ஆனந்த் டெல்டும்டே சரணடைந்தார் - அவர் கைது ஏன் இவ்வளவு பரபரப்பானது?

பட மூலாதாரம், Ani
பீமா கொரேகான் வழக்கில் சமூக செயல்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே மும்பையில் இன்று, செவ்வாய்க்கிழமை, சரணடைந்ததைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அவரை கைது செய்துள்ளது.
ஏப்ரல் 18ஆம் தேதி வரை அவரை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
ஆனந்த் டெல்டும்டே கௌதம் நவ்லாகா ஆகியோர் சரணடைய உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு வார கால அவகாசம் இன்றுடன் முடிந்ததால், அம்பேத்கர் பிறந்த நாளான இன்று, அம்பேத்கரின் பேத்தியை திருமணம் செய்துள்ள அவர் சரணடைந்தார்.
நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை வழங்கியது. அவர்கள் சரணடைய இதற்கு மேலும் அவகாசம் நீட்டிக்கப்படாது என்று இந்த அமர்வு தெளிவுபடுத்தியது.
இந்த இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள கால அவகாசம் மற்ற வழக்குகளுக்குப் பொருந்தாது என்றும், அவற்றுக்கு இது ஒரு புதிய முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளப்படாது என்றும் நீதிமன்றம் கூறியது.
"நீதிமன்ற உத்தரவுக்குக் கட்டுப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் சரணடைவார்கள் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர்கள் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை. இருவருக்கும் போதிய அவகாசம் தரப்பட்டுவிட்டது. அவர்களுடைய வயது மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, சரணடைவதற்கு அவர்களுக்கு மேலும் ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்படுகிறது. ஆனால் ஒரு வாரம் கழித்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்," என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இப்போது நிலவும் கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் பின்னணியில் அவர்கள் சரணடைவது உடல்நலத்தை பாதிக்கும் எனும் நோக்கில் வாதங்களை முன்வைக்க டெல்டும்டே, நவலாகா ஆகியோரின் வழக்கறிஞர்கள் முயற்சி செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால் அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆட்சேபம் தெரிவித்தார். இப்போதைய சூழ்நிலையில் அவர்கள் இருவருக்கும் சிறைச்சாலை தான் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், நாட்டில் முடக்கநிலை அமலில் உள்ளதால், அடுத்து என்ன நடக்கும், அவர்கள் இன்று கைது செய்யப்படுவார்களா என்பதை அனைவரும் கவனித்து வந்தனர். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல அமைப்புகள் முன்முயற்சி எடுத்து, டெல்டும்டே கைது செய்யப்படுவதை எதிர்த்து அறிக்கைகள் வெளியிட்டன.
ஆனந்த் டெல்டும்டே யார்?
தலித் இயக்கங்களுடன் தொடர்புடைய முன்னணி அறிவுஜீவி ஆனந்த் டெல்டும்டே. மகாராஷ்டிராவில் யவட்மால் மாவட்டம் ரஜூர் கிராமத்தில் பிறந்தவர். நாக்பூரில் உள்ள விஸ்வேரய்யா தேசிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் பொறியியல் படித்தவர்.
சில இடங்களில் பணியாற்றிய பிறகு அவர், ஆமதாபாத் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தார். அங்கு பல தலைப்புகளில் அவர் ஆராய்ச்சி மேற்கொண்டார். கார்ப்பரேட் துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடெட்டில் செயல் தலைவராகவும், பெட்ரோநெட் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் இருந்துள்ளார்.
காரக்பூர் ஐ.ஐ.டி.யில் கல்வி கற்பித்துள்ளார். இப்போது கோவா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் பணியாற்றுகிறார். இப்போது வரை அவர் 26 புத்தகங்கள் எழுதியுள்ளார். பல செய்தித்தாள்கள் மற்றும் சஞ்சிகைகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். பெருநிறுவனங்கள் தவிர, சமூக இயக்கங்களிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றுள்ளார்.
