் மறுக்கின்றனர். இறுதி சடங்குகளையும் எங்களையே மேற்கொள்ள சொல்கிறார்கள். கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே பயங்கரமான அச்சம் நிலவுகிறது. சடலங்களுக்கு அருகில் சென்றால் தங்களுக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படும் என நம்புகின்றனர்.
''கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமையில் விட்டுவிடாதீர்கள் என நாங்கள் அவர்களுக்கு அறிவுரை வழங்குகிறோம். கொரோனாவால் நோயாளி ஒருவர் உயிரிழந்தால், அவர்களின் உறவினரை நாங்கள் தேடி செல்ல வேண்டியுள்ளது. ஆனால் பெரும்பாலும் உறவினர்களை கண்டுபிடிக்க முடிவதில்லை. அவ்வாறான சூழ்நிலையில் நகராட்சி ஊழியர்களே இறுதி சடங்குகளை மேற்கொள்கின்றனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை ஏற்று இறுதி சடங்குகள் செய்ய உறவினர்கள் யாரும் முன்வருவதில்லை என்பதே உண்மை'', என்கிறார் அக்கான்ஷா.
ஏன் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளிலேயே உயிரிழந்தோரின் உடல்கள் வைக்கப்படுகின்றன? சடலங்களை சரியாக கையாள முடியவில்லையா ? என்று கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ''ஒரு உடலை எடுத்துக்கொண்டு மின்மயானம் சென்ற ஆன்புலன்ஸ் திரும்பி வர சில மணிநேரங்கள் ஆகும். மின்மயானத்தில் இடைவெளி இன்றி அடுத்தடுத்து உடல்கள் வந்து சேரும்போது, அங்கு கால தாமதம் ஆகும். எனவே ஆம்புலன்ஸ் காத்திருந்து தான் உடலை தகனம் செய்துவிட்டு திரும்பி வர முடியும்.ஆம்புலன்ஸ் திரும்பி வருவதற்குள் மருத்துவமனையில் மூன்று உடல்கள் பிளாஸ்டிக்கில் சுற்றப்பட்டு நோய் தொற்று பரவாத வகையில் பதப்படுத்தி மின்மயானத்திற்கு கொண்டு செல்ல தயார் நிலையில் வைக்கப்படும். அதனால் வார்டிலேயே சடலங்களை வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறோம்.
'அச்சத்தில்தான் மக்கள் உதவ முன்வருவதில்லை'
108 ஆம்புலன்ஸ் மாநிலம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உதவ சென்றுகொண்டிருக்கின்றன. கொரோனா பாதித்த நபர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்போது கொரோனா வைரஸ் தொடர்பாக மக்கள் எவ்வளவு பதற்றத்தில் உள்ளனர் என்பது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் விவரித்தார்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு இட்டுச் செல்லும் ஓட்டுநர் நிதின் மன்ச்சேகர் கூறுகையில், ''ஒரு முறை கொரோனவால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை மருத்துவமனை அழைத்து செல்ல சென்றிருந்தேன். அப்போது அவர் ஆம்புலன்சில் ஏற முயன்றபோதே கீழே விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். கீழே விழுந்தபோதும் அவரை ஆம்புலன்சில் ஏற்ற யாரும் உதவவில்லை. பிறகு நானே ஆம்புலன்சில் ஏற்றினேன். இந்த வைரஸ் ஆபத்தானது. இது தங்களுக்கும் தொற்றும் என அஞ்சுகிறார்கள்.
மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் மும்பையில் கூட போதுமான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் இல்லை. ''ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ''ஒருமுறை நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்றால் அடுத்த நபரை அழைத்துவர செல்லும் முன்பு சுத்தம் செய்யவேண்டும். அதற்கு நேரம் ஆகும். எனவே இதற்கு அரசாங்கம் ஒரு தீர்வு காணுவது அவசியம்'' என்கிறார் ஓட்டுநர் நிதின்.
மற்றொரு அனுபவத்தையும் நிதின் நம்மிடம் பகிர்கிறார். ''ஒரு முறை தாராவியில் முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவமனை அழைத்து வர சென்றிந்தேன், அந்த முதியவரால் நடக்க முடியவில்லை. எனவே அவரை தூக்கி ஆம்புலன்சில் ஏற்ற அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டேன். ஒரு இளைஞர் உதவ முன்வந்தார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் அந்த இளைஞரை அனுமதிக்க மறுத்தனர். எனவே நானே முயற்சி செய்து அவரை ஆம்புலன்சில் ஏற்றினேன்'' என்கிறார்.
'சடலத்தை குளிப்பாட்டியதால் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு'
ஒரு புறம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை திரும்ப பெற்று இறுதி சடலங்களை செய்ய மறுக்கும் உறவினர்கள், மற்றொரு புறம் மும்பையின் உல்ஹஸ் நகரில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து, சடங்குகளை எப்போதும் போல இயல்பாக மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அந்த சடங்கில் கலந்துக்கொண்ட 10 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்ன நடந்தது?

உல்ஹஸ் நகரில் உள்ள சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த பிறகே அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எனவே சடலத்தில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு விதிகளுக்கு கட்டுப்பட்டு இறுதி சடங்கு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய உல்ஹஸ் நகர் நகராட்சி ஆணையர் சுதாகர் தேஷ்முக், ''கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை தொடுபவருக்கு நிச்சயம் கொரோனா பாதிப்பு ஏற்படும். எனவே எச்சரிக்கை அவசியம். ஆனால் இந்த விவகாரத்தில் உறவினர்களின் அலட்சியமே தொற்று பரவ காரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த 10 பேருடனும் தொடர்பில் இருந்த உறவினர்களையும் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளோம்'' என்றார்.

''கொரோனா பாதித்து உயிரிழந்த சடலத்துடன் ஒருவர் தொடர்பில் இருந்தாலும் கொரோனா பாதிப்பு ஏற்படும். எனவேதான் உயிரிழப்பவர்களின் உடல்களை பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி முழுவதுமாக சுற்றிவைக்கிறோம். உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கும்போதும் பிளாஸ்டிக் உறைகளை திறக்கக்கூடாது என அறிவுறுத்தியே உடலை ஒப்படைக்கிறோம். எனவே உறவினர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அலட்சியமாக செயல்படக்கூடாது'' என்கிறார் நகராட்சி ஆணையர் சுதாகர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான அறிவுரைகள்.
1. சடலங்களை வீட்டிற்கு கொண்டு செல்ல கூடாது
2. மின்மயானத்திற்கே உறவினர்களை அழைக்க வேண்டும்
3. உடலை மூடியுள்ள பிளாஸ்டிக் உறைகளை அகற்றக்கூடாது.
4. உறவினர்கள் அனைவரும் தூரத்தில் இருந்தே உடலை காண வேண்டும்.
5. மத சடங்குகளையும் தூரத்தில் இருந்தபடியே மேற்கொள்ள வேண்டும்.
6. உடலை குளிப்பாட்டுதல், வாயில் தண்ணீர் ஊற்றுதல், முத்தமிடுதல், கட்டியணைத்தல் என அனைத்தும் தவிர்க்கப்படவேண்டும்.
7. உடலில் இருந்து குறைந்தது 1 மீட்டர் இடைவெளியாவது கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
கொரோனாவால் உயிரிழத்தவர்களிடம் இருந்து தொற்று பரவுமா ?
இது குறித்து பிபிசியிடம் பேசிய மருத்துவர் ஷைலேஷ் மொஹிதே, ''சடலங்களை பிளாஸ்டிக் உறைகளில் சுற்றிவைக்கிறோம். பிளாஸ்டிக் உறைகள் போர்த்தியவாறே உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கிறோம். அந்த உறைகள் அகற்றப்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவும். மேலும் உடல்களை நேரடியாக மின்மயானத்திற்கே கொண்டு செல்லும்படி கூறுகிறோம்.
மேலும் சடலங்களை புதைக்கும்போதும் ஆறு அடியில் இருந்து எட்டு அடி ஆழத்தில் தான் புதைக்கிறோம். உடல்கள் புதைக்கப்பட்ட பிறகு கொரோனா தொற்று பரவ வாய்ப்பில்லை என்கிறார் மருத்துவர் ஷைலேஷ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












