கொரோனா கொல்வதற்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடும் - இந்திய துயரம் - Coronavirus In India

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், விகாஸ் பாண்டே,
- பதவி, பிபிசி
கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே இருக்கும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தினக்கூலித் தொழிலாளர்களுக்கு அது சாதாரண விஷயமல்ல.
நொய்டாவில் உள்ள லேபர் சவுக் பகுதி, எப்போதும் நூற்றுக்கணக்கான ஆட்கள் கட்டட வேலைக்காக நின்றுகொண்டிருக்கும் ஒரு இடம். நான்கு சாலைகள் சந்திக்கும் டெல்லியின் புறநகர்ப் பகுதியான இது. கட்டட கான்ட்ராக்டர்கள் தொழிலாளர்களைத் தேர்வுசெய்வதற்காக இங்குதான் வருவார்கள்.
ஞாயிற்றுக்கிழமையன்று ஊரடங்கு போடப்பட்டிருந்த வேளையில் நான் அங்கு சென்றபோது அந்தப் பகுதியே அமைதியாக இருந்தது. எதுவும் அசையவில்லை. பரபரப்பாகவே இருக்கும் அப்படி ஒரு பகுதியில், பறவைகளின் சத்தத்தைக் கேட்க முடியுமென யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பிறகு, அங்கு ஒரு மூலையில் சில ஆண்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். சற்று பாதுகாப்பான தூரத்தில் நின்றபடி, "ஊரடங்கை அனுசரிக்கவில்லையா?" என்று கேட்டேன்.
"வேலைக்கு எடுக்க யாரும் வரமாட்டார்கள் என்று தெரிந்தாலும் வந்து பார்ப்போம்" என வந்ததாகச் சொன்னார் ரமேஷ் குமார். இவர் உத்தரப்பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

பட மூலாதாரம், Getty Images
"எனக்கு ஒரு நாளைக்கு 600 ரூபாய் சம்பளம். என்னை நம்பி ஐந்து பேர் இருக்கிறார்கள். இன்னும் சில நாட்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிடும். கொரோனா வைரஸால் ஏற்படும் பாதிப்பு குறித்து தெரிகிறது. ஆனால், என் குழந்தைகள் பசியால் வாடுவதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது" என்கிறார் அவர்.
லட்சக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். இந்தியப் பிரதமர் செவ்வாய்க்கிழமையன்று அறிவித்துள்ள ஊரடங்கின்படி, அடுத்த மூன்று வாரங்களுக்கு வருமானம் ஏதும் இருக்காது. இவர்களில் பல பேரைப் பொறுத்தவரை, அடுத்த சில நாட்களில் உணவுப் பொருட்கள் தீர்ந்துவிடும்.


இந்தியாவில் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் குறைந்தது பத்துப் பேராவது இறந்துவிட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
உத்தரப்பிரதேசம், கேரளா, டெல்லி போன்ற மாநில அரசுகள் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக உதவித் தொகையை அனுப்பப்போவதாகச் சொல்லியிருக்கின்றன. இந்த ஊரடங்கினால் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவப்போவதாக மத்திய அரசும் தெரிவித்திருக்கிறது.
ஆனால், இதில் சில சவால்கள் இருக்கின்றன.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு தரும் புள்ளிவிவரங்களின்படி, தனியார் பாதுகாவலர்கள், சுத்தம் செய்பவர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்பவர்கள் என இந்தியப் பணியாளர்களில் 90 சதவீதம் பேர் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்கள்.

பட மூலாதாரம், Getty Images
இவர்களில் பலருக்கு ஓய்வூதியம், மருத்துவவிடுப்பு, சம்பளத்துடன் கூடிய விடுப்பு, காப்பீடு போன்ற எதுவும் கிடையாது. இவர்களில் பலருக்கு வங்கிக் கணக்குகள் கிடையாது. தங்களது தினசரித் தேவைகளுக்காக பணத்தையே எதிர்நோக்கியிருப்பார்கள்.
இந்தியாவின் பல மாநிலங்களில், வேறு மாநிலங்களில் இருந்துவந்து வேலை பார்ப்பவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். இதுதவிர, தொடர்ந்து வேலைக்காக பல மாநிலங்களுக்கு இடம்மாறிச் செல்பவர்களும் இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ், தற்போதைய பிரச்சனை மிகப் பெரியது என்பதை ஒப்புக்கொள்கிறார். "எந்த அரசாங்கத்தில் இருக்கும் யாரும் இதுபோன்ற மிகப் பெரிய பிரச்சனையை எதிர்கொண்டதில்லை" என்கிறார் அவர்.
"எல்லா அரசுகளுமே மிக வேகமாகப் பணியாற்ற வேண்டும். ஏனென்றால் நிலைமை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கிறது. பெரிய அளவில் சமையலறைகளை அமைக்க வேண்டும். தேவையானவர்களுக்கு உணவுகளை வழங்க வேண்டும். யார் எந்த மாநிலத்திலிருந்து வருகிறார்கள் என்று பார்க்காமல் பணமோ, அரிசியோ, கோதுமையோ வழங்க வேண்டும்." என்கிறார் அவர்.
22 கோடி பேர் வசிக்கும் இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் குறித்து பெரிதும் கவலை தெரிவிக்கிறார் அகிலேஷ் யாதவ்.
"சமூக ரீதியில் கொரோனா பரவுவதைத் தடுக்க மக்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதைத் தடுக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பை அளிப்பது இதில் சிறந்த முன்னெடுப்பாக இருக்கும்" என்கிறார் அவர்.
மற்ற மாநிலங்களில் இருந்து வந்தவர்களை சில பணியாளர்களின் உதவியுடன் கண்காணித்துவருவதாக உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தித்திருக்கிறார். உதவி தேவைப்படுபவர்களுக்கு தனது அரசு உதவிசெய்யுமென்றும் கூறியிருக்கிறார்.
இந்திய ரயில்வே மார்ச் 31ஆம் தேதிவரை எல்லா பயணிகள் ரயில் சேவையையும் நிறுத்துவதாகத் தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மார்ச் 23ஆம் தேதியன்று ரயில்கள் நிறுத்தப்பட்ட நிலையில், அதற்கு சில நாட்கள் முன்பிருந்தே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்த டெல்லி, மும்பை, அகமதாபாத் நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தங்களது மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பிஹார் மாநிலங்களுக்கு திரும்பினார்கள்.
இது சமூக ரீதியில் நோய்ப் பரவலை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தை உருவாக்கியது. அடுத்துவரும் இரண்டு வாரங்கள் இந்தியாவுக்கு மிகச் சவாலானதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். இருந்தபோதும், எல்லோராலும் அவரவர் கிராமங்களுக்குத் திரும்பமுடியவில்லை.
அலஹாபாதில் ரிக்ஷா இழுக்கும் கிஷன்லால், கடந்த நான்கு நாட்களாக தனக்கு வருமானம் ஏதும் இல்லை என்கிறார்.
"என் குடும்பத்திற்கு உணவளிக்க நான் சம்பாதித்தாக வேண்டும். அரசு எங்களுக்குப் பணம் கொடுக்கப்போவதாகச் சொல்கிறார்கள். எப்போது, எவ்வளவு கொடுப்பார்கள் என்பது தெரியவில்லை" என்கிறார் அவர்.
அவருடைய நண்பர் அலி ஹசன் பக்கத்துக் கடை ஒன்றில் சுத்தம் செய்பவராக வேலை பார்க்கிறார். அவரிடம் தற்போது சாப்பாடு வாங்கக்கூட பணம் இல்லை.
"இரண்டு நாட்களுக்கு முன்பாகவே கடைகளை மூடிவிட்டனர். எனக்கு சம்பளம் ஏதும் தரவில்லை. எப்போது கடையைத் திறப்பார்கள் என்பது தெரியவில்லை. எனக்கு மிகப் பயமாக இருக்கிறது. எனக்குக் குடும்பம் இருக்கிறது. எப்படி அவர்களுக்கு சாப்பாடு போடப்போகிறேன்?" என்கிறார் அவர்.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான தெருவோர வியாபாரிகள் இருக்கிறார்கள். தங்களைப் போன்ற ஆட்களை வேலைக்கு அமர்த்தி சிறுசிறு கடைகளை நடத்துகிறார்கள்.
டெல்லியில் தயிரைவைத்து குளிர்பானங்களைத் தயாரித்து விற்றுவந்த முஹம்மது சபீர், வெயில்காலத்தில் வியாபாரம் நன்றாக இருக்குமெனக் கருதி, சமீபத்தில்தான் இரண்டு பேரை வேலைக்கு எடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images
"இப்போது அவர்களுக்கு என்னால் சம்பளம் கொடுக்க முடியாது. என்னிடமே பணம் இல்லை. கிராமத்தில் கூலி வேலைசெய்து, என் குடும்பத்தினர் ஏதோ சிறிய அளவில் சம்பாதித்து வந்தார்கள். ஆனால், இந்த ஆண்டு வீசிய புழுதிப்புயலில் பயிர்கள் சேதமாகிவிட்டன. அதனால் அவர்களும் என் கையை எதிர்பார்த்திருக்கிறார்கள். என்ன செய்வதென்றே தெரியவில்லை. கொரோனா வைரசுக்கு முன்பாக பட்டினி எங்களைக் கொன்றுவிடுமென நினைக்கிறேன்" என்கிறார் அவர்.
நாடு முழுவதும் எல்லா நடமாட்டமும் தடைசெய்யப்பட்டிருப்பதால் சுற்றுலாத் துறையும் அடி வாங்கியுள்ளது. இதனால், அந்தத் துறையை நம்பியிருப்பவர்களும் என்ன செய்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறார்கள்.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் புகைப்படக்காரராக வேலை பார்க்கிறார் தேஜ்பால் காஷ்யப். தான் இதுபோல வியாபாரம் இல்லாமல் இருந்ததே இல்லை என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
"கடந்த இரண்டு வாரங்களில் ஊரடங்கு இல்லாவிட்டாலும்கூட, வியாபாரம் மந்தமாகவே இருந்தது. சுற்றுலாப் பயணிகள் பெரிதாக வரவில்லை. இப்போது நான் என் கிராமத்திற்கும் திரும்பிச் செல்ல முடியாது. வேலையும் கிடையாது. டெல்லியில் மாட்டிக்கொண்டிருக்கிறேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் எனது குடும்பத்தினர் இருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
ஊபர், ஓலா போன்ற வாடகைக் கார் செயலிகளில் இணைந்து பணியாற்றும் ஓட்டுனர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் ஒரு விமான நிறுவனத்திற்காக டாக்ஸி ஓட்டிவருகிறார் ஜோகீந்தர் சவுத்ரி. "தன்னைப் போன்றவர்களுக்கு அரசு ஏதாவது உதவிசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.
"ஊரடங்கின் முக்கியத்துவம் எனக்குப் புரிகிறது. கொரோனா வைரஸ் மிக அபாயாகரமானது. ஆனால், இம்மாதிரி ஊரடங்கு பல வாரங்களுக்குத் தொடர்ந்தால், எனது குடும்பத்தை எப்படிக் காப்பாற்றுவது என்ற கவலையும் இருக்கிறது" என்கிறார் ஜோகீந்தர் சவுத்ரி.
இன்னும் பலருக்கு கொரோனா பற்றி தெரியக்கூட இல்லை. "நான் அலகாபாத் ரயில் நிலையத்தில் ஷூ பாலீஷ் போடுபவனாக வேலை பார்த்து வருகிறேன். இப்போது ஒருவரும் இங்கு வருவதில்லை" என்கிறார் பெயர் தெரிவிக்க விரும்பாத காலணி சுத்தம் செய்யும் தொழிலாளர் ஒருவர்.
ஏன் யாரும் பயணம் செய்ய வருவதில்லை என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை.
"என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. ரயில்வே ஸ்டேஷனுக்கு யாரும் வருவதில்லை. ஊரடங்கு போட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், ஏன் என்று தெரியவில்லை" என்கிறார் அவர்.
அந்தப் பகுதியில் தண்ணீர் பாட்டில்களை விற்கும் வினோத் பிரஜாபதி, குறுக்கிட்டுப் பேச ஆரம்பித்தார்.
"எனக்கு கொரோனா வைரஸ் பற்றி தெரியும். இது ரொம்ப அபாயகரமானது. ஒட்டுமொத்த உலகும் போராடிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்கள் வசதியானவர்கள். அவர்களால் வீட்டிலிருந்தபடி சமாளிக்க முடியும். ஆனால், எங்களைப் போன்றவர்களைப் பொறுத்தவரை பாதுகாப்பிற்கும் பசிக்கும் இடையில் போராடிக்கொண்டிருக்கிறோம். நாங்கள் எதைத் தேர்வுசெய்ய வேண்டும்?" என்று கேட்கிறார் அவர்.
(அலகாபாதிலிருந்து விவேக் சிங் உதவியுடன் எழுதப்பட்டது.)
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