வகுப்புவாரி பகுப்பாய்வு மற்றும் பொதுக் கொள்கையில் நிபுணராகவும் அவர் கருதப்படுகிறார். ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டியின் (சி.பி.டி.ஆர்.) பொதுச் செயலாளராக அவர் இருக்கிறார். கல்விக்கான உரிமை குறித்த அகில இந்திய அமைப்பின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டு என்ன?
2017 டிசம்பர் 31 ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்ட எல்கார் பரிஷத் மற்றும் ஒரு நாள் கழித்து பீமா கொரேகானில் நடந்த வன்முறைகள் தொடர்பாக, 2018 ஆகஸ்ட் 28 ஆம் தேதி சில அறிவுஜீவிகளும், எழுத்தாளர்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சமயத்தில் ஆனந்த் டெல்டும்டே வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
தாம் இல்லாதபோது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியதாகவும், காவல் அதிகாரிகளிடம் வாரண்ட் எதுவும் இல்லை என்றும் ஆனந்த் டெல்டும்டே கூறியுள்ளார். அவர்கள் வீடியோ எடுத்துக் கொண்டு மீண்டும் வீட்டைப் பூட்டியுள்ளனர். அப்போது ஆனந்த் டெல்டும்டே மும்பையில் இருந்தார். இதுபற்றி தகவல் அறிந்து, அவருடைய மனைவி கோவா சென்று காவல் துறையில் புகார் அளித்தார்.

பட மூலாதாரம், MLA KAPIL PATIL OFFICE
2018 ஆகஸ்ட் 31 ஆம் தேதி, அப்போதைய காவல் துறை அதிகாரி பரம்வீர் சிங் புனேவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். ஆனந்த் டெல்டும்டேவும், கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் பீமா-கொரேகான் வழக்கில் தொடர்புடையவர்கள் என்று காவல் துறையினர் கூறியதற்கு ஆதரவான ஒரு கடிதத்தை அப்போது அவர் காட்டினார். ஒரு `தோழரால்' அந்தக் கடிதம் எழுதப்பட்டது என்று காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
``ஏப்ரல் 2018ல் பாரிஸில் ஒரு மாநாடு நடத்தப்பட்டுள்ளது. அங்கு ஆனந்த் டெல்டும்டேவிடம் நேர்காணல் செய்யப்பட்டது. அந்த மாநாட்டுக்கான செலவுகளை மாவோயிஸ்ட்கள் செய்திருந்தனர். அவருடைய நேர்காணலுக்கும் அவர்கள் தான் ஏற்பாடு செய்திருந்தனர்'' என்று காவல் துறை கூறியது.
இந்தக் குற்றச்சாட்டுகளை, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் வன்மையாக மறுத்துள்ளதாக ஆனந்த் டெல்டும்டே கூறியுள்ளார்.
இதற்கிடையில், தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்டே மனு தாக்கல் செய்தார். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்த பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு காவல் துறையை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. காவல் துறையினரும் சமர்ப்பித்தனர். தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் எதிராக தனது வழக்கறிஞர்கள் வாதம் செய்து, தனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவதற்கு தீவிரமான புகார்கள் எதுவும் இல்லை என நிரூபித்தனர் என்று டெல்டும்டே தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை ஐ.ஐ.டி.யில் பெரியார் கல்வி மையம் தொடங்கியதில் `ஆனந்த்' என்பவர் தான் காரணமாக இருந்தார் என்று இந்த வழக்கில் காவல் துறையினரின் ஆவணங்களில் உள்ளது..
``ஆனால் அந்த சமயத்தில் நான் காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக இருந்தேன். எனவே, இது சாத்தியமற்றது'' என்றார் டெல்டும்டே.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
அனுராதா காந்தி நினைவுக் கமிட்டி கூட்டத்தில் டெல்டும்டே சில யோசனைகளைத் தந்தார் என்று காவல் துறை ஆவணங்கள் கூருகின்றன. ஆனால் பல ஆண்டுகளாக அந்தக் கமிட்டியின் கூட்டங்களில் தாம் கலந்து கொள்ளவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இன்னொரு கடிதத்தில், கட்சிரோலி உண்மையறியும் இயக்கம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததில் `ஆனந்த்' என்பவர் தான் பொறுப்பு என கூறப்பட்டுள்ளது. ``நான், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்புக் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறேன். மனித உரிமைகள் மீறல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நிகழ்வுகளில் உண்மை அறிதல் விசாரணையை இந்த அமைப்பு நடத்துகிறது என்றாலும், அதுபோன்ற ஒரு குறிப்பிட்ட கமிட்டியை நாங்கள் உருவாக்கவே இல்லை'' என்கிறார் அவர்.
`மிலிந்த்' பிரதிநிதியாக இருந்த `சுரேந்திரா' என்பவரிடம் இருந்து ஆனந்த் டெல்டும்டே ரூ.90,000 பெற்றார் என குறிப்பிடும், சேதப்படுத்தப்பட்ட ஒலிப்பதிவு நாடா ஒன்று இருக்கிறது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்கிறார் டெல்டும்டே.
பீமா-கொரேகான் வழக்கு என்றால் என்ன?
புனே அருகே பீமா-கொரேகானில் 2018 ஜனவரி 1 ஆம் தேதி வன்முறை நிகழ்ந்தது. அன்றையதினம் லட்சக்கணக்கான தலித்துகள் அங்கு கூடினர். அந்த வன்முறை நாடு முழுக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
அந்த வன்முறைக்கு முந்தைய நாள், 2017 டிசம்பர் 31 ஆம் தேதி, புனேவில் எல்கார் பரிஷத் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் ஆற்றிய உரைகள் காரணமாகத்தான், மறுநாள் நடந்த வன்முறை தூண்டப்பட்டது என்று கூறி ஒரு புகார் பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் புனே காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

பட மூலாதாரம், BBC/MAYURESH KONNUR
எல்கார் பரிஷத் நடத்தியதில் மாவோயிஸ்ட் பின்னணி உள்ளது என்ற சந்தேகத்தில், இந்த செயற்பாட்டாளர்களுக்கு, அந்த மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பு இருக்கும் என்று கருதி, நாடு முழுக்க இடதுசாரி ஆதரவு செயற்பாட்டாளர்கள் பலரை புனே காவல் துறை கைது செய்தது.
அதன் பிறகு, குற்றச்சாட்டுக்கு ஆளான செயற்பாட்டாளர்கள் சட்டப் போராட்டத்தைத் தொடங்கினர்.
ஆனந்த் டெல்டும்டே மற்றும் கௌதம் நவலாகா ஆகியோர் உச்ச நீதிமன்றம் வரை சென்றனர். அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், மூன்று வார காலத்தில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்தக் காலக்கெடு திங்கள்கிழமை முடிந்தது.
எல்கார் பரிஷத் வழக்கில் விசாரணை
டெல்டும்டே மனுவை பிப்ரவரி மாதம் மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்ததும், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார். அவருடைய மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. தேசிய புலனாய்வு முகமையிடம் அவர் சரணடைய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தனது பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் கூறியது.
நீதிபதி அருண் மிஸ்ரா, நீதிபதி எம்.ஆர். ஷா ஆகியோரைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார்களைக் கொண்ட இந்த வழக்கை விசாரித்தது. அந்தச் சட்டத்தின் பிரிவு 43D (4)-ன் கீழ், இதுபோன்ற வழக்குகளில் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று அந்த அமர்வு கூறியது.

உச்ச நீதிமன்றத்தின் முடிவு வெளியான போது, கௌதம் நவலாகா ஓர் அறிக்கை வெளியிட்டார் - ``மூன்று வார காலத்துக்குள் நான் சரணடைய வேண்டும் என்ற நிலையில் என்னை நானே கேட்டுக்கொள்கிறேன் - குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவோம் என்று நான் நம்பிக்கை கொள்ளலாமா, மற்றும் ஒரு சதிச் செயலான விசாரணை, அதுபோன்ற விசாரணைகளின் நீண்ட பட்டியலில் மேலும் ஒன்றா? குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும், அவர்களைப் போன்ற பிறருக்கும் மீண்டும் சுதந்திரம் கிடைக்குமா?'' என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
``மக்கள் உரிமைகள் அடுத்தடுத்து நசுக்கப்படும், கற்பனை விவரிப்புகள் ஆதிக்கம் செலுத்தும், பொதுவாழ்வில் முட்டாள்தனங்களுக்கு ஆதரவான சூழ்நிலையில் நாம் வாழ்வதால் இந்தக் கேள்விகள் எழுந்துள்ளன.''
``சட்டவிரோத செயல்பாடுகள் சட்டம் - என்ற கொடூரமான சட்டம் - சித்தாந்தத்தின் அடிப்படையில் ஓர் அமைப்பைத் தடை செய்ய வகை செய்கிறது. அதன் விளைவாக, மிகவும் வெளிப்படையான, சட்டபூர்வ பங்கேற்பும், கலந்துரையாடலும் இருந்தாலும்கூட அரசின் பார்வையில் கிரிமினலாகத் தோன்றலாம். ஒரு செயல்பாடு பற்றி விசாரணைக்காக காத்திருக்காமலும், அதன் முடிவு தெரிவதற்கு முன்னதாக தண்டனையை விதிக்கும் வகையில் சட்டம் இருக்கிறது'' என்று அவர் கூறியுள்ளார்.
கௌதம் நவலாகாவும் ஆனந்த் டெல்டும்டேவும்
கௌதம் நவலாகா பிரபலமான மனித உரிமை ஆர்வலர், புத்தக ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர். ஆனந்த் டெல்டும்டே பிரபலமான தலித் எழுத்தாளர், சிந்தனையாளர். பீமா-கொரேகான் வழக்கு பற்றி புனே காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கி 2018 செப்டம்பரில் சில செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர். ஆனந்த் டெல்டும்டே கோவா மேலாண்மைக் கல்வி நிலையத்தில் கல்வி கற்பிக்கிறார்.
தனக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்டே மனு தாக்கல் செய்தார். ஆனால் அவ்வாறு செய்ய நீதிமன்றம் மறுத்ததால், முன்ஜாமீன் கோரி மனு செய்தார்.
அவருடைய மனுவை புனே நீதிமன்றம் நிராகரித்ததால், புனே காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசம் இன்னும் இருந்தது. எனவே உடனடியாக அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கௌதம் நவ்லாகா யார்?
கௌதம் நவ்லாகா ஒரு பத்திரிகையாளர், மனித உரிமை ஆர்வலர். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக புனேவில் விஷ்ரம்பாக் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images / facebook
கைதைத் தடுப்பதற்கு அவர் பல முயற்சிகள் மேற்கொண்டார். மும்பை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவர் மனுக்கள் தாக்கல் செய்தார். அவை நிராகரிக்கப்பட்டன. ஆனந்த் உடன் சேர்ந்து தாம் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் அவருக்கு இருந்தது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மாவோயிஸ்ட்களிடம் இருந்து சத்தீஸ்கர் ஆயுதப் படையினர் ஐந்து பேரை விடுவிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் நவ்லாகா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பயங்கரவாத செயல்பாடு, பயங்கவராத செயல்களுக்கு நிதி ஏற்பாடு செய்தது உள்ளிட்ட மற்ற புகார்களும் பதிவு செய்யப்பட்டன.
இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் நவ்லாகா மறுத்துள்ளார். இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வன்முறைகளுக்கு தாம் எதிரானவன் என்று அவர் கூறுகிறார்.
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பின் செயலாளராக கௌதம் நவ்லாகா பணியாற்றியுள்ளார். காஷ்மீரில் உள்ள மனித உரிமைகள் மற்றும் நீதி அமைப்புக்கான சர்வதேச டிரிபியூனல் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.
