கொரோனா வைரஸால் சரிந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "வீழ்ந்த அம்பானி சொத்து மதிப்பு"

கொரோனா வைரசால் பங்கு சந்தையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி வீழ்ச்சி அடைந்தது. அவர் உலக பணக்காரர்கள் வரிசையில் 8 இடங்கள் கீழே இறங்கினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை நிலவியது. அத்துடன், கொரோனா வைரஸ் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

இதனால் கடந்த 2 மாதங்களில் பங்குச்சந்தையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கூட வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதுதொடர்பான தகவல்களை திரட்டி, ஹருன் என்ற நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இந்தியாவின் முதல் பணக்காரரான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு கடந்த 2 மாதங்களில் 28 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதாவது, நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 280 கோடி வீதம் 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 400 கோடி குறைந்துள்ளது.

தற்போது, அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.3 லட்சத்து 64 ஆயிரத்து 800 கோடியாக உள்ளது. மேலும், உலக பணக்காரர்கள் வரிசையில், முகேஷ் அம்பானி 8 இடங்கள் கீழே இறங்கி, 17-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுபோல், இதர முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.45 ஆயிரத்து 600 கோடி குறைந்துள்ளது. இது, அவரது சொத்து மதிப்பில் 37 சதவீதம் ஆகும்.

எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் சிவநாடாரின் சொத்து மதிப்பு ரூ.38 ஆயிரம் கோடி (26 சதவீதம்) குறைந்துள்ளது. வங்கித் துறை ஜாம்பவான் உதய் கோடக் கின் சொத்து மதிப்பு ரூ.30 ஆயிரத்து 400 கோடி (28 சதவீதம்) குறைந்துள்ளது.

அதானி, சிவநாடார், உதய் கோடக் ஆகிய மூவரும் உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறி விட்டனர். முகேஷ் அம்பானிதான் அதில் நீடிக்கும் ஒரே இந்தியர் ஆவார்.

உலக அளவில் அதிகமாக நஷ்டம் அடைந்தவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆடை அலங்கார ஜாம்பவான் பெர்னார்டு அர்னால்ட் ஆவார். அவருக்கு ரூ.2 லட்சத்து 28 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக இழப்பு ஏற்பட்டது, முகேஷ் அம்பானிக்குத்தான்.

உலகின் முன்னணி 10 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பில்கேட்ஸ், 'ஃபேஸ்புக்' நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் ஆகியோரின் சொத்து மதிப்பிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமேசான் அதிபர் ஜெஃப் பெசோஸ், உலகின் முதல் பணக்காரராக தொடர்ந்து நீடிக்கிறார். ஆனால், அவரது சொத்து மதிப்பும் 9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதே சமயத்தில், சீன தொழிலதிபர்கள் பலன் அடைந்துள்ளனர். உலகின் முன்னணி 100 பணக்காரர்கள் பட்டியலில், சீனாவை சேர்ந்த 6 பேர் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.

தினமணி: 'கோ கொரோனா' வாசகம் பிரபலமாகிவிட்டது: அமைச்சர் பெருமிதம்

தான் உருவாக்கிய 'கோ கொரோனா' வாசகம் உலக அளவில் பிரபலமாகிவிட்டது என்று மத்திய சமுகநீதித்துறை இணையமைச்சர் ராம்தாஸ் அதாவலே பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

கொரோனாவை ஒழிப்பதில் இந்தியா்கள் ஒற்றுமையுடன் உள்ளனா் என்பதை வெளிக்காட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு வீடுகளில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோதி கேட்டுக் கொண்டாா். இந்த நிகழ்வின்போது 'கோ கொரோனா' என்ற வாசகம் ஒலித்தது.

கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் சீன துணைத் தூதா், புத்த மதத் துறவிகள் பங்கேற்ற பிராா்த்தனை நிகழ்ச்சியில் அதாவலே பங்கேற்றாா். அப்போது அவரது தலைமையில் 'கோ கொரோனா' என்று கோஷமிடப்பட்டது. அப்போது, சமூகவலைதளங்களில் இந்த காணொளி பரவியது. 'கோ கொரோனா' என்று கூறினால் கொரோனா நாட்டைவிட்டு போய்விடுமா என்ற விமா்சனம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி மக்களிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முழக்கமாக அது உருவெடுத்தது. அதன் பிறகு பல்வேறு இடங்களில் 'கோ கொரோனா' வாசகம் பயன்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இது தொடா்பாக ராம்தாஸ் அதாவலே தில்லியில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

இந்தியாவில் கரோனா பரவல் ஏற்படுவதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதம் 'கோ கொரோனா' முழக்கத்தை நான் எழுப்பினேன். அப்போது, இந்த கோஷம் பலரின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளானது. ஆனால், இப்போது அந்த கோஷம் உலக அளவில் பிரபலமாகிவிட்டது என்றாா்.

இந்து தமிழ் திசை: "மக்களை மரியாதை குறைவாக நடத்தக்கூடாது: டி.ஜி.பி. திரிபாதி

பொதுமக்கள், வியாபாரிகளை மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது என காவல் துறையினருக்கு டி.ஜி.பி திரிபாதி அறிவுறுத்தி உள்ளார் என்கிறது இந்து தமிழ் திசை.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட சுற்றறிக்கையையும் பிரசுரித்துள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையர்கள் மற்றும் மண்டல ஐ.ஜி க்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கைகளைக் கழுவுவது மற்றும் முகக்கவசம் அணிவதை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். வயதான மற்றும் நோயுற்றவர்களுக்குக் காவல் நிலையங்களில் கடினமான பணிகளை ஒதுக்கக்கூடாது.

காவல் துறையில் பணிபுரிவோரின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். போலீஸார், பொதுமக்களிடம் பேசும்போது குறைந்தபட்சம் 1 மீட்டர் இடைவெளியில் நின்று பேச வேண்டும்.

தற்போதைய சூழலில் பொதுமக்கள் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி இருப்பதால் அவர்களிடம் காவல் துறையினர் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். ஓட்டுநர்கள், கடைக்காரர்கள், பலசரக்கு கடை ஊழியர்கள், காய்கறி விற்பனையாளர்கள் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதால், அவர்கள் அனைவரையும் மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும், மரியாதைக்குறைவாக நடத்தக்கூடாது. மீண்டும், மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆபத்தான சூழ்நிலையில் பணிபுரிந்து வருவதால் காவல் துறை பொதுமக்களிடம் மிகுந்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது. ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்போது மாநிலத்தின் எங்கோ ஒரு மூலையில், ஒரு காவலரால் இழைக்கப்படும் ஒரு சிறிய தவறு, தெருக்களில் கடும் பணி புரிந்துவரும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

எனவே, நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில் எத்தகைய அதிகபட்ச தூண்டுதல்கள் வரும் போதிலும், உங்களின் கோப தாபங்களைத் தவிர்த்து, பொது இடங்களில் அமைதியாகவும், கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டும்.

கூட்டம் மிகுந்த பகுதிகளில் பொதுமக்களை வரன் முறைப்படுத்த, அதே பகுதியை சேர்ந்த சுறுசுறுப்பான, ஆரோக்கியமான, சமூக நோக்கம் கொண்ட இளைஞர்களை ஈடு படுத்திக் கொள்ளலாம்.

தமிழக காவல் துறையினர் பயனுள்ள, திறமைமிக்க படையினர் என்பதையும் தாண்டி, அதி உன்னதமான மனிதத்துவம் மிக்க படையினர் என்பதை நிரூபணம் செய்ய வேண்டும்.

இந்த அறிவுரைகளைத் தீவிரமாக கடைபிடிப்பதன்மூலமே, நெருக்கடியான இக்காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல இயலும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: