கொரோனா வைரஸ்: தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று - தற்போதைய நிலவரம்

தமிழ்நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் , கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை , திங்களன்று, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் வெளியிட்டார். அதன்படி, மேலும் 50 பேருக்கு அந்நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 48 பேர் தில்லி பயணத்தின் மூலம் இத்தொற்றைப் பெற்றவர்கள் என்றும் 2 பேர் எப்படி இந்நோயைப் பெற்றார்கள் என ஆராயப்பட்டுவருவதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இவர்கள் இருவருமே சென்னையைச் சேர்ந்தவர்கள். இதில் ஒருவர் 57 வயதுப் பெண்மணி. அவர் மூச்சுத் திணறல் காரணமாக நேற்று இரவில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் இன்று காலையில் மரணமடைந்த நிலையில், அவருக்கும் கொரோனா நோய்த் தொற்று இருந்தது உறுதிசெய்யப்பட்டது.

இவருக்கு இந்நோய் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட்டுவருகிறது. அவர் சமீபத்தில் திருச்சிக்கு ரயிலில் சென்றது மட்டும் தெரியவந்துள்ளது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் 571 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கை 621ஆக உயர்ந்தது.

தற்போது தமிழ்நாட்டில் 91,851 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். 19,060 பேர் 28 நாள் கண்காணிப்பை முடித்துள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 5016 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

தில்லிக்குப் பயணம் செய்தவர்களில் 1,475 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 573 பேருக்கு அந்நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 855 பேருக்கு நோய் இல்லையெனத் தெரியவந்துள்ளது. 44 பேருக்கான முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இவர்களுடன் தொடர்புடைய இன்னும் 250 பேர், கண்காணிப்பில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளை அதிகப்படுத்துவதற்காக, 21 சோதனை எந்திரங்கள் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் அவற்றை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பொருத்தும் பணி நடப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

தற்போது தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர். இதையடுத்து, 11,59,284 வீடுகள் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளிக்கும்போது, இந்நோய் ஏற்பட்டவர்கள் யாரையும் ஒதுக்கக்கூடாது எனக் கூறினார் பீலா ராஜேஷ். "இந்நோய் ஏற்பட்ட யாரையும் ஒதுக்கக்கூடாது. யாரும் இதனை எதிர்பார்க்கவில்லை. யாரும் இந்நோய் வரவேண்டுமென்றும் விரும்பவில்லை. அவர்களிடம் அன்போடு நடந்துகொள்வோம்" என்றார் அவர்.

சீனாவில் வாங்கப்பட்டிருக்கும் ஒரு லட்சம் ரேபிட் டெஸ்ட் கிட்கள் எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்தெந்த எண்ணிக்கையில் அனுப்பப்படுவது, எப்படி பயிற்சியளிக்கப்படுவது என்பதெல்லாம் நாளை, நாளை மறுநாள் முடிவுசெய்யப்படுமென சுகாதாரத் துறை செயலர் தெரிவித்தார்.

மதுரையில் காவல்துறை அத்துமீறலால் முதியவர் பலியா?

மதுரை கருப்பாயூரணியில் காவல்துறை அத்துமீறலின் காரணமாக முதியவர் ஒருவர் பலியானதாக சொல்லப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதியவர் தாக்கப்படவில்லையென்கிறது காவல்துறை. ஆனால், அவரது மரணத்திற்கு காவலர்தான் காரணம் என்கிறார்கள் குடும்பத்தினர்.

மதுரை கருப்பாயூரணி பகுதியில் இந்தியன் வங்கி அருகில் பிராய்லர் கோழிக்கடை ஒன்று இயங்கிவருகிறது. இதனை ஷாஜகான் என்பவர் நடத்திவருகிறார். இந்த நிலையில், இன்று காலை எட்டேமுக்கால் மணியளவில் அந்தப் பகுதியில் ரோந்துவந்த காவலர் ஒருவர் ஷாஜகானைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பார்த்துக்கொண்டிருந்த அவரது மாமனார் அப்துல் ரஹீம் அதிர்ச்சியில் அந்த இடத்திலேயே மயங்கிவிழுந்தார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடல் திரும்பவும் வீட்டிற்குக் கொண்டுவரப்பட்டபோது, அத்துமீறிய காவலரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டுமென அப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர்.

என்ன நடந்தது என்பது குறித்து ஷாஜஹானிடம் கேட்டபோது, "இன்னைக்கு காலையில் எங்கள் கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்தேன். எங்கள் கடைக்கு அருகில் ஒரு அரிசிக் கடை இருக்கிறது. அங்கே அரிசி வாங்கிக்கொண்டிருந்தார் ஒருவர். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த காவலர் கணேசன் என்பவர் அவரை அடித்தார். பிறகு அங்கு நின்றுகொண்டிருந்த என்னை கெட்ட வார்த்தைகளால் பேசினார். எதற்காக இப்படி கெட்ட வார்த்தைகளில் பேசுகிறீர்கள். அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். பிறகு என்னையும் கம்பால் அடித்தார்" என்று கூறினார்.

இந்தச் சம்பவத்தை அருகிலிருந்தபடி அவரது மாமனார் அப்துல் ரஹீம் பார்த்துக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. "அவர் உடனே காவலரைப் பார்த்து எதற்காக என் மருமகனை அடிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போதும் அந்தக் காவலர் எங்களை ஏசியதோடு, என்னை மீண்டும் அடித்தார். இதைப் பார்த்தவுடன் மாமனார் மயங்கிவிழுந்துவிட்டார். அப்படியே இறந்துவிட்டார். என் மாமனார் இறந்ததற்கு அந்தக் காவலர்தான் காரணம்" என்கிறார் ஷாஜஹான்.

நேற்றும் இதேபோல வந்து தங்கள் கடைக்கருகில் வந்து காவலர்கள் தகராறு செய்ததாகவும் தேநீர் குடித்துக்கொண்டிருந்தவர்களைப் பார்த்து, 'டீக் கடையா நடத்துகிறீர்கள்' என்று கேட்டதாகவும் சொல்கிறார் ஷாஜஹான்.

இந்த வழக்கை விசாரித்துவரும் டிஎஸ்பி நல்லுவிடம் இது குறித்துக் கேட்டபோது, "காவலர் அப்துல் ரஹீமைத் தாக்கவில்லை. அவராக மயங்கிவிழுந்துதான் இறந்திருக்கிறார். அவர்கள் குடும்பத்தினரே அதனை எழுதித் தந்துள்ளனர். தன்னைத் தாக்கிய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஷாஜஹார் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரைப் பெற்றிருக்கிறோம்" என்கிறார் அவர்.

சேலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் உயிரிழப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று மதியம் வரை தமிழகத்தில் 571 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சென்னை, கோவை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் முன்னிலையில் உள்ளன.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் தனிமை படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவர் சேலத்தில் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் வசித்து வந்த 52 வயது நபர் ஒருவர், வெளிமாநிலங்களுக்கு சென்று ஆழ்துளைக் கிணறு துளையிடும் பணியை மேற்கொண்டு வந்தார்.

இவர் சமீபத்தில் ஐதராபாத் சென்று சேலம் திரும்பியுள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிமாநிலம் சென்று வந்ததால், வீட்டிலேயே தனிமைப்படுத்தி இருக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தினர் இவரை அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, கடந்த 8 நாட்களாக வீட்டில் தனியாக இருந்தவர் நேற்றிரவு திடீரென உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்து அவரது வீட்டிற்கு வந்த வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "வெளிமாநிலத்திற்கு சென்று வந்ததால், உயிரிழந்தவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருந்தோம். அவருக்கு கொரோனா பாதிப்பிற்கான அறிகுறிகள் எதுவுமில்லை. அதனால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால், ஏற்கனவே கல்லீரல் பாதிப்புகள் இருந்துள்ளது. அதனால்தான் இவர் உயிரிழந்துள்ளார்" எனத் தெரிவித்தனர்.

உயிரிழப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: