கொரோனா வைரஸ்: ஊரடங்கு சமயத்தில் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்

- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரசவ வலியில் நடந்து வந்து கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, இளம் காவலர் சையது அபுதாஹீர் வாகன ஏற்பாடு செய்து உதவியதோடு ரத்ததானமும் செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.
“அந்த தருணத்தை நினைத்தாலே அழுகை வருகிறது. தக்க சமயத்தில் உதவிய காவலருக்கு எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை,” என கண்கலங்குகிறார் சுலோச்சனா.
“எனது கணவர் கட்டட வேலை செய்பவர். ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஊரடங்கு அமலில் உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், 108 அவசர வாகனத்தை அழைத்து, ரெட்டியாபட்டியிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நானும், எனது கணவர் மற்றும் அக்கா என மூவரும் பிரசவத்திற்காக வந்தோம். பரிசோதனை செய்த மருத்துவர், ‘எனது உடலில் ரத்த அளவு குறைவாக உள்ளது. எனவே, ரத்தம் ஏற்பாடு செய்துவிட்டு நான்கு நாட்களுக்கு பிறகு வாருங்கள்’ என கூறினார்.“
“கொரோனா பயத்தால் யாரும் ரத்த தானம் செய்ய முன்வரவில்லை. என்ன செய்வது என எங்களுக்கு புரியவில்லை. மீண்டும் வீட்டிற்கே சென்றுவிடலாம், என்ன நடந்தாலும் அங்கேயே நடக்கட்டும் என நினைத்துக்கொண்டு அழுது கொண்டே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தேன். மீண்டும் ஊருக்கு செல்லவும் வாகனங்கள் இல்லை. காமராஜர் சிலை அருகே நடந்து வந்து கொண்டிருந்தபோது அங்கு பணியில் இருந்த அந்த காவலர் எங்கள் மூவரையும் ஒலிபெருக்கியில் அழைத்தார். அதற்கு பிறகு நடந்தவற்றை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது,” என்கிறார் சுலோச்சனா.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை காவல் நிலையத்தில், இரண்டாம் நிலைக்காவலராக பணிபுரிந்து வருபவர் சையது அபுதாஹீர். பி.காம் படித்த இவர், 2017ஆம் ஆண்டு முதல் காவல் பணியில் இருப்பவர்.
“அன்று எனது 23 வது பிறந்தநாள். பிறந்தநாள் கொண்டாடும் பழக்கமில்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆனால், இந்த வருட பிறந்தநாளை எனது வாழ்நாளில் மறக்கவே முடியாது,” என்கிறார் காவலர் சையது அபுதாஹீர்.
“மணப்பாறை காமராஜர் சிலை அருகே நானும், சக காவல் பணியாளர்களும் ஊரடங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தோம். பிற்பகல் ஒரு மணியளவில் வெயில் சுட்டெரித்து கொண்டிருந்த நேரத்தில், சாலையில் ஒரு நிறைமாத கர்ப்பிணியும், அவரோடு ஓர்ஆணும், ஒரு பெண்ணும் நடந்து வந்து கொண்டிருந்தனர். ஊரடங்கு நேரத்தில் கர்ப்பிணியை ஏன் இப்படி வெயிலில் நடக்க வைக்கிறீர்கள் என அவர்களிடம் கேட்டேன். ஊருக்கு திரும்பிச் செல்ல வாகனம் எதுவும் கிடைக்கவில்லை என்றனர். உடனடியாக அவர்களின் ஊரிலிருந்தே ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து, வழியில் காவலர்கள் நிறுத்தாமல் இருக்க ஏற்பாடு செய்தேன். இருந்தும் அவர்கள் மூவரும் கவலையாகவே இருந்தனர். மேலும், விசாரித்ததில், பிரசவத்திற்காக ரத்தம் தேவைப்படுகிறது என்ற தகவலை என்னிடம் கூறினர்,” என்கிறார் காவலர் சையது அபுதாஹீர்.

- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா வைரஸ் குணமடைந்த பின்னும் மீண்டும் தாக்குமா?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
“பிரசவ சிகிச்சைகளை மேற்கொள்ள ஓ-பாசிட்டிவ் வகை ரத்தம் தேவைப்படுகிறது என்றனர். அதிர்ஷ்டவசமாக எனக்கும் அதே ரத்தம்தான். வாகனத்தில் அவர்கள் மூவரையும் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, நானும் அங்கு சென்றேன். பிரசவ சிகிச்சைக்கு தேவையான ரத்தத்தை கொடுத்தேன். இரவு, 8.30 மணிக்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை சுலோச்சனாவின் அக்கா எனது கைகளில் கொடுத்து எனக்கு நன்றி தெரிவித்தார். மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம் அது. மகிழ்ச்சியோடு மருத்துவமனையிலிருந்து கிளம்பிவிட்டேன். அடுத்தநாள் இந்த சம்பம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகளிகளுக்கு தெரியவந்து எனக்கு பணத்தொகைகளை பரிசாக வழங்கி வாழ்த்தினர். அந்த பணத்தொகையையும் அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்துள்ளேன்,” என தெரிவிக்கிறார் அபுதாஹீர்.
தமிழக டி.ஜி.பி திரிபாதி, காவலர் சையது அபுதாஹீர் செய்த உதவியை பாராட்டி பத்தாயிரம் ரூபாய் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அத்தனை காவலர்கள் அங்கே இருக்கும்போது நீங்கள் மட்டும் ஏன் உதவினீர்கள் என கேட்டதற்கு, “அங்கிருந்த மற்ற காவலர்கள் மற்ற பணிகளில் இருந்தனர். நான்தான் அவர்களை அழைத்து விசாரித்தேன். அவர்களின் கஷ்டமான நிலைமை தெரியவந்ததும், உதவி செய்ய வேண்டும் என தோன்றியது. காரணம், பணரீதியான உதவிகளை செய்வதை விட, இதுபோன்று, உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கு சகமனிதர்களுக்கு உதவுவது நம் அனைவரின் கடமை என நினைப்பவன் நான். அதனால் தான், தாமதிக்காமல் வாகனம் ஏற்பாடு செய்ததோடு, ரத்தம் கொடுக்கவும் முன்வந்தேன். இன்று தாயும், குழந்தையும் மற்றும் அவரது குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றனர். மகிழ்ச்சியான நினைவுகளை இந்த ஆண்டு பிறந்தநாள் எனக்கு அளித்துள்ளது.” என புன்னகையுடன் தெரிவிக்கிறார் இளம் காவலர் சையது அபுதாஹீர்.
“எங்க ஊர், சையது சாரின் சொந்த ஊரான வளநாடின் அருகில்தான் உள்ளது. ஊரடங்கு முடிந்து ஊருக்கு திரும்பும்போது எங்கள் வீட்டுக்கு வருவதாக கூறியுள்ளார். குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவரிடமும் ஒருவார்த்தை கேட்கவேண்டும். அவர் செய்த உதவி அவ்வளவு பெரியது. அவரை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம்.” என நெகிழ்ச்சியடைகிறார் சுலோச்சனாவின் கணவர் ஏழுமலை.
பிற செய்திகள்:
- தமிழ்நாட்டில் மேலும் 76 பேருக்கு கொரோனா பாதிப்பு
- ‘ரேபிட் டெஸ்ட் கிட்களை இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம்’ - ICMR
- கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் அதிகரிக்க காற்று மாசும் காரணமா?
- விழுப்புரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருந்தவர் உயிரிழப்பு
- கிம் ஜாங்-உன் உடல்நிலை: 'அபாய கட்டம், மூளைச்சாவு' - உண்மையல்ல என்கிறது தென்கொரியா
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












