கொரோனா வைரஸ்: ''வீட்டுவேலை பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு நியாயமா?''

கோப்புப்படம்

பட மூலாதாரம், Dushyant Kumar Thakur / Getty

படக்குறிப்பு, கோப்புப்படம்
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

கொரோனா பரவல் காரணமாக வீட்டுவேலை செய்யும் தொழிலாளர்கள் பலரும் வேலைக்கு செல்லமுடியாததால், அவர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தமிழக அரசு சலுகைகள் அளிக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தனித்திருக்கவேண்டும் என்பதால், பல வீடுகளில், 21 நாட்கள் தடை உத்தரவு இருக்கும் காலம் வரை வீட்டுவேலைக்கு பணியாளர்கள் வரவேண்டாம், என வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால், அவர்களில் பலருக்கும் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது, சிலருக்கு சம்பளமே கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

இது தொடர்பாக தேசிய வீட்டு தொழிலாளர்கள் அமைப்பைச் சேர்ந்த புஷ்பாவிடம் பேசினோம். கிராமம், நகரம் என எல்லா ஊர்களிலும், வீட்டுவேலையில் பல லட்சம் பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்கிறார் அவர். சென்னை மாநகரத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் பெண்கள் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார் புஷ்பா.

''பலரும் சம்பளம் தருவது குறித்து எதுவும் பேசவில்லை. ஒரு மாதத்திற்கு வேலைக்கு வரவேண்டாம் என சொல்லிவிட்டார்கள். கொரோனா அறிவிப்பு வந்ததில் இருந்து எங்களைப் போன்ற தொழிலாளர்கள் பெற்று வந்த சிறிய வருமானத்தை இழந்து தவிக்கின்றனர். சிலர் பாதி சம்பளம் கொடுப்பதாகவும் சொல்கிறார்கள்,''என்கிறார் புஷ்பா.

புஷ்பா

பட மூலாதாரம், PUSHPA

படக்குறிப்பு, புஷ்பா

''வீட்டு வேலைப் பணியாளர்கள் பலரும் சங்கத்தில் சேருவதற்கு யோசிப்பார்கள். சங்கத்தில் சேர்ந்தவர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள சிலர் விரும்புவதில்லை. வீட்டுவேலைப் பணியாளர்கள் இல்லாத இல்லங்கள் மிகவும் குறைவு. ஆனால் எங்களின் பிரச்னையை யாரும் விவாதிப்பதில்லை. எங்கள் சம்பளத்தை இதுபோன்ற சிக்கலான நேரத்தில் குறைப்பது நியாயமா? வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் வாடகை கேட்கக்கூடாது என்கிறார்கள். எங்களுக்கு சம்பளம் குறைக்ககூடாது என அறிவிக்க வேண்டும்,'' என்கிறார் அவர்.

வீட்டு வேலைப் பணியாளர்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு ரூ.75 கூலியாகத் தரவேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை.

ஒரு மணிநேரத்திற்கு ரூ.37.50 என்ற அளவீட்டில் தினக்கூலி நிர்ணயம் செய்துகொள்ளலாம் என ஜூலை 2018ல் அரசு அறிவித்தது.

இருந்தபோதும், தற்போதும்கூட, ஒரு மாதத்திற்கு வெறும் ரூ.1,000 மற்றும் ரூ.2,000 மட்டும் சம்பளமாகப் பெறும் வீட்டுவேலைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்கிறார் மற்றொரு தொழிலாளியான பூங்குழலி

Banner image reading 'more about coronavirus'
Banner

''ஆண்கள் வேலைக்கு செல்லாமல் அல்லது மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களாக இருப்பவர்கள் வீட்டில், பெண்கள் வீட்டு வேலை செய்து பணம் ஈட்டுவார்கள். கொரோனா தாக்கத்தால், மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளத்தில் பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கமுடியும் என ஒரு சில வீடுகளில் சொல்கிறார்கள். வெகு சிலரே, சம்பளத்தை கொடுத்து, 21 நாள் முடிந்தபிறகு வரலாம் என்கிறார்கள். எங்களைப் போன்ற தொழிலாளர்களுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். வருவாய் இழப்பு என்பது எங்களைப் பெரிதும் பாதிக்கும்,''என்கிறார் பூங்குழலி.

சென்னை புறநகர்ப் பகுதியான நாவலூர் பகுதியில் வசிக்கும் சுமார் 400 வீட்டுவேலைத்தொழிலாளர்களில் ஒருவர் பரிமாளா. ''நாவலூரில் இருந்து அரும்பாக்கம், மண்ணிவாக்கம் போன்ற பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நாங்கள் வேலைசெய்கிறோம். கொரோனா வந்த பிறகு, பெரும்பாலானவர்கள் வேலைக்கு செல்லவில்லை. குறைந்தது மூன்று முதல் ஐந்து வீடுகளில் வேலை செய்தால்தான் ரூ.3,000 மாதம் கிடைக்கும் என நிலையில் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இந்த சம்பளமும் கிடைக்காமல் போவதால் மோசமான சூழலை நாங்கள் எதிர்நோக்கியிருக்கிறோம்,''என்கிறார் பரிமளா.

கட்டடத் தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கு சலுகையை அறிவித்துள்ள தமிழக அரசு, தங்களைப் போன்ற வீட்டு வேலைப் பணியாளர்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: