You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சீனாவின் வுஹான் நகரிலிருந்து காணாமல் போன பத்திரிகையாளர் - புதிய காணொளி வெளியீடு
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து செய்தி சேகரித்து வெளியிட்ட பிறகு காணாமல் போன செய்தியாளர் ஒருவர், சுமார் இரண்டு மாதங்களுக்கு பின்னர் மீண்டும் காணொளி வாயிலாக தனது இருப்பை உறுதி செய்துள்ளார்.
கடைசியாக கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி, லி ஸிஹுவா வெளியிட்ட காணொளியில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படுவது பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தற்போது புதிதாக யூடியூபில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தான் இடைப்பட்ட காலத்தில் வுஹான் நகரத்திலும், தனது சொந்த ஊரிலும் என இருமுறை “சுய தனிமைப்படுத்தலில்” இருந்ததாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றதால் தான் ‘சுய தனிமைப்படுத்தலை’ கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறுகிறார்.
யார் இந்த லி ஸிஹுவா?
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் நகரத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட சென் கியூஷி என்ற செய்தியாளர் மாயமான பிறகு, வுஹான் நகரத்திற்கு சென்ற லி ஸிஹுவாவும் பிறகு மாயமானார்.
“நான் வுஹான் நகரத்திற்கு செல்வதற்கு முன்பு, சீனாவின் பிரதான ஊடகம் ஒன்றில் பணிபுரியும் என் நண்பர் ஒருவர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் இழப்புகள் குறித்த செய்திகளை திரட்டும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்றார்” என்று லி கூறுகிறார்.
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
“அதே சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்கள் உள்ளிட்ட நேர்மறையான செய்திகளை மட்டுமே உள்ளூர் ஊடகங்கள் வெளியிட வேண்டும் என்று எனது நண்பர்கள் தெரிவித்தனர்.”
இதைத்தொடர்ந்து வுஹான் நகரத்திற்கு சென்ற லி, சீன அரசு உண்மையான நோய்த்தொற்று எண்ணிக்கையை மறைப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்தும், பரபரப்பாக இயங்கி வரும் தகன மேடைகள் குறித்தும் வெளியிட்ட பல்வேறு செய்தி காணொளிகள் யூடியூப் மற்றும் ட்விட்டரில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டன.
பிப்ரவரி 26ஆம் தேதி நடந்தது என்ன?
சீன அரசின் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்த லி ஸிஹுவா, கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி வுஹான் நகரத்தில் காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது அவரை மற்றொரு காரில் இருந்தவர்கள் நிற்க சொன்னார்கள்.
ஆனால், தான் “குழப்பத்துடனும்”, “அச்சத்துடன்” இருப்பதாக கூறும் லி, அங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தனது இல்லத்திற்கு காரை வேகமாக ஓட்டிவந்துவிட்டார். இதுகுறித்த காணொளியையும் அவர் யூடியூபில் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தனது வீட்டிற்குள் சென்ற லி, தனது சமூக ஊடக பக்கத்தில் நேரலை செய்ய தொடங்கியவுடன் அங்கே வந்த சீன பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வீட்டின் கதவை தட்டினர். ஆனால், வீட்டின் விளக்குகளை அணைத்த அவர் கதவை திறக்கவில்லை.
சுமார் மூன்று மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் அங்கு வந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கதவை தட்டினர். இதைத்தொடர்ந்து லி கதவை திறந்ததும் அவரை கைது செய்தனர். காவல்துறை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு முன்னர் அவரது இரத்தம் மாதிரி மற்றும் கைரேகை பதிவுகள் பெறப்பட்டன.
“பொது ஒழுங்கை சீர்குலைப்பதாக” எழுந்த சந்தேகத்தில் அவர் கைது செய்யப்பட்டதாக லியிடம் கூறப்பட்டது. ஆனால், எவ்வித அபராதமும் விதிக்கப்படாது என்று தன்னிடம் காவல்துறையினர் கூறியதாக லி விளக்குகிறார்.
இதைத்தொடர்ந்து, கொரோனா வைரஸ் பாதித்த இடங்களுக்கு சென்றதால் தான் தனிமைப்படுத்தப்பட்டதாக லி கூறுகிறார்.
வுஹான் நகரத்தில் இருந்த அரசு முகாமில் இரண்டு வாரத்திற்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்த லி, அதன் பிறகு தனது சொந்த ஊருக்கு சென்ற பிறகு மீண்டும் சுய தனிமைப்படுத்தலை கடைபிடித்ததாக கூறுகிறார்.
"என்னைக் கவனித்து, என்னைப் பற்றி அக்கறை காட்டிய அனைவருக்கும் நன்றி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மீண்டு வர முடியுமென நான் நம்புகிறேன். சீனாவை கடவுள் காப்பாற்றுவார். நான் தற்போது என் குடும்பத்தினருடன் இருக்கிறேன்” என்று லி தான் வெளியிட்டுள்ள புதிய காணொளியில் கூறுகிறார்.
இருப்பினும், லி மாயமாவதற்கு முன்பு வுஹான் நகரத்தில் காணாமல் போன மற்றொரு செய்தியாளரான சென் கியூஷி குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. அவர் காணாமல் போய் 75 நாட்களுக்கு மேலாகிறது.
இவர்கள் இருவருக்கும் முன்னர் பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் வுஹான் நகரத்திலிருந்து மாயமான மற்றொரு செய்தியாளரான ஃபாங் பின் குறித்தும் இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
பிற செய்திகள்:
- பத்திரிகையாளர் அர்னாப் தாக்கப்பட்டாரா? சோனியாவை சீண்டியதற்காக குவியும் வழக்குகள்
- "அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை" வைரலாகும் கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்
- இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது
- உலகளவில் இறைச்சி சந்தைகளுக்கு புதிய வழிமுறைகள் - வுஹான் பாதிப்பு எதிரொலி?