விழுப்புரம் சிறுமி எரித்து கொலை: முன்விரோதம் காரணமா?

பட மூலாதாரம், NIKITA DESHPANDE
விழுப்புரம் அருகே பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாக வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி இருவர் எரித்த சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக பிரமுகர்கள் இருவரையும் விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர். இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று உயிரிழந்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்த்தவர் ஜெயபால். ஜெயபால் அதே பகுதியில் சிறிய கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் ஜெயபாலின் வீட்டிலிருந்து புகை மூட்டமாக வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, ஜெயபாலின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் உடல் முழுவதும் எரிந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே, மருத்துவமனையில் குற்றவியல் நீதிபதியிடம் தன்னை கட்டிப்போட்டு முருகன் மற்றும் கலியபெருமாள் என்ற இருவரும் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதில், சிறுமி குறிப்பிட்ட முருகன் என்பவர் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் மற்றும் கலியபெருமாள் என்பவர் அதிமுக கிளை செயலாளர் ஆவர்.
அதன் பிறகு, சிறுமியின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் திருவெண்ணெய் நல்லூர் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையடுத்து, நேற்று முதல் மருத்துவர்கள் சிறுமிக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இச்சூழலில், இன்று காலை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் குந்தவிதேவி உறுதிபடுத்தியுள்ளார்.
முன்னதாக, சிறுமி உடல் எரிந்த நிலையில் பேசும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில், "முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் என்னை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டனர்," என்று கூறியவாறு அழுகிறார்.
இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்திக் குழுமம் சிறுமியின் தந்தை ஜெயபால் தொடர்பு கொண்டு கேட்டபோது, "முன் விரோதம் காரணமாக எனது மகளை இவ்வாறு செய்துவிட்டனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு முருகன், கலியபெருமாள் உட்பட மேலும் 6 நபர்கள் எனது தம்பியின் கையை வெட்டியுள்ளனர். அந்த வழக்கிற்கு நீதி வழங்கக்கோரி இன்றுவரை போராடிக் கொண்டிருக்கிறேன்.
இதனிடையே, சனிக்கிழமை இரவு சிலர் எனது கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த எனது மகனைத் தாக்கியுள்ளனர். இது தொடர்பாகப் புகார் கொடுக்க நேற்று காலை நானும் எனது பெரிய மகனும் திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றிருந்தோம்," என்றார்.

பட மூலாதாரம், Getty Images
"இந்நிலையில், எனது மகள் கடையில் தனியாக வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது முருகன் மற்றும் கலியபெருமாள் என்ற இருவரும் எனது கடையினுள் அத்துமீறி நுழைந்துள்ளனர். பிறகு எனது மகளின் வாயில் துணியைக் கொண்டு அடைத்துவிட்டு, கை மற்றும் கால்களைக் கட்டிப்போட்டுள்ளனர். அதையடுத்து எனது மகளைத் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளனர். அதையடுத்து பெட்ரோல் ஊற்றி எனது மகளை எரித்துள்ளனர். பிறகு எனது மகள் வெளியே வராதவாறு கதவினை வெளி தாழ்ப்பாள் போட்டுச் சென்றுள்ளனர்," எனக் கூறினார்.
தொடர்ந்து, "என் வீடு எரிவதைக் கண்ட அப்பகுதியினர் கதவைத் திறந்து பார்க்கும் போது, என் மகள் எரிந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே வர முயற்சித்துள்ளார். ஆனால், கதவு வெளிப் புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், எனது மகள் வெளியே வர முயன்றும், வர முடியாமல் வாசல் அருகே இருந்துள்ளார். மருத்துவர்களும் எனது மகளைக் காப்பாற்ற முடியாதென்று கூறிவிட்டனர். முன்பே, எனது தம்பியை வெட்டிய இவர்களுக்குத் தக்க தண்டனை கிடைத்திருந்தால், இந்த நிலை எனது மகளுக்கு ஏற்பட்டிருக்காது. தற்போது நாங்கள் அனைவரும் பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம்," எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார் ஜெயபால்.
இது குறித்து பிபிசி தமிழுடன் பேசிய விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், "நடைபெற்ற சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று பார்த்தேன், இதில் நிறையச் சந்தேகங்கள் எழுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி வாய்திறந்து மரண வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆகவே, சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரின் கணவர் முருகன் மற்றும் அதிமுக கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரையும் கைது செய்துள்ளோம். குறிப்பாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோருக்கும், குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கும் முன்விரோதம் இருக்கிறது. இதில் வேறு யாராவது சம்பந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்," எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அதிமுக தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் கண்டனம்
"குற்றவாளிகள் மீது திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது." என தமிழக முதல்வர் எடப்பாடி பழினிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இக்கொடூரச் செயலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை சட்டப்படி எடுக்கப்படும்,"
"உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்." என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின் கண்டனம்
இந்த சம்பவம் தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், "சிறுமி மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலிய பெருமாள், முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்," என தெரிவித்துள்ளார்.
மேலும், "குற்றவாளிகளுக்கு சட்டரீதியாக வழங்கப்படும் தண்டனையே இனி இது போன்ற சிறுமிகளையும், பெண்களையும் காப்பாற்றும்." எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அறிக்கை சமர்ப்பிக்கத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு
சிறுமியை தீயிட்டுக் கொளுத்திய அதிமுக நிர்வாகிகள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு வழங்கியுள்ளது.
அதில், இந்த கொடூரமான குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை விசாரணை செய்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிறார் நீதிச் சட்டம் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், குற்றச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த சரியான ஆவணங்கள் அனைத்தையும் அறிக்கையாக 7 நாட்களுக்குள் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
பிற செய்திகள்:
- இலங்கை வரலாற்றில் மிக நீண்டகாலம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு எது? - சான்றுகளுடன் ஒரு தொகுப்பு
- முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி
- கொரோனா வைரஸ் தமிழ் நாடு: 7204 பேர் பாதிப்பு, இந்திய அளவில் மூன்றாமிடம்
- தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு: இயங்க அனுமதியளிக்கப்பட்ட 34 கடைகளின் பட்டியல் - விரிவான தகவல்
- சித்தர் திருத்தணிகாச்சலம் யார்? அவரது பின்னணி என்ன?