இருவருக்கும் பல அமைப்புகள் ஆதரவு
கல்விக்கான உரிமை குறித்த அகில இந்திய அமைப்பு ஆன்லைனில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் நந்திதா நாராயண்
"ஆனந்த் டெல்டும்டே முன்னணி செயற்பாட்டாளர். உயர் கல்வி பற்றிய அவருடைய எண்ணங்களை நான் மதிக்கிறேன். பல சஞ்சிகைகளுக்கு அவர் கட்டுரைகள் எழுதியுள்ளார். ஆட்சியின் கொள்கைகள் பற்றி கேள்வி கேட்கும்போது அவர் குறிவைக்கப் படுகிறார். அறிவுஜீவிகள் குறிவைக்கப் படுகிறார்கள். தலித் கல்வி நிலையங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை. இப்போதுள்ள சூழ்நிலைகள் மாறுபட்டவை. எனவே, நாம் நமது வேறுபாடுகளை மறந்து, நியாயமான ஒரு முடிவை எடுக்க வேண்டும்'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
The Wire இணைய தளத்தில் வெளியான செய்தியின்படி, ஆமதாபாத் ஐ.ஐ.எம். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்வந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆனந்த் டெல்டும்டே மீதான குற்றச்சாட்டுகள் வழக்கத்துக்கு மாறானவை, மனித உரிமைகளை மீறும் வகையிலானவை என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க பார் அசோசியேசன் வெளியிட்டுள்ள செய்தியில், பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மற்ற அறிவுஜீவிகள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ``இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் எதுவும் அரசிடம் இல்லை. மேலும், தேசத்தின் பாதுகாப்புக்கு அவர்கள் அச்சுறுத்தலானவர்கள் என்று காட்டுவதற்கும் ஆதாரங்கள் இல்லை. உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்களை எச்சரிக்கும் நோக்கில்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன.''

பட மூலாதாரம், Twitter
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியின்படி ஆனந்த் டெல்டும்டேவுக்கு ஆதரவாக பெங்களூர் ஐஐஎம் மாணவர்கள், ஆசிரியர்கள் 53 பேர் இணைந்து ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். ``கார்ப்பரேட் உலகில் டெல்டும்டேவின் சாதனைகளுக்காக மட்டுமின்றி, இந்திய அரசியல் சாசனம் என்பது உள்ளிட்ட பல வகை தலைப்புகளில் அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்காகவும் அவரைப் பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம். டெல்டும்டே போன்ற மக்கள் நல அறிவாளிகள், தீவிரமாக சர்ச்சைக்குரிய ஆதாரங்களில் அடிப்படையில் சிறையில் வைக்கப்பட்டு, மிரட்டலுக்கு ஆளாக்கப்படுவார்கள்'' என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஐ.டி. முன்னாள் மாணவர்கள் சிலரும் டெல்டும்டேவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ``கோவிட்-19 பரவும் இன்றைய சூழ்நிலையில், டெல்டும்டேவின் வயதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அவரை சிறைக்கு அனுப்புவது அபாயகரமானதாக இருக்கும்'' என்று அவர்களுடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பாரிப்-பகுஜன் மகாசங்கத்தின் தலைவர் பிரகாஷ் அம்பேத்கரும், டெல்டும்டேவுக்கு ஆதரவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ``உயர்ந்த அறிவுஜீவிகளில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே, நாட்டில் சிறந்த கல்வியாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அநீதிக்கு எதிராக வலுவாகக் குரல் கொடுக்கக் கூடியவர். அவரைக் கைது செய்யும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா: நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க ஆயுர்வேத ஆலோசனை கூறும் இந்திய அரசு
- இந்தியாவின் கொரோனா தடுப்பு செயலி அந்தரங்க உரிமைக்கு எதிரானதா?
- கொரோனா வைரஸ்: மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு - பிரதமர் மோதி
- பிராமணர்கள் தப்லிக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டனரா? - வட இந்திய குழப்பம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?












