You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்னாப் கோஸ்வாமி மீது தாக்குதல்: என்ன நடந்தது? சோனியா காந்தியை சீண்டியதற்காக குவியும் வழக்குகள்
இந்தியாவின் பிரபல பத்திரிகையாளராக அறியப்படும் அர்னாப் கோஸ்வாமி, நேற்று நள்ளிரவு இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக மும்பை போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவர் வெளியிட்டிருந்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த காணொளியில் இரண்டு மர்ம நபர்கள் தன்னைத் தாக்க எப்படி முற்பட்டனர் என்பது குறித்து விளக்கி இருந்தார். மேலும், தன்னைத் தாக்கிய இருவரும் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் என்றும், தனக்கு பாடம் கற்பிக்க வேண்டி காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட தலைவர்களால் அந்த இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும் காங்கிரஸ் கட்சி மீது அர்னாப் குற்றஞ்சாட்டியிருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை குறிப்பிட்டு பேசிய அர்னாப், தான் கேட்ட கேள்விகள் குறித்து பதிலளிக்க தைரியமில்லாதவர் என்று அந்த காணொளியில் கடுமையாக சாடி இருந்தார்.
தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு முழு காரணம் சோனியா காந்தி மற்றும் வாத்ரா குடும்பமும்தான் என்றும், தன்னுடைய கேள்விகள் இன்னும் கடுமையாக இருக்கும் என்றும் அந்த காணொளியில் சோனியா காந்திக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் அர்னாப்.
என்னதான் நடந்தது?
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் இந்து துறவிகள், கிராம மக்களால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ரிபப்ளிக் தொலைகாட்சியில் விவாவதம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்த கும்பல் கொலையை கண்டித்து ஏன் சோனியா காந்தி இன்னும் கருத்து தெரிவிக்காமல் மௌனம் காக்கிறார் என்று கேள்வியெழுப்பினார் அர்னாப்.
தொடர்ந்து, சோனியா காந்தி மீது பல அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்திய அவர், இந்து துறவிகள் கொல்லப்பட்டதை சோனியா விரும்புகிறார் என்கிற ரீதியில் தொலைக்காட்சி நேரலை விவாதத்தில் பேசியிருந்தார்.
அர்னாப்பின் இந்த பேச்சு கடும் கண்டனங்களுக்கு உண்டானது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும், இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களும் மகாராஷ்டிர, மத்தியப் பிரதேசம், உத்தராகண்ட், தெலங்கான என பல்வேறு மாநிலங்களில் அர்னாப் மீது வழக்குத் தொடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில்தான், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அர்னாப் கோஸ்வாமி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு பாஜக தலைவர்கள் அர்னாபுக்கு ஆதரவாகவும், தாக்குதலை கண்டித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சமூல ஊடகமான ட்விட்டரில் இந்தியளவில் டிரெண்டிங் பட்டியலில் அர்னாப் இடம்பிடித்துள்ளார். #ArnabAttacked #arrestarnabgoswami #IsupportArnabGoswami போன்ற ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: