கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு: சென்னை காவல்துறையின் முயற்சி

சென்னை காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

''நீங்க வீட்டுக்கு போகலைனா, கொரோனாவாகிய நான் உங்க வீட்டுக்கு வந்திடுவேன்'' என சாலையில் செல்லும் இளைஞர்கள் மத்தியில் கொரோனா வடிவிலான ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சென்னையை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர்.

சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ரஜீஷ் பாபு கொரோனா விழிப்புணர்வு தகவலை சொல்வதை விட, வித்தியாசமாக புரியவைத்தால், மக்கள் ஊரடங்கு உத்தரவை பின்பற்றுவார்கள் எனக்கருதி கொரோனா வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து பொது இடங்களில் வலம்வருகிறார்.

வில்லிவாக்கம் பகுதியில், இளைஞர்கள் சாலைகளில் சுற்றித்திரிவது, காய்கறி சந்தையில் சமூக விலகலை மக்கள் பின்பற்றாமல் இருப்பதை கண்டபின்னர், விழிப்புணர்வு செய்தியை அளிக்கவேண்டும் என முடிவுசெய்ததாக ரஜீஷ் கூறுகிறார்.

Banner image reading 'more about coronavirus'

'முதியவர்களை கொரோனா அதிகம் தாக்குகிறது என்கிறார்கள். மார்க்கெட் பகுதியில் முதியவர்கள் பலரிடம் கொரோனா பற்றி தெரியுமா, சந்தையில் ஆட்கள் கூட்டமாக நிற்ககூடாது என்று கூறியபோது சிலருக்கு புரியவில்லை. அதேபோல சாலையில் செல்லும் இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது குறைவு. அவர்கள் கவனத்தை நம்மிடம் திருப்பும் வழியில் விழிப்புணர்வு செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஹெல்மெட்டை வடிவமைத்தோம்,''என்கிறார் ஆய்வாளர் ரஜீஷ் பாபு.

தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு தோப்புக்கரணம் போடுவது, கைதட்டுவது, சாலையில் உருளுவது உள்ளிட்ட தண்டனைகளை காவலர்கள் வழங்குவதாக சமூகவலைத்தளங்களில் காணொளிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இளைஞர்கள் மற்றும் பொது மக்களை காவலர்கள் தாக்கக்கூடாது என்றும் கனிவுடன் வீடுகளுக்கு திரும்ப அறிவுறுத்தவேண்டும் என்றும் சென்னை காவல்துறை மூத்த அதிகாரிகள் பலரும் காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை காவல்துறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆய்வாளர் ரஜீஷ் பாபு

விழிப்புணர்வு நிகழ்வை வித்தியாசமாக நடத்துவதற்காக ஆய்வாளர் ரஜீஷ், கொரோனா ஹெல்மெட் அணிந்து சாலைகளில் சென்று கவனத்தை ஈர்க்கிறார். ''சாலைகளில் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ளும் இளைஞர்களை பார்க்கும்போது, அவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அது பரவும் என்ற விழிப்புணர்வை இதன் மூலம் ஏற்படுத்துகிறோம். கொரோனா குறித்த அச்சம் வேண்டாம். ஆனால் விழிப்புணர்வு தேவை என்பதை புரியவைக்கிறோம். ஹெல்மெட் வடிவத்தை பார்த்ததும், நீங்கள் உங்கள் வீட்டுக்கு போகவில்லை என்றால், நான் உங்கள் வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றதும் அவர்களுக்கு நோய் பரவல் குறித்து புரிதல் ஏற்படுகிறது,'' என ரஜீஷ் பாபு பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''நான் என் வீட்டுக்கு செல்லும்போது, குளித்துவிட்டு, தூய்மையான துணிகளை உடுத்திய பின்புதான் வீட்டுக்குள் நுழைகிறேன். இருந்தபோதும் என் குடும்ப உறுப்பினர்களுக்கு பயம் உள்ளது. இதுபோல பல குடும்பங்களிலும், பெற்றோர்கள், குழந்தைகள் கொரோனா பற்றிய பயத்தோடு இருப்பார்கள். ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களிடம் இந்தத் தகவலை கூறி வீட்டுக்கு அனுப்புகிறோம். அவர்கள் தங்கள் அனுபவத்தை மற்றவர்களிடம் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்,'' என்கிறார் அவர்.

கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு

பட மூலாதாரம், Getty Images

கொரோனா விழிப்புணர்வு போலவே, மகளிர் தினத்தில் பெண்கள் எவ்வாறு எளிமையாக காவல்துறையினரை அணுகலாம் என்றும் மேலும், மாநகராட்சி பள்ளியில் குழந்தைகள் மத்தியில், குழந்தைகள் காவலர்களை அணுகுவது எப்படி என தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தியுள்ளதாக ரஜீஷ் பாபு தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: