You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ்: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க முடிவா?
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4421-ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த சமீபத்திய தகவல்களை 10 முக்கியப் புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம்.
1. கடந்த 24 மணி நேரத்தில் 356 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்ட்டுள்ளதாக தெரிவித்த அவர், இதுவரை 326 பேர் குணமாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
2.இந்தியாவில் பல்வேறு மாநில அரசுகளும், நிபுணர்களும், மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய அரசு அதுகுறித்து பரிசீலனை செய்து வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.
3. கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்காக கிட்டத்தட்ட 250 ரயில் பெட்டிகளில், 40,000 தனி படுக்கைகளை இந்திய ரயில்வே தயார் செய்து வருவதாக லாவ் அகர்வால் மேலும் குறிப்பிட்டார்.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
4. மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன.
5. ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் டெல்லி மற்றும் மும்பையில் இருக்கும் மூன்று பெரிய மருத்துவமனைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனைகளில் சில நாட்களுக்கு பொது மக்கள் யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மருத்துவமனையில் உள்ள மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவர்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
6. 'கொரோனாவை குணப்படுத்தும் மருந்துகளின்' ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தால் 'கடுமையான பதிலடியை' எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
7. டிரம்ப்அவ்வாறு கூறிய சில மணிநேரங்களிலேயே கொரோனா பரவலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு மட்டும் கொரோனா தொற்றை குணப்படுத்தும் நோக்கில் சோதனைக்கு உள்ளாக்கப்படும் பாராசிட்டமால் மற்றும் ஹைட்ராக்சிக்ளோரோகுவின் மருந்துகளை இந்தியா விநியோகம் செய்யும் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.
8. கோவிட்-19 தொற்று காரணமாக உண்டாகியுள்ள நெருக்கடியால் 26 வகையான மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் மற்றும் மருந்துகள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிக்கு இந்தியா கடந்த மாதம் கட்டுப்பாடு விதித்தது. உள்நாட்டு தேவைகளை சமாளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
9. காப்புரிமை இல்லாத மருந்துகளின் ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டுள்ளது என்று இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
10. ஒடிசாவில் ஏப்ரல் 9ம் தேதி முதல் வீட்டை விட்டு வெளிவரும் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அம்மாநில அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்கள் வாய் மற்றும் மூக்கை மூடியவாறு வெளிவரும் மக்கள் மட்டுமே சாலையில் நடமாட அனுமதிக்கப்படுவார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: