You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவால் முடங்கிய கோவை: 'சம்பளம் கொடுக்கவே பணமில்லை'
- எழுதியவர், மு. ஹரிஹரன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்று உயிரிழப்புகளை ஏற்படுத்துவதோடு மிகப்பெரிய அளவில் பொருளாதார இழப்புகளையும் உருவாக்கி வருகிறது.
இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கை முன்னிட்டு தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் வருடம் முழுவதும் இயங்கிவந்த தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் பல ஆயிரம் தொழிலாளர்களும், சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பில் இருந்து குறுகிய காலத்திற்குள் மீண்டு வருவது மிகவும் கடினமாக இருக்கப்போவதாக அவர்கள் கருதுகின்றனர்.
"கோவை நகரம், விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் பம்புசெட் உற்பத்தியில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. பிப்ரவரி மாத இறுதிவரை பொருளாதார மந்தநிலை காரணமாக பம்புசெட் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. மார்ச் முதல் வாரத்தில்தான் மீண்டும் ஆர்டர்கள் வர ஆரம்பித்திருந்தன. முந்தைய ஆண்டில் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவுக்கு சரிசெய்து விடலாம் என்ற நம்பிக்கையில் உற்பத்தியை துவங்கிய நிலையில்தான், கொரோனா பாதிப்பும், அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவும் அமலுக்கு வந்தன. கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில்தான் பம்புசெட் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால், இந்த காலகட்டத்தில் தொழிற்சாலைகளை மூட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டிருப்பது, மிகவும் துரதிர்ஷ்டமானது. இதனால், பம்புசெட் உற்பத்தியை நம்பியுள்ள ஆயிரக்காணக்கான பணியாளர்களும், உற்பத்தி நிறுவன உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்," என்கிறார் தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் கிருஷ்ணகுமார்.
மேலும், "மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தேவைப்படும் அடிப்படை பொருட்களுக்கு ஊரடங்கிலிருந்து விதிவிலக்கு அளித்துள்ளது. அந்த வகையில் தண்ணீர் அனைவருக்கமான அடிப்படை தேவை என்பதால் பம்புசெட் நிறுவனங்களுக்கும் விதிவிலக்கு அளிக்கவேண்டும். கோடை காலங்களில் விவசாயம் மற்றும் வீட்டு உபயோகத்திற்கான தண்ணீர் தேவை கண்டிப்பாக அதிகரிக்கும். இப்போதும் கூட பல பஞ்சாயத்துகளிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்தும் பம்புசெட் தேவைப்படுவதாக ஆர்டர்கள் வருகின்றன. அவர்களுக்கு தேவையான பம்புசெட்டுகளும் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்களிடம் கொண்டு சேர்க்க முடியவில்லை. கர்நாடகாவில் உரிய அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்போடு பம்புசெட் விற்பனை நடைபெற்று வருகிறது, அதேபோல் தமிழகத்திலும் தண்ணீர் பம்புசெட்டுகளை அடிப்படை பொருட்களின் பட்டியலில் சேர்த்து, உற்பத்தி மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டும்," என கோரிக்கை வைக்கிறார் கிருஷ்ணகுமார்.
ஊரடங்கு உத்தரவு காலத்தில் தொழிற்சாலைகள் முடங்கி இருப்பதை கருத்தில் கொண்டு உரிய வங்கி கடன் மற்றும் வட்டிச் சலுகைகளை வழங்கவில்லை என்றால் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் முற்றிலுமாக முடங்கும் நிலை உருவாகிவிடும் என்கிறார் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ்.
"உற்பத்தியில் நேரடியாக பங்குகொள்ளாமல் பெருநிறுவனங்களில் இருந்து பெறப்படும் ஜாப் ஆர்டர்களை நம்பி முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் கோவையில் இயங்கி வருகின்றன. பொருளாதார வீழ்ச்சி, ஜி.எஸ்.டி அமலாக்கம் மற்றும் அதனால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடிகள் ஆகியவற்றால் ஏற்கனவே பாதிப்பில் இருந்த சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோருக்கு கொரோனா பாதிப்பால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. மேலும், குறுந்தொழில் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்."
"பணியாளர்களுக்கு வழங்குவதற்கான சம்பளம் குறுந்தொழில் நிறுவன உரிமையாளர்களிடமும் இல்லை என்பதுதான் உண்மை. ஏற்கனவே, தகுதி வாய்ந்த தொழிலாளர்களுக்கான பற்றாக்குறை இருந்து வருகிறது. தொழிலாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிட்டால், இயல்புநிலை திரும்பிய பின்னர் உற்பத்தி மேலும் பாதிக்ககூடும். இவற்றோடு, வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதத்தவணை கட்டத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த மாதத்தவணைத் தொகை எனது வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது. "
"வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, பிடித்த தவணைத் தொகையை திருப்பி செலுத்தக்கோரி இ-மெயில் அனுப்புமாறு கூறுகின்றனர்.இதுபோன்று வங்கிகளின் செயல்பாடு குறுந்தொழில் நிறுவனங்களுக்கான நடைமுறை சிக்கல்களை மேலும் அதிகரிக்கிறது. எனவே, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆட்டோமெடிக் டெபிட் முறையை வங்கிகள் கைவிட வேண்டும். உற்பத்தி முடங்கிக்கிடக்கும் காலத்திற்கும் சேர்த்து, வட்டியோடு மூன்று மாதத்திற்கு பிறகு தவணைத்தொகை கட்டவேண்டும் என்பது பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கும். எனவே, அடுத்த ஆறு மாத காலத்திற்கு கடன்களுக்கான மாதத் தவணையை ரத்து செய்ய வேண்டும்"
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
"மேலும், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களை பாதுகாக்க, நிறுவனத்தின் கடந்த இரண்டு வருட வரவு செலவுகளை ஆய்வு செய்து 25 முதல் 30 சதவிகிதம் வரையிலான வட்டியில்லா கடன்களை வழங்க வேண்டும். மேலும், அந்த கடனுக்கு ஓர் ஆண்டு வரை மாதத்தவணை செலுத்துவதில் விலக்கு அளிக்க வேண்டும். இவை மட்டுமே சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்கிட வழிவகுக்கும்" என்கிறார் ஜேம்ஸ்.
தற்போது சிறு மற்றும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்ப்பட்டு வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர மூன்று மாத காலம் வரை ஆகலாம் என்கிறார் கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி.
"உற்பத்தி, தொழில், பொருளாதாரம் என்பதை தாண்டி நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம் என்ற வகையில் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் ஒத்துழைக்க வேண்டியது அனைவரின் கடைமையாகும். எனவே, உற்பத்தியை நிறுத்தி, தொழிற்சாலைகளை அடைத்துள்ளோம். இதுவரை, இத்தனை நீண்ட காலத்திற்கு உற்பத்தி முடங்கியதில்லை. வேலையிழப்பால் தவித்து வரும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு தங்குவதற்கு இடவசதி ஏற்பாடு செய்துள்ளோம். மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அணைத்து தொழில் நிறுவனங்களும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது."
"இதிலிருந்து மீண்டு வர அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். குறிப்பாக, தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள காலகட்டத்தில் அவற்றிற்கு சில வகை மானியங்களை அளிப்பதன் மூலமாகவும். இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் தொகைக்களுக்கான விலக்கு அளிப்பதன் மூலம் தொழில் நிறுவனங்கள் தங்களின் தொழிளார்களுக்கு சம்பளம் வழங்கி உதவ முடியும். மூடப்பட்ட காலத்திற்கான ஜி.எஸ்.டி மற்றும் வருமானவரி உள்ளிட்ட வரிகளை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கூடுதல் கடன் உதவியாக அவர்களின் நடப்பு மூலதனத்தில் 25% வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இயல்பு நிலை திரும்பினாலும், மீண்டும் நிலையான உற்பத்தியை துவங்குவதற்கு மூன்று மாதகாலம் வரை ஆகலாம்." என்கிறார் ராமமூர்த்தி.
மேலும், சமீபத்தில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் கோவையைச் சேர்ந்த சிறு மற்றும் குறுந்தொழில் அமைப்பின் நிர்வாகிகளோடு உரையாற்றிய, இந்தியப்பிரதமரிடம் வங்கி மற்றும் நிதி செயல்பாடுகள், கடன் மற்றும் வரி செலுத்துவதில் உள்ள சிக்கல்கள், உற்பத்திப் பொருட்களை போக்குவரத்தில் அனுப்புவது, உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு ஆகியவை குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் ராமமூர்த்தி.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க முடிவா?
- தமிழகத்தில் கொரோனா: ஒரு மாதத்தில் நடந்த மாற்றங்கள் என்னென்ன?
- கொரோனா வைரஸ்: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை
- கொரோனாவால் சரிந்த அம்பானியின் சொத்து மதிப்பு - ரூ. 1.44 லட்சம் கோடி இழப்பு
- கொரோனா வைரஸ்: தினமும் 50 லட்சம் முகக்கவசங்கள் தயாரித்து அசத்தும் தமிழ் பெண்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: