"கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது" : பாஜக மத்திய அமைச்சர்

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

"கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது": மத்திய அமைச்சர்

கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், "டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கையை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலானவர்கள் கண்டித்துள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் பரவலுக்காக ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது" என்றார்

மேலும், புனித ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம்கள் ஊரடங்கு விதிமுறை களை கடைபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ரம்ஜான் மாதத்தில் மசூதிகளில் இப்தார் விருந்து கள், சிறப்பு தொழுகைகள் நடத்துவதில்லை என்று நாடு முழுவதும் உள்ள இமாம்கள் உலமாக்கள், முஸ்லிம் அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

ஊரடங்கு விதிகளின்படி சமூக இடைவெளியைப் பின்பற்றி வீட்டிலேயே இவற்றை நடத்த முஸ்லிம்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். மாநில வக்பு வாரியங்களின் நிர்வாகிகள், சமூக, மதத் தலைவர்கள் சமூக இடை வெளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுப்பு: சென்னை அண்ணாசாலை மூடப்பட்டது

ஊரடங்கை மீறி வாகனங்கள் அணிவகுத்ததால் சென்னை அண்ணா சாலையை போக்குவரத்து போலீசார் நேற்று மதியம் மூடினர்.கொரோனா பரவலை தடுப்பதற்கான ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.

இதனை மதித்து ஒரு சிலர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். பலர் ஊரடங்கை உதாசீனப்படுத்தி வருகிறார்கள்.ஊரடங்கை மதித்து வீடு அடங்காமல் ஊர் சுற்றுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

எனவே ஊரடங்கை மதிக்காமல் தேவையின்றி வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் நேற்று வரையில் மட்டும் 2 லட்சத்து 39 ஆயிரத்து 770 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். வாகன ஓட்டிகள் மீது கைது நடவடிக்கை, வழக்குப்பதிவு, அபராதம் விதிக்கப்படுகிறது.

எனினும் வாகனங்கள் நடமாட்டம் குறைந்தபாடு இல்லை.கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் சென்னை மாநகரில் வாகனங்கள் பரபரப்புடன் இயங்கி வருகின்றன. உங்கள் வீடு தேடி காய்கறிகள் வரும்.

உங்கள் வீட்டின் அருகே உள்ள மளிகை கடையில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள் என்று போலீசார் எவ்வளவோ எடுத்து சொன்னாலும், காதில் வாங்கி கொள்ளும் மனநிலையில் பலர் இல்லை.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி முக்கிய சாலைகளில் வாகனங்கள் அணிவகுப்பதை தடுக்கும் நடவடிக்கையாக முக்கிய சாலைகளை மதியம் 1 மணிக்கு மேல் மூடுவதற்கு போக்குவரத்து போலீசார் திட்டமிட்டனர். அதன்படி ஜெமினி மேம்பாலம் அண்ணாசாலை முதல் திருவல்லிக்கேணி வாலாஜா சாலை வரையிலான சாலை பகுதிகள் நேற்று மதியம் 1 மணி முதல் தடுப்புகள் வைத்து மூடப்பட்டன. பக்கவாட்டு சாலைகளும் அடைக்கப்பட்டன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

கொரோனா பாதிப்பு: இந்தியாவில் அதிவேக உயர்வு இல்லை

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற போதிலும் நேர்கோட்டு வரைபடம் அதிவேகமானது அல்ல. மேலும் தொற்று விகிதம் பெரும்பாலும் மாறாமல் இருப்பதால் வளைவு தட்டையாகவே இருக்கிறது என்று தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை சுற்றுசூழல் செயலாளர் சி.கே.மிஸ்ரா தலைமையிலான கொரோனா தொற்றுக்கான சோதனை மற்றும் சுகாதார உள் கட்டமைப்பு தொடர்பான அதிகாரமளிக்கப்பட்ட குழுவினரல் தெரிவிக்கப்பட்டதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: