கொரோனா வைரஸ்: வீட்டிலிருந்தே பணிபுரியும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் எல்லோரையும் வீட்டிலேயே முடக்கிப் போட்டுள்ளது. பாலியல் தொழிலாளர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

சொல்லப்போனால், கொரோனா வைரஸ் பரவுவதால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர்களும் அவர்களே.

இப்படியான சூழ்நிலையில் வாழ்வாதாரத்திற்காக அவர்களும் ஆன்லைன் மூலமாக தங்களது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி உள்ளனர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய பிரிட்டனைச் சேர்ந்த க்ளியோ, "நாடு முடக்கப்பட்டதால் எங்கள் வருமானம் பாதிக்கப்பட்டது. அதனால் ஆன்லைன் ப்ளாட்ஃபார்மை பயன்படுத்தத் தொடங்கினோம்," என்கிறார்.

"இணையத்தில் உடலைக் காட்டுவதால் மட்டும் பணத்தை ஈட்டிவிடமுடியாது. இது கடினமான பணி," என்கிறார் மற்றொரு பாலியல் தொழிலாளியான க்ரேஸி.

கடந்த இரண்டு மாதங்களில் இதுபோன்ற பாலியல் தளங்களில், அவற்றின் பயன்பாட்டாளர்கள் பணம் செலவிடுவது அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக டென்மார்க்கில் அதிகம் செலவிடுகிறார்கள். அதற்கு அடுத்த இடங்களில் இஸ்ரேலும், பெல்ஜியமும் உள்ளன.

பிரிட்டன் பிரதமருக்கு தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் அறிகுறி தீவிரமடைந்ததால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய நிலவரம்

தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது திங்களன்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

பட்டினியுடன் போராடும் ரோஹிஞ்சா அகதிகள்

பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மலேசியாவில் தஞ்சமடைந்துள்ள ரோஹிஞ்சா அகதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் அன்றாட வாழ்க்கையைக் கடத்துவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

பெண் புலிக்கு கொரோனா

நியூயார்க்கின் பிரோன்க்ஸ் வன விலங்கு பூங்காவில் 4 வயதான பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடியா என்ற பெண் புலியே கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் வன விலங்கு என்று கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: